ஹாலிவுட்டின் ‘சை ஃபை’ ஹீரோ டாம் க்ரூஸின் அடுத்த படமான எட்ஜ் ஆஃப் டுமாரோ, வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கிறது. ‘தி போர்ன் ஐடென்டிட்டி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த டோ லிமேன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
வருங்காலத்தில் பயணம் செய்யும் இப்படத்தின் திரைக்கதை, பூமியின் மீது முடிவற்ற போர் தொடுக்கும் வேற்றுக் கிரக வாசிகளைப் பற்றியது. உலகில் உள்ள எந்த ராணுவத்தாலும் வீழ்த்த முடியாத வேற்றுக் கிரகவாசிகளை மேஜர் வில்லியம் கேஜ் (டாம் க்ரூஸ்) எப்படி வீழ்த்துகிறார் என்பதுதான் படத்தின் க்ளைமேக்ஸ். வேற்றுக் கிரகவாசிகளுடன் ஒவ்வொரு முறையும் போரிட்டு இறந்துபோகும் கேஜ் திரும்பவும் உயிர்பெறுகிறார். அவர் வேற்றுக் கிரகவாசிகளிடம் இருந்து எந்த உத்தியைப் பயன்படுத்திப் பூமியைக் காப்பாற்றுகிறார் என்பதைப் படத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேற்றுக் கிரகவாசிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நடக்கும் பல வித்தியாசமான போர்களை ஏற்கெனவே ஹாலிவுட் ரசிகர்கள் நிறைய பார்த்திருக்கிறார்கள். வழக்கமான கதைதான் என்றாலும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் டாம் க்ரூஸிற்கும் நடக்கும் சண்டைக் காட்சிகள் வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என்று அணல் கிளப்புகிறது படக்குழுவின் பிரச்சாரம். ஹீரோயினாக எமிலி ப்ளன்ட் நடித்திருக்கிறார். ‘ஆல் யு நீட் இஸ் கில்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் பில் பேக்ஸ்டன், ப்ரேன்டன் க்ளீசன், நோவா டெய்லர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
2013-ல் வெளிவந்த ‘ஆப்லிவியன்’ படத்துடன் ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’வை ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ஒப்பிட்டு இருக்கிறது. அமெரிக்காவைத் தவிர்த்துப் பிற இடங்களில் கிடைக்கும் வசூல்தான் இப்படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பது ஹாலிவுட் பாக்ஸ் ஆபீஸின் புதுக் கணக்கு.
இந்தியாவில் ஜூன் 6-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் வார்னர்ஸ் ப்ரதர்ஸ் ஸ்டுடியோ லீவ்ஸ்டனில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் திரைப்படம்.