இந்து டாக்கீஸ்

மொழி பிரிக்காத உணர்வு 30: இமயத்தைத் தலைகுனிய வைத்த புன்னகை!

எஸ்.எஸ்.வாசன்

இந்த மாமனிதரைப் பற்றிக் குறிப்பிடாமல் இந்திய சுதந்திர வரலாற்றைப் பேச முடியாது என்றபடி இன்றும் ஒரு பெரும் உந்துசக்தியாக நம் இதயங்களில் உறைந்திருப்பவர் மகாத்மா காந்தியடிகள்.

காந்தி தொடர்புடைய பல படிமங்கள் திரையில் காட்சியாக்கப்பட்டிருந்தாலும் அவரின் முழு ஆளுமைகளை எடுத்துக்காட்டும் திரைப் பாடல்கள் மிகக் குறைவே. இப்படிப்பட்ட அருமையான, அரிதான தமிழ், இந்திப் பாடல்களைப் பார்ப்போம்.

வழக்கப்படி முதலில் இந்திப் பாட்டு.

படம் ஜாக்ரத்தி (விழிப்புணர்வு)

பாடியவர் . ஆஷா போன்ஸ்லே

இசையமைப்பாளர். ஹேமந்த் குமார்.

வெளியான ஆண்டு. 1954.

பாடலாசிரியர் கவி பிரதீப்

பாடல்:

தே தீ ஹமே ஆஜாதி பினா கட்க் பினா டால்

சாபர்மதி கீ சந்த் துனே கர் தியா கமால்

ஆந்திமேபீ ஜல்த்தே ரஹே காந்தி தேரிமஹால்

சாபர்மதி கீ சந்த் தூனே கர் தியா கமால்

தர்த்தி பே லடீ தூனே அஜப் டாப் கீ லடாயீ

வியக்க தக்க விசேஷமான கவியழகு கொண்ட இப்பாடலின் பொருள்:

அளித்தாய் எங்களுக்கு விடுதலை

ஆயுதமும் (வாள்) கேடயமும் இன்றி

சபர்மதியின் சாதுவே நீ சாதித்தாய் அற்புதம்

சூறாவளியிலும் சுடர்விடும் காந்தி உன் ஜோதி

சபர்மதியின் சாதுவே நீ சாதித்தாய் அற்புதம்

(இந்த) மண்ணில் உன் போராட்டம் அலாதியானது

அவதூறின் கறை இல்லை

துப்பாக்கி தூக்கவில்லை

எதிரியின் கோட்டைக்குள் ஏறாமலேயே

ஆஹா எளியவனே நீ நடத்திய லீலை

ஒரு நொடியில் எதிரியை ஓட வைத்தாய்

சதுரங்கம் (பாய்) விரித்து இங்கு அமர்ந்திருந்த

ஆங்கிலேய உலகை விரட்டுவது அசாத்தியம்

போராட்டம் மிகக் கடினமானது

எதிரி (எளிதில் வெட்ட முடியாத) அடிமரம்

ஆனால் நீயோ அனுபவமிக்க வல்லவன்

அடித்தாய் ஓர் பொறி சூழ்ச்சி தலைகீழ் ஆனது

உன் சீட்டி ஒலி (அழைப்பு) எழுப்பப்படும்பொழுதெல்லாம்

உயிர் பெற்றது வாழ்க்கை

உடன் நடந்தனர் தொழிலாளர்கள்

உடன் நடந்தனர் விவசாயிகள்

இந்து முஸ்லிம் சீக்கியர் பத்தான்

உன் காலடி தொடர்ந்தனர் கோடி கோடி

ஜவஹர்லால் பூக்கள் (என்ற செல்வத்தை)

துறந்து புகுந்தார் உன்னிடம்

நீ மனதில் (அணிவது) அஹிம்சையின் குணம்

உடலில் இருந்தது வெறும் கோவணம்

லட்சக் கணக்கான மக்களின் மனதில்

ஊறத் தொடங்கியது உண்மையின் ஊற்று

பார்ப்பதற்கு உன் புன்னகை சிறியது

ஆனால் அது இமயத்தையே குனியவைத்தது

உலகத்தில் நீ ஒப்பற்றவன், நிகரற்றவன்

காயங்களிலும் (பாதிப்புகளிலும்) வென்றது

காந்தி, நீ ஒருவன் மட்டுமே

ஏற்ற சபதம் பொருட்டு எல்லாம் இழந்தவன்

படையும் கேட்கவில்லை

தலைமைப் பதவியும் கேட்கவில்லை

அனைவருக்கும் அமிர்தம் கொடுத்துவிட்டு

ஐயோ நீ அருந்தினாய் விஷம்

உன் சிதை எரிந்த அன்றைய தினம்

அழுதான் காலதேவன்.

இந்திப் பாடல் அளவு விரிவான பொருள் கொண்டதாக இல்லையென்றாலும் இதற்கு நிகரான உணர்வை, பேபி கமலாவின் எழிலான நாட்டியத்தாலும் எம்.எஸ் ராஜேஸ்வரியின் கொஞ்சும் குரலாலும் வெளிப்படுத்தும் தமிழ்ப் பாடல் காந்தியின் புகழ் பாடும் அமரத்துவப் பாடலாக விளங்குகிறது.

படம். நாம் இருவர் (1947)

பாடியவர். எம்.எஸ். ராஜேஸ்வரி

பாடலாசிரியர்: கொத்தமங்கலம் சுப்பு

இசை: சுதர்சனம்

பாடல்:

மஹான் காந்தி மஹான்

மஹான் காந்தி மஹான்

வாழ்ந்த தியாகியாம் நீ

பூலோகம் மீதிலே

வாழ்ந்த தியாகியாம் நீ

பூலோகம் மீதிலே

தேசிய சேவா குரு

தெய்வீக பூஜா குரு

ஜெக சேவையே புரிந்தான்

இக ஜோதியாய் நிறைந்தான்

சுக வாழ்வையே மறந்தான்

சுய ராஜ்ய வாழ்வைத் தந்தான்

கை ராட்டையே ஆயுதம்

கதர் ஆடையே சோபிதம்

ஜெய வந்தே மாதரம் ஓ-ஓ

ஜெய பாரத மணிக்கொடி

ஜெய வந்தே மாதரம் ஓ-ஓ

ஜெய பாரத மணிக்கொடி

சீரோங்கி வாழ்கவே

சீரோங்கி வாழ்கவே

ஜெய வந்தே மாதரம்

ஜெய வந்தே மாதரம்

மஹான் காந்தி மஹான்

SCROLL FOR NEXT