இந்து டாக்கீஸ்

மேடைப் பேச்சு.. வினையா போச்சு!: இயக்குநரின் குரல்

ஆர்.சி.ஜெயந்தன்

கோலிசோடா படத்தின் வெற்றி அந்தப் படத்தின் இளம் நடிகர்கள் குழுவை ‘வஜ்ரம்’ படத்தில் மீண்டும் இணைய வைத்திருக்கிறது.

ரமேஷ் செல்வன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்காக அஸ்ஸாம் மாநிலத்தின் உல்பா காடுகளில் படப்பிடிப்பு நடத்தித் திரும்பியிருந்தார் இயக்குநர். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

ரமேஷ் செல்வன்

ஹாலிவுட்டில் படப்பிடிப்பு நடத்திய முதல் தென்னிந்திய இயக்குநர் என்ற குறிப்பு உங்களைப் பற்றி கிடைத்தது. அது உண்மைதானா?

தன்னடக்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன். விஜயகாந்தின் 125வது படம். அது எனக்கு முதல் படம். சரியாக 15 வருடங்களுக்கு முன் லாஸ் ஏஞ்சல்ஸில் ’உளவுத்துறை’ படத்துக்காகத் தண்ணீருக்கு அடியில் எடுக்கப்பட்ட காட்சிகளைப் படமாக்கினோம். அதை மறக்க முடியாது.

நவீன யுகத்தின் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பியர்ஸ் புராஸ்னன் நடித்த ‘டுமாரோ நெவர் டைஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ராபர்ட் எல்விட்தான் இந்தக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்தார். 60 பேர் கொண்ட தொழிநுட்பக் குழுவை ஹாலிவுட்டில் இயக்கினேன். இன்று பட்ஜெட் மட்டும்தான் நமக்கும் அவர்களுக்குமான இடைவெளி. தொழில்நுட்பம் அல்ல.

பசங்க, கோலிசோடா படங்களின் மூலம் கவனம் பெற்ற சிறுவர்களை அப்படியே மீண்டும் நடிக்க வைக்க என்ன காரணம்?

கதைதான் காரணம். நம் கண் முன்னால் தெரியும் கல்விப் பிரச்சினைகள் சில இருக்கின்றன. ஆனால் இன்னும் பல ஊர்களில் கல்விக் கூடங்களே இல்லை என்ற நிலை என்பது நம்மில் பலருக்கு அதிர்ச்சி அளிப்பதாக இல்லை. கடந்த ஆண்டு ‘தலைவன்’ என்றொரு படம் இயக்கினேன்.

இந்தப் படத்துக்காக நீலகிரியில் மாவட்டத்தில் உள்ள கோத்தகிரிக்குச் சென்றோம். அங்கே காட்சிகளில் வந்துபோகும் துணை நடிகர்களுக்காக உள்ளூர் ஆட்களைத் தேடியபோது 15 முதல் 18 வயதுக்கு உட்பட இளைஞர்களாக ஒரு ஐம்பது பேரைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.

எனக்குப் பகீரென்று இருந்தது. “உங்களுக்குப் பள்ளி விடுமுறையா? ” என்று கேட்டபோது” பள்ளிக்கூடம் இருந்தால்தானே விடுமுறை விட” என்றார்கள். அப்போதுதான் அவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு நெடுந்தூரம் செல்லவேண்டும் என்பது தெரிந்தது.

ஏன் அங்கே போய்ப் படிப்பைத் தொடரவில்லை என்று கேட்டபோது, அவர்கள் குறிப்பிட்ட அதிர்ச்சிகரமான காரணங்கள்தான் இந்தக் கதையை நான் எழுதக் காரணம். இந்தக் கதையில் பிரச்சினையோடு நேரடியாகத் தொடர்புடைய வளரிளம் பருவத்தினர் நடித்தால் மட்டுமே இது புத்தி புகட்டும் படமாகப் பார்வையாளர்களுக்குத் தெரியாது என்று பசங்க, கோலிசோடா புகழ் நடிகர்களைப் பிடித்தேன்.

அவர்களோ படுதெளிவு. கதை பிடித்தால் மட்டுமே நடிப்போம் என்று கறாராகக் கூட்டணி அமைத்துக் கதையைக் கேட்டு ஓகே பண்ணினார்கள்.

வஜ்ரம் என்ற தலைப்பு எதற்காக?

வஜ்ரம் என்பது தமிழர்கள் காலம் காலமாகப் பயன்படுத்திவரும் பசை. இதில் நேரடியாகப் பாதிக்கப்படும் இந்த மாணவர்கள் வஜ்ரம் மாதிரித் தங்கள் சக்தியை ஒன்றாக்கி யாராலும் பிரிக்க முடியாதவர்களாக மாறுகிறார்கள்.

அவர்கள் ஒன்றிணைந்ததால் அவர்களுக்கு இருக்கும் சக்தி வலிமை பெறுகிறது. அந்த வலிமையை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் எப்படிச் செய்கிறார்கள் என்பதுதான் கதை.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கோலிசோடா போலவே இவர்களை ஹீரோயிசம் செய்ய வைத்திருப்பீர்கள்போல் தெரிகிறதே?

இல்லவே இல்லை. ஆனால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள் சிறார்களைத் திருந்தவிடுவதில்லை என்ற கசப்பான உண்மையை இந்தப் படம் உடைத்துக் காட்டும். வன்முறையைக் கையிலெடுக்காமல் இந்தச் சிறார்கள் எப்படிப் பிரச்சினையைப் புத்திசாலித்தனமாகக் கையாள்கிறார்கள் என்பதைப் பொழுதுபோக்காகச் சொல்லியிருக்கிறேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக உடுமலைப்பேட்டை சென்றிருந்தபோது, உங்கள் குழுவில் இருந்த மயில்சாமி குரங்குகளுக்கு மதுவை அருந்தக் கொடுத்தார் என்ற சர்ச்சை பரபரக்கிறதே?

வஜ்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது பேச்சில் ஒரு நகைச்சுவை இருக்கட்டும் என்று விளையாட்டாகப் பேசப்போய் அதுவே அவருக்கு வினையாகப் போய்விட்டது. உண்மையில் படப்பிடிப்பில் குரங்குகளுக்கு வேகவைத்த காய்கறிகளை வரவழைத்துக் கொடுத்தார் மயில்சாமி. அவற்றுடன் தினமும் அன்பு பாராட்டினார்.

மிருகப் பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் அவரை விசாரித்தபோது உண்மையை விளக்கியதோடு மட்டுமல்லாமல், மேடைக்காகப் பேசியது தவறான வழிகாட்டலாக அமைந்து விடக்கூடாது என்பதால் மனமார மன்னிப்பும் கேட்டுவிட்டார்.

இன்று அருண் விஜய் முன்னணி ஆக்‌ஷன் நாயனாக உயர்ந்திருக்கிறார். அவரை வைத்து நீங்கள் இயக்கிய ‘ஜனனம்’ படம் அதற்கு முதல்படியாக அமைந்தது. அவருடன் நட்பு தொடர்கிறதா?

கண்டிப்பாக. ஆறு மாதங்களுக்கு முன்பு என்னை அழைத்து அவரே ஒரு பட வாய்ப்பை அளித்தார். தனிப்பட்ட முறையில் நெருக்கமான நண்பர். விரைவில் அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவேன்.

SCROLL FOR NEXT