இந்து டாக்கீஸ்

இருவர் மீதும் குற்றமில்லை

எஸ்.எஸ்.வாசன்

அன்றாட வழக்கில் அடிக்கடி கேட்கும் சில பதங்கள் ஏனோ திரைப்பாடல்களில் இடம் பெறுவதில்லை. திரைத்துறை உளவியலின் கீழ் ஆய்வு செய்யப்பட வேண்டிய இந்த அம்சத்தின் முக்கிய எடுத்துக்காட்டாக ‘விதி’என்ற சொல் விளங்குகிறது. தம்மை மீறி நடக்கும் செயல்களை, விதி என்று சொல்லாமல், காலத்தின் கோலம் என்றே கூறும் தமிழ்-இந்திப் பாடல்களைப் பார்ப்போம்.

இங்கே நாம் பார்க்கவிருக்கும் இந்திப் பாடலும் அதன் காட்சியாக்கமும் படம் வெளிவந்து பல வருடங்களுக்குப் பிறகே புகழ் பெற்றது. காலப்போக்கில் அமரத்துவம் பெற்றுவிட்ட அந்தப் பாடல்:

படம். காகஜ் கீ ஃபூல் (காகிதப்பூ) 1959.
பாடலாசிரியர். கையிஃபி ஆஸ்மி
பாடியவர். கீதா தத்
இசை. எஸ்.டி. பர்மன்.
நடிப்பு குரு தத் - வஹீதா ரஹ்மான்.

பாடல்

வக்த்னே கியா க்யா ஹஸ்ஸி சித்தம்

தும் ரஹே நா தும் ஹம் ரஹே நா ஹம்

வக்த்னே கியா க்யா

பேக்கரார் தில் இஸ் சஜா மிலே

ஜிஸ் சஜா கே ஹம் கபீ ஜுதா நஹீன் தே

பொருள்:

காலம் செய்துவிட்ட(து) என்ன அழகான முடிவு

நீ நீயாக இல்லை நான் நானாக இல்லை.

காலம் செய்துவிட்ட

அமைதியின்றி அலைபாயுதே உள்ளம்

அடைந்ததற்காக இந்த தண்டனை

எப்பொழுதும் நாம் பிரியவில்லையே

இந்தத் தண்டனையைப் பெறுவதற்கு

நீயும் மறைந்தாய் நானும் மறைந்தேன்

ஒரு(ரே) பாதையில் இரண்டு அடி

வைப்பதற்குள்

போவது எங்கே ஒன்றும் புரியவில்லை

புறப்பட்டுவிட்டோம் ஆனால் பாதை இல்லை

தேடுகிறோம் இலக்கை அறியாமல்

முகவரி உருவாகிறது

உள்ளத்தில் உந்தும் கனவுகள்.

தன் காதலுக்கு எதிராகச் சதி செய்த ‘விதி’யை இந்திப் பாடலின் அதே உணர்வுடன் நாயகன் வெளிப்படுத்தும் அமரத்துவ தமிழ்ப் பாடலைப் பார்ப்போம்.

படம்: குலமகள் ராதை, 1963
பாடலாசிரியர்: கண்ணதாசன்.
இசை: கே.வி. மகாதேவன்
பாடியவர்: டி.எம்.சௌந்தர்ராஜன்
நடிப்பு: சிவாஜி கணேசன், சரோஜா தேவி, தேவிகா


பாடல்

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

என்னைச் சொல்லிக் குற்றமில்லை

காலம் செய்த கோலமடி

கடவுள் செய்த குற்றமடி

மயங்க வைத்த கன்னியர்க்கு

மணம் முடிக்க இதயமில்லை

நினைத்து வைத்த கடவுளுக்கு

முடித்து வைக்க நேரமில்லை

(உன்னைச் சொல்லி)

உனக்கெனவா நான் பிறந்தேன்

எனக்கெனவா நீ பிறந்தாய்

கணக்கினிலே தவறு செய்த

கடவுள் செய்த குற்றமடி

(உன்னைச் சொல்லி)

ஒரு மனதை மயங்க விட்டான்

ஒரு மனதைத் தவிக்க விட்டான்

இருவர் மீதும் குற்றமில்லை

இறைவன் செய்த குற்றமடி

(உன்னைச் சொல்லி)

படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT