இந்து டாக்கீஸ்

பாடம் நடத்தாத படங்கள்!

பா.அசோக்

சென்னை லயோலா கல்லூரி தொழிற் கல்விப் பிரிவு முதல் முறையாக மூன்று நாள் திரைப்பட விழாவை சென்னையில் நடத்தியது. மாணவர்களையும் தாண்டி திரைப் பிரியர்களையும் ஈர்த்த இந்த விழாவில் முழுவதும் சமீபத்தில் கவனம் பெற்ற இந்திய, சர்வதேசத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. துணை முதல்வர் பேராசிரியர் ராமமூர்த்தி குத்துவிளக்கு ஏற்ற, பட விழாவை நடிகர் சாரு ஹாசன் தொடங்கி வைத்துப் பேசினார்,

‘படைப்பாற்றலும் சமூக அக்கறையும் இணையும்போது ஒரு நல்ல படைப்பு கிடைக்கும். அதுபோன்ற நல்ல சூழல் இந்திய சினிமாவில் தற்போது நிலவுகிறது. எனவே, திரைக்கு வர விரும்பும் மாணவர்கள் சிறந்த படைப்புகளைத் தர உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்” என அழைத்தார். விழாவுக்குத் தலைமை வகித்த கல்லூரியின் முதல்வர் ஜி.ஜோசப் அந்தோணி சாமி, “கலை மக்களுக்குப் பயன்பட வேண்டும்” என்று சுட்டிக் காட்டினார்.

முதல்நாள் திரையிடலில் இயக்குநர் வசந்த் சாயின் ‘விசாரணைக் கமிஷன்’ குறும்படம் பார்வையாளர்களைக் கவர்ந்தது. ஒரு சாமானியனின் வாழ்க்கையை அழித்தொழிக்கும் அதிகார வர்க்கத்தின் வலைப்பின்னலையும் விசாரணைக் கமிஷன்களால் ஒரு போதும் நியாயம் நிலைநாட்டப்படுவதில்லை என்ற உண்மையையும் உரக்கச் சொன்னது இப்படம்.

அடுத்து திரையிடப்பட்ட ‘காய் போ சே’ ஆழமாகச் சமூகத்தைப் பிரதிபலித்த காட்சிகளைக் கொண்டிருந்தது. மூன்று நண்பர்களின் தூய்மையான நட்பு எவ்வாறு அரசியல், காதல் மற்றும் மதம் ஆகியவற்றால் சிதைக்கப்படுகிறது என்பதை அபிஷேக் கபூர் அற்புதமாகக் காட்டியிருக்கும் படம் இது.

இந்தப் படக் காட்சி முடிந்ததும் மாணவர்களிடம் கலந்துரையாடினார் இயக்குநர் வசந்தபாலன். அப்போது அவர் வணிக சினிமா மீது வருத்தம் தொனிக்கப் பேசினார்.

‘பெலின் எஸ்மர்’ எழுதி இயக்கிய ‘வாட்ச் டவர்’ அடுத்துத் திரையிடப்பட்டது. மனித உறவுகளால் சிதைக்கப்படும் ஒரு பெண் உறவுகளே வேண்டாம் என வெறுக்க, உறவுகளே உலகம் என ஏங்கித் தவிக்கும் ஒருவனை எதிர்கொள்கிறாள். உறவுகளற்ற வாழ்க்கை சூன்யம் என்பதை அழுத்தமாக உணர்த்தியது ‘வாட்ச் டவர்’.

இந்தத் திரையிடலுக்குப் பின் நடந்த கலந்துரையாடலில் எழுத்தாளர் எஸ்.ராம கிருஷ்ணன் பங்கேற்றார்.

அடுத்து பார்வையாளர் களை ஈர்த்தது அனிமேஷன் திரைப்படமான ‘பிரின்ஸஸ் மொனோனோகே’. மனிதனின் வசதிக்காகச் சுரண்டப்பட்ட இயற்கையை இனியாவது காப்பாற்ற வேண்டும் என்ற அறிவுரையை அழுத்தமாகக் கூறும் படம். உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய அனிமேஷன் பட இயக்குநர் ஹயாவோ மியாஸாகியின் படைப்பு.

‘மனிதன் தனது வசதிக்காக எதையும் செய்வான். கடவுளே ஆனாலும் கொல்லத் துணிவான். இதை உறக்கச் சொல்கிறது மொனோனோகே. தங்களின் இடத்தைப் பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொரு மனிதரும் நடத்தும் போராட்டத்தை அனிமேஷன் கதை மூலம் சொல்லியிருக்கிறார் ஹயாவோ மியாஸாகி.

மேலும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதர்கள் இயற்கைக்கு எதிரி ஆகாமல் இரண்டும் இணைந்த வாழ்வை வாழ வேண்டும் என்று பிரசாரத் தொனி இல்லாமல் சொல்கிறது இந்தப் படைப்பு.

படங்களில் வரும் காட்சிகள் உயிருள்ள ஓவியங்களாய் விரிகின்றன. ஷானை அஷ்டகா காப்பாற்றும் காட்சி, அவனது குதிரைப் பயணம், மெல்லிய மழைத்தூறல் எனக் காட்சிகள் அத்தனையிலும் கலை நேர்த்தி நம்மைப் படத்துடன் கட்டிப்போடுகிறது.

லயோலா கல்லூரி தொழிற்கல்விப் பிரிவின் (LIVE) சார்பில் நடத்தப்பட்ட இந்தத் திரைப்பட விழாவில் பேசிய அப்பிரிவின் இயக்குநர் அருண் கண்ணன். “இந்தத் திரையிடலைத் திறந்த வெளிக்குக் கொண்டுசெல்லும் வகையில் எங்கள் எதிர்கால முயற்சி இருக்கும்” என்றார்.

திரையிட்ட எந்தப் படமும் நமக்கு நேரடியாகப் பாடம் நடத்தவில்லை என்ற அடிப்படையில் அவை படைப்புகளாக மின்னின.

SCROLL FOR NEXT