எம்.ஜி.ஆரின் 100-வது படமான ஒளி விளக்கு, மாபெரும் வெற்றிப் படங்களான எங்க வீட்டுப் பிள்ளை, குடியிருந்த கோயில், உரிமைக் குரல், பல்லாண்டு வாழ்க எனப் பல படங்களுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பில்லா, தில்லு முல்லு, நான் சிகப்பு மனிதன், படிக்காதவன், மன்னன், அண்ணாமலை, பாட்ஷா, முத்து, சந்திரமுகி என பல வெற்றிப் படங்களுக்கும், விஜயின் பெரும் வசூல் படங்களான கில்லி, போக்கிரி, காவலன், நண்பன் போன்ற பல படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
இவை அனைத்தும் மறுஆக்கப் (ரீமேக்) படங்களே! நடிகர், தயாரிப்பாளர் கே. பாலாஜியின் பல வெற்றிப் படங்கள் (ராஜா, நீதி, தியாகம், தீ, விதி, வாழ்வே மாயம், சவால் என பல) மறுஆக்கப் படங்களே!
1960 வரை வெற்றிகரமான நாடகங்கள், உடனடியாக, அப்படியே திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றி கண்டன. அத்தகைய நாடகங்கள், திரைப்பட வெற்றிக்கு உத்தரவாதம் தந்ததால், தயாரிப்பாளர்கள் அப்போது நல்ல நாடகங்களை தேடிக்கொண்டிருந்தார்கள். 1970-முதல் இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி, வேற்று மொழிப் படத்தை, மறு ஆக்கம் செய்து, அப்படியே எடுக்கும் நடைமுறை ஏற்பட்டு, இன்றும் அது தொடர்கிறது. நாடகங்களானாலும், வேற்று மொழிப் படங்களானாலும், நல்ல, புதுமையான கதையோடு இருந்தால், அவைகளைத் திரைப்படமாக்கும் எண்ணம் ஏற்பட்டது. இன்றும் அதிக அளவில் மறுஆக்கப் படங்கள் தமிழில் செய்யப்பட்டுவருகின்றன. அது தொடர்வதற்குக் காரணங்கள் என்ன?
மறுஆக்கப் படங்கள் குறைந்த பட்ச வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளவை. வேற்று மொழியில் வெற்றியடைந்த படங்களை ரீமேக் செய்தால் வெற்றி எளிதானது என்ற எண்ணம் பரவலாகவே உள்ளது.
வெளியான ஒரு திரைப்படத்தில் (வெற்றி பெற்ற படமானாலும்) உள்ள குறைகள் நமக்கு எளிதாகத் தெரியும். அதை நீக்கி விட்டு மறுஆக்கம் செய்து எடுத்தால், வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.
ஒரு அசல் படத்தை விட, மறுஆக்கப் படத்தைத் தயாரிக்க முயலுவது கொஞ்சம் எளிதானது. நடிகர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஒப்புக்கொள்ளவைப்பது ஒப்பீட்டளவில் எளிது. படத்தையும் வரையறுக்கப்பட்ட பட்ஜெட்டுக்குள் எடுக்க முடியும்.
இத்தனை சரியான காரணங்கள் இருந்தாலும் 2010வரை கணிசமான வெற்றியை பெற்று வந்த மறுஆக்கப் படங்கள், கடந்த மூன்று வருடங்களில், குறைந்த அளவே வெற்றி கண்டுள்ளன. நண்பன், சென்னையில் ஒரு நாள் போன்ற சில படங்களைத் தவிர, மறுஆக்கம் செய்யப்பட்ட பல படங்கள் சமீபத்தில் வெற்றியை எட்டவில்லை. இதற்கு முக்கியக் காரணங்களாக நான் கருதுவது:
யூட்யூப் மற்றும் இணைய தளங்கள் மூலம் படம் பார்க்கும் வாய்ப்பு இல்லாதவரை, வேற்று மொழியின் வெற்றிப் படங்களைத் திரையரங்குகளில் அல்லது குறுந்தகடு (டிவிடி) தவிர வேறு வகையில் பார்க்க இயலாது. எனவே அத்தகைய படங்களை நாம் மாநிலத்தில் பார்த்தவர்கள் குறைந்த நபர்களே. ஆனால் இப்போது நிலைமை வேறு. எந்த மொழியில் இருந்தாலும், ஒரு வெற்றி பெற்ற, மிகவும் பேசப்படும் படத்தை உடனே இணைய தளங்களில் பார்த்துவிட முடியும். அத்தகைய படங்களை மறுஆக்கம் செய்யும் எண்ணம் உள்ளது என தெரிந்தவுடன், அப்படத்தில் என்ன உள்ளது என்ற ஆவல் அதிகரித்து, சுலபமாக அப்படத்தை அநேகம் பேர் இணைய தளங்கள் மூலம் பார்த்து விடுகிறார்கள்.
நேரடிப் படத்தைப் பார்க்க வரும் பார்வையாளர்கள், படம் நன்றாக உள்ளதா என்பதை விமர்சனம் செய்ய ஒரு கத்தியை மட்டும் எடுத்து வருவார்கள். படம் நன்றாக இருந்தால், அந்தக் கத்தியை வைத்துவிட்டுப் பாராட்டுவார்கள். ஆனால் அனைவராலும் பேசப்பட்ட ஒரு வேற்று மொழிப் படத்தின் (முடிந்தால் ஒரிஜினல் படத்தைப் பார்த்துவிட்டு) மறுஆக்கப் படத்தைப் பார்க்க வரும் பார்வையாளர்கள், ஒப்பிட்டுப் பார்க்க இரண்டு கத்திகளுடன் வருவார்கள்: 1) ஒரிஜினல் படத்தில் இருந்த நல்ல விஷயங்கள் சரியாக கையாளப்பட்டு மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளதா 2) நம் கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரி படம் சிறப்பாக வந்துள்ளதா. ஒரிஜினல் படத்தைப் பார்க்காதவர்களும், அப்படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க வருகிறார்கள். இந்த எதிர்பார்ப்புகளையும், வேற்று மொழிப் படத்தை பார்த்தவர்கள் கொண்டு வரும் இரண்டு கத்திகளுக்கும் ஒரு மறுஆக்கப் படத்தை எடுத்த இயக்குனர் பதில் சொல்ல வேண்டும். ஒரு நேரடி, ஒரிஜினல் கதையைத் தேர்வு செய்து செய்யும் படத்தில் இத்தகைய ஒப்பீடுகள் இல்லை. கதை நன்றாக இருக்கும் பட்சத்தில், படம் பாராட்டப்படுகிறது.
இத்தனை சவால்களை கொண்ட மறுஆக்கப் படங்களில் எந்த மாதிரியான படங்கள் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது? அடுத்த வாரம் பார்ப்போம்
தொடர்புக்கு: (dhananjayang@gmail.com)