பன்றிக் காய்ச்சல், சுனாமி எச்சரிக்கை ஆகியவற்றுடன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸுக்கு ஏதாவது தொடர்பும் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா? கிராஃபிக்ஸ் பயன்படாத துறையே இல்லை எனும் அளவுக்கு அதன் காட்சிபூர்வமான தன்மையைப் (visualization) பயன்படுத்திக் கொள்ளும் போக்கு அதிகரித்துவிட்டது. உதாரணத்துக்குச் சில துறைகளில் கிராஃபிக்ஸ் எப்படிப் பயன்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
கணக்கீட்டு உயிரியல் (Computational biology), கணக்கீட்டு இயற்பியல் (Computational physics) ஆகிய இரு பெரும் துறைகளின் கீழ் மருத்துவம், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ ஆய்வுக்கூடம், இயற்பியல் ஆய்வுகள், இயற்கைப் பேரிடர் கணித்தல் என அடுக்கடுக்காகச் செய்யப்படும் அனைத்து வித ஆய்வுகள், கணக்கீடுகள் அனைத்துக்கும் வரைபட ரீதியான முடிவுகளையும் தரவுகளையும் மிகத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுகிறது. இதை இன்ஃபோ கிராஃபிக்ஸ் மற்றும் டேட்டா விஷுவலைஷெசன் என்று அழைக்கிறார்கள்.
தற்போது பன்றிக்காய்ச்சல் வைரஸ் நாட்டை மிரட்டிக்கொண்டிருக்கிறது. காய்ச்சல் கண்டவர் தனக்கு வைரஸ் இருக்கிறதா எனக் கண்டறிய மருத்துவ ஆய்வுக் கூடத்துக்குச் செல்கிறார். அங்கே அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு நுண்ணோக்கி மூலம் பரிசோதிக்கப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பதைக் கண்டறிந்ததும் அதன் எண்ணிக்கை ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் புள்ளியியலும் கிராஃபிக்ஸும் கைகோத்து வேலை செய்யும் மென்பொருள் அழகான வரைபடமாகக் காட்டிவிடும். அவ்வளவு ஏன், ஒருவர் கோமாவில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரது மூளையின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டால் கிராபிக்ஸ் காட்டித்தரும்.
கம்ப்யூட்டர் கிராபிக்ஸுக்கு இயற்பியல் துறையில் இருக்கும் பயன்பாட்டுக்கு எல்லையே இல்லை. உறைய வைக்கும் ஒரு சின்ன உதாரணத்தைப் பார்க்கலாம். சுனாமி வரப்போவதையோ, கடலில் மையம் கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுநிலை நகர்ந்து செல்வதையோ துல்லியமான அசையும் அசையா வரைபடக் காட்சியாக நமக்கு எப்படித் தேவையோ அப்படிக் கொடுத்துவிடும். இயற்பியல், புள்ளியியல், கிராஃபிக்ஸ் சிமுலேஷன் (Computer simulation) ஆகிய மூன்று தொழில்நுட்பங்களும் ஒரு புள்ளியில் இணைந்து துல்லியமாக நமக்குப் ‘படம்’ காட்டிப் பயமுறுத்துவதை, வானிலை ஆய்வு மையங்களுக்குச் சென்றால் அங்குள்ள கணனித் திரையில் நீங்கள் பார்க்க முடியும்.
இவை தவிர கிராபிஃபிக்ஸின் முக்கியத் துறைகளில் ஒன்றாக இருக்கும் கம்ப்யூட்டர் எய்டெட் டிசைன் (CAD) மூலம் இந்த உலகில் ஏற்கனவே இருக்கும் அசையும் அசையாப் பொருட்களையும், புதியதாக நீங்கள் உருவாக்க நினைக்கும் பொருட்கள், எந்திரங்கள் என எதுவொன்றையும் நுட்பமாகவும் குறுக்கு வெட்டாகவும் பகுதி பகுதியாகவும் வரைய முடியும்.
கம்ப்யூட்டரைக் கொண்டு டிஜிட்டல் ஓவியங்களை வரையும் துறையில் கற்பனையே செய்து பார்க்க முடியாத சாத்தியங்கள் உருவாக்கியிருக்கின்றன. அதேபோல பத்திரிகை துறை உள்ளிட்ட பலவித ஊடகத் துறைகளில் அச்சிட்டும் டிஜிட்டலாகவும் வெளியிட கிராஃபிக் டிசைன் துறை மிகப் பெரிய கடலாக இருக்கிறது. முக்கியமாக இந்தப் பிரிவின் கீழ் வெப் டிசைன் இன்று உலகின் மிகப் பெரிய சந்தையாக விரிந்திருக்கிறது.
திரைப்படத் துறையில் விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) என்ற பெயரில் செய்யப்படும் கிராஃபிக்ஸ் ஜாலங்களை அலசும் முன் இன்று ‘தோற்ற மெய்மை’ (Virtual reality) துறையில் நம்மால் நம்ப முடியாத பல சாத்தியங்களை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உருவாக்கி விட்டதையும் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். வெர்ச்சுவல் ரியாலிட்டி என்பது கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை மெய்யுருவம் போல் காட்டுவதாகும். இது கணினி விளையாட்டுகளிலும், ராணுவம், வானியல் போன்ற துறைகளிலும் பயன்படுத்தப்பட்டுவரும் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம். திரைப்படங்களில் இதை அதிகமாகப் பயன்படுத்தும் அதேநேரம் கணினி விளையாட்டுகளில் இது உண்மையான உலகம் என்பதுபோல் குழந்தைகளை நம்ப வைத்து விடுகிறது.
இனி திரைப்படத் துறையில் எத்தனை விதமான விஷுவல் எஃபெக்ட்ஸ் (Visual and special effects techniques) உத்திகள் கையாளப்படுகின்றன, தமிழ்த் திரைப்படங்களில் எவ்வாறு அவை பயன்படுத்தப்படுகின்றன என்பதை உதாரணங்களுடன் பார்க்கலாம். முதலில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்த ‘மாற்றான்’ படத்தின் இரட்டை வேட ரகசியங்களைப் பார்ப்போம்.