காதலித்த நபரையே திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு எல்லாக் காதலர்களுக்கும் கிடைத்துவிடாது. அப்படிப்பட்ட வாய்ப்பு கிட்டாதவர்கள், ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நேர்கிறது’ என உள்ளம் நொந்து வெளிப்படுத்தும் கழிவிரக்க உணர்வை அழகான கவி வரிகளில் எடுத்துக்காட்டும் பாடல்கள் அமரத்துவத் தன்மை வாய்ந்தவையாக நிலைபெற்றுவிடும். காதலைப் போலவே காதல் தோல்வியும் நிரந்தரமானதுதானே.
பியாசா (தாகம் / வேட்கை) என்னும் படம் 1957-ல் வெளிவந்தது. படல்களுக்காகவே மிகவும் பேசப்பட்ட படம் இது. இந்தப் படத்துக்காகக் காதல் தோல்வியைக் கவிதையாக வடித்தவர் சாஹிர் லுதியான்வி. தோல்வியின் வலியை வெளிப்படுத்திய குரல் ஹேமந்த்குமாருடையது.
ஆழமான அர்த்தங்களை உடைய இந்தப் பாட்டின் ஒவ்வொரு வரியையும் சோகமும் கம்பீரமும் கலந்த தன் வசீகரக் குரலால் உணர்வுபூர்வமாகப் பாடினார் ஹேமந்த்குமார். இந்த வேதனைக்கு இசை வடிவம் தந்தவர் எஸ்.டி. பர்மன்.
பாடல்:
ஜானே வோ கைஸே லோக் தே ஜின்கீ
பியார் கோ பியார் மிலா
ஹம்னே தோ ஜப் கலியா மாங்கீ
கான்டோங்கா ஹார் மிலா
குஷியோ கா மஞ்சில் தூண்டீத் தோ
கம் கீ கர் மிலீ
.. ..
.. .. ..
பாடலின் பொருள்:
எப்படி இதை அறிவேன் இப்படியும் இருந்தனர் (சிலர்)
எவரின் காதலை எதிர்கொண்டது (ஒரு) காதல்
நான் பூக்களை நாடிச் செல்லும்போது
எனக்கு முட்களின் மாலைதான் கிட்டுகிறது.
இன்பத்தில் இலக்கைத் தேடினால்
துன்பத்தின் இல்லம் கிட்டியது
விருப்பத்தின் கீதம் விரும்பினால்
பெருமூச்சின் குளிர்ச்சி கிடைத்தது.
மனதின் சுமையை இரட்டிப்பாக்கியது
எனக்குக் கிடைத்த துக்கங்கள்
விலகிவிட்டது விலகிவிட்டது ஓரிரு சமயங்களில்
உடன் இருந்த ஒவ்வொரு துணையும்
எவருக்கு அவகாசம் இருக்கிறது
இந்தப் பைத்தியத்தின் பின்னால் போவதற்கு
என் நிழலே அடிக்கடி என்னிடம்
அன்பில்லாமல் ஆகியது.
இதைத்தான் வாழ்க்கை என எவரும் கூறினால்
இப்படியே போகட்டும் என் வாழ்க்கை
சலித்துக்கொள்ள மாட்டேன்
கண்ணீரை (தண்ணீராக) பருகிக்கொள்கிறேன்
துயரத்தைக் கண்டு இனி துணுக்குறுவது ஏன்?
அதைத்தான் அயராமால் ஆயிரம் முறை கண்டேனே.
காதல் தோல்வியின் உச்சகட்ட புலம்பலாக அமைந்த இந்தக் கவித்துவ வரிகள்போல் அல்லாது, அந்தக் காதல் தோல்வி உணர்வைத் தத்துவார்த்தமாகவும் வழக்கில் உள்ள சொலவடைகளுடன் இணைத்தும் வாலி எடுத்துக்காட்டும் இந்தத் தமிழ்ப் பாடலைப் பாருங்கள்.
படம்: அபூர்வ சகோதரர்கள்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா.
பாடல்:
உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்னை நினைச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலர் வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்..
ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்
கொட்டும் மழைக் காலம் உப்பு விற்கப் போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்
தப்புக் கணக்கைப் போட்டுத் தவித்தேன்
தங்கமே ஞானத் தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞானத் தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்… உன்னை நெனச்சேன்..
கண்ணிரெண்டில் நான்தான் காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்துப் பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாலும்
நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம்
தங்கமே ஞானத் தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்
தங்கமே ஞானத் தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்… உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்