இந்து டாக்கீஸ்

தொட்டால் தொடரும் முன்னோட்டம் : தெரிந்தே சிக்கிய அருந்ததி!

ஆர்.சி.ஜெயந்தன்

இணையத்தில் சினிமா விமர்சனமும் சினிமா வியாபாரமும் எழுத ஆரம்பித்து, வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர் என உயர்ந்தவர் கேபிள் சங்கர். இவரது விமர்சனங்களைக் கவனிக்கும் ரசிகர்கள் “ சரியாத்தான்ய்யா எழுதறார்” என்று கை குலுக்கினாலும். “ யாருய்யா இந்த ஆளு! எழுதுறது ஈஸி… படமெடுக்கிறது கஷ்டம். ஒரு படமெடுத்துக் காட்டச் சொல்லுங்க பார்ப்போம்” என்று இவரது காதைத் திருகியது கோலிவுட்.

ஆனால் கேபிள் சங்கர் கேபிள் டிவி தொழில், பட விநியோகம், குத்தகைக்குத் திரையரங்கு நடத்தியது என இவரது பன்முக அனுபவம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த வரிசையில் தற்போது இயக்குநர் என்ற இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறார். இன்று வெளியாக இருக்கும் ‘தொட்டால் தொடரும்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

தமன், அருந்ததி, வின்சென்ட் அசோகன், பாலாஜி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தைத் துவார். ஜி.சந்திரசேகர் தயாரித்திருக்கிறார். படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கும் நிலையில், ஒரு வெட்டு கூட இல்லாத ‘யூ’சான்றிதழைத் தணிக்கை குழு இந்தப் படத்துக்கு அளித்திருக்கிறது.

இன்று இணையத்தைப் பயன்படுத்தும் பலரும் விமர்சகர்களாக மாறிவிட்ட சூழ்நிலையில், இந்தச் சூழலுக்கான முன்னோடிகளில் ஒருவராக இருந்து திரைப்பட இயக்குநராகியிருக்கும் இந்தத் தருணத்தை கேபிள் சங்கர் எப்படி உணர்கிறார்?

கேபிள் சங்கர்

“தணிக்கை அதிகாரிகள் படத்தைப் பார்த்துவிட்டு மனதாரப் பாராட்டினார்கள். வரி விலக்குக் குழுவில் அங்கம் வகிக்கும் இயக்குநர் பி.வாசு, பழம் பெரும் நடிகை எம்.என். ராஜம், ராஜஸ்ரீ போன்றவர்கள் முகம் சுழிக்காத தரமான படமொன்றை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தோம் என்று பாராட்டினார்கள்’’ என்கிறார்.

திரையுலகைச் சாராத, 20 முதல் 50 வயதுக்கு உட்பட்ட, வேறுவேறு பணிச்சூழல், சமூக அந்தஸ்து கொண்ட 500 பேரைத் தனது நண்பர்களின் நட்பு வட்டத்திலிருந்து தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் படத்தைப் போட்டுக் காட்டிக் கருத்து கேட்டிருக்கிறார். படம் பார்த்து வெளியே வந்த அனைவரும் “ எங்கள் நேரத்தை வீணடிக்கவில்லை” என்றார்களாம்.

“இது எங்கள் படக் குழுவுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. படம் பார்க்க வரும் ரசிகர்கள் மூன்று மணிநேரத்தைச் செலவழிக்கிறார்கள். அது அவர்களுக்கு இம்சையாகவும் ஏமாற்றமாகவும் இருந்துவிட்டால், அந்தநாள் முழுவதும் அவர்களை அது பாதிக்கிறது. பார்த்த படத்தின் மீது அவர்களது கோபம் திரும்புகிறது. அப்படிக் கோபமூட்டாத படமாக இது இருக்கும்” என்கிறார் சங்கர்.

மேலும் “இதுவொரு ரொமான்டிக் த்ரில்லர் வகைப் படம். கால் சென்டரில் வேலை பார்க்கிறவர் அருந்ததி. மென்பொருள் நிறுவனத்தில் மனித வள அதிகாரியாக இருப்பவர் தமன். தெரிந்தே ஒரு பிரச்சினையில் சென்று சிக்கிக் கொள்கிறார் அருந்ததி. பின்பு அப்பிரச்சினையிலிருந்து எப்படித் தப்பிக்கிறார். அவரை தமன் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் திரைக்கதை.

இந்தப் படத்துக்குப் பிறகு அருந்ததி திறமையான நடிகை என்ற பெயரைப் பெறுவார். தமனுக்கும் திருப்புமுனையாக அமையும். வின்செண்ட் அசோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுட்டகதை பாலாஜி கதையோடு இணைந்து நகைச்சுவை பங்களிப்பை அளிக்கிறார். நமக்கு மத்தியில் நடக்கும் கதை. படத்தின் முடிவு கண்டிப்பாகப் பேசப்படும்” என்கிறார் கேபிள் சங்கர்.

SCROLL FOR NEXT