பல வருடங்களுக்கு முன்னால், எழுத்தாளும் தம்பதியர் வேதா கோபாலன், பாமா கோபாலன் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அன்பான உபசரிப்பு, பரவலான அரட்டை முடிந்து வீடு திரும்பும் நேரம் வந்தது.
குரோம்பேட்டையில் புறநகர் மின்சார ரயிலில் ஏறினோம். மதிய நேரம் என்பதால், ரயில் பெட்டியில் நிறைய காலி இருக்கைகள்.
எங்களுக்கு எதிர் வரிசையில் ஜன்ன லோர இருக்கையில் ஓர் இளம்பெண். பூப்போட்ட ஸாடின் புடவை. கழுத்தில் மலிவான முத்துச் சங்கிலி. கைகளில் கண்ணாடி வளையல்கள். மடியில் ஒரு கைக்குழந்தை. ஜன்னல் கம்பிகளில் அவள் முகம் சாய்ந்திருந்தது. தாய், சேய் இருவருமே தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
“எந்தக் கதையப் படிச்சாலும் பாமாவும், வேதாவும் அதில் பாராட்டறதுக்கு ஏதாவது விஷயத்தை தேடிப் பிடிக்கிறாங்க, இல்ல..?”
“குறை சொல்லவே கூடாதுன்னு பேசினா, அந்த விமர்சனம் நியாயமானதா, போலியானதா?”
விமர்சனம் செய்தவர்களை நாங்கள் விமர்சனம் செய்து உரையாடியது பிடிக்காமலோ என்னவோ, தூங்கிக்கொண் டிருந்த கைக்குழந்தை சிணுங்கியது. விழித்து பசியில் அழத் தொடங்கியது. அந்த இளம் தாய் சட்டென விழித்தாள்.
அப்போதுதான் அவள் முகத்தை சரியாக கவனித்தோம். விழிகள் இருந்தனவே தவிர, அவற்றில் பார்வை இல்லை.
அவள் குழந்தையைத் தன் மார்புப்புடவைக்குள் இயல்பாகக் கொண்டு போனாள். சில விநாடிகளில் தோளில் சாத்தியிருந்த அந்தப் புடவை, அப்படியே வழுக்கி மடியில் சரிந்துவிட்டது. அதுபற்றி எந்த உணர்வும் இல்லாமல், அவள் தன் குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள்.
அந்தப் பெண்ணிடம், ‘புடவையை சரி செய்து கொள்…’ என்று சொல்ல சங்கோஜமாக இருந்தது. அங்கே உட்கார்ந்து பேசுவது சற்று தர்மசங்கடமாக இருந்ததால், எழுந்து பின்வரிசையில் வேறு இருக்கைகளுக்கு நகர்ந்தோம்.
அதற்கடுத்த வரிசையில் ஏதோ புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த இளைஞன், புத்தகத்தை மூடிக்கொண்டு எழுந்தான். அடுத்த ஸ்டேஷனில் இறங்குவதற்கு ஆயத்தமாகிறான் என்று நாங்கள் நினைக்க, அவன் எங்களைக் கடந்து, அந்தப் பெண்ணுக்கு நேர் எதிரில் இருந்த காலி இருக்கையில் போய் அமர்ந்துகொண்டான்.
அவனுடைய நோக்கம் எங்களுக்குப் புரிந்தது. ஆனால், தட்டிக் கேட்கும் தைரியம் இல்லை. ‘உன் வேலையைப் பார்த்துட்டு போய்யா…’ என்று சொல்லிவிட்டால்? அந்தப் பெட்டியில் இருந்த ஒன்றிரண்டு பேருக்கும் அதே தயக்கம் என்று தோன்றியது.
ரயில் மீனம்பாக்கத்தில் நின்றது. கூடை நிறைய கொய்யாப் பழங்களுடன், உழைப்பின் வியர்வையுடன் ஒரு மெலிதான பெண் ஏறினாள். கூடையைக் காலி இருக்கையில் வைத்தாள். கூந்தலை அள்ளி முடிந்துகொண்டாள்.
“ஸ்ஸ்… யப்பா, இன்னா வெயிலு!” என்று சொல்லியவாறு அமரப் போனவள், கடைசி வரிசையைப் பார்த்துவிட்டாள். சற்றும் யோசிக்கவில்லை. விடுவிடு வென்று அந்த இளைஞனை நெருங்கினாள். ‘பொட்’டென்று அவன் பின் மண்டையில் தட்டினாள்.
“ஏந்திருடா பேமானி..!”
அவன் மிரண்டு எழுந்ததில் புத்தகங்கள் கீழே விழுந்தன. கூடைக்காரப் பெண்மணி இயல்பாக பார்வை யற்றப் பெண்ணை நெருங்கி, அவள்முந்தானையை எடுத்து, குழந்தையையும் சேர்த்து அழகாகப் போர்த்தினாள்.
“மூஞ்சப் பாரு… ப்போடா அந்தாண்ட...” என்று அந்த இளைஞனை ஓர் உந்து உந்தினாள். அடுத்த ஸ்டேஷனில் அவன் காணாமல் போனான்.
வாளாவிருந்த குற்ற உணர்வு ஒருபுறம் வதைக்க, பார்வையற்றவர்கள் நிலைகுறித்து எங்கள் உரையாடல் தொடர்ந்தது. அதிலும், தன் மீது விழும் வக்கிரமான பார்வைகள் கூட தெரியாத இளம்பெண்ணாக பார்வையற்றவர் இருந்துவிட்டால்..?
‘பார்வையுள்ளவளாக இருந்திருந்தால், அந்த இளைஞன் வெறித்தபோது, அவள் மனதில் எப்படிப்பட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கும்?’
‘குழந்தைக்கு பால் கொடுப்பது நின்றுபோயிருக்கும். அந்தப் பதற்றம் குழந்தையைக்கூட பாதித்திருக்கும்...’
‘அப்படியானால், பார்வையற்று இருப்பது வரமா... இல்லை சாபமா..?’
இந்தக் கேள்வி பலநாட்களுக்கு மனதைக் குடைந்தது. பிற்பாடு, ஆனந்த விகடனில் ‘காட்டுப் பூ’ என்று ஒரு சிறுகதை எழுதுவதற்கு இந்தச் சம்பவம் எங்களைத் தூண்டியது.
‘கனா கண்டேன்’ திரைப்படம். தன் பால்ய சிநேகிதி அர்ச்சனா (கோபிகாவின் திருமணத்துக்கு நாயகன் பாஸ்கர் வந்திருப்பான். மறுநாள் தன் கணவனாகப் போகிறவனிடம், பாஸ்கரையும், மற்றத் தோழர்களையும் அர்ச்சனா அறிமுகம் செய்துவைப்பாள்.
அவளுடைய தோழிகளில் ஒருத்தி, அர்ச்சனாவின் முகத்தைத் தடவி, “ரொம்ப அழகா இருக்க… புடவை என்ன கலர்?” என்று கேட்பாள்.
“ஆரஞ்சு… மெரூன் பார்டர்…” என்பாள் அர்ச்சனா.
“எனக்கு எல்லாமே ஒரே கலர்தான்...” என்று சொல்லி அவள் சிரிப்பாள். அவள் பார்வையற்றவள் என்பதை அப்போதுதான் மணமகன் கவனிப்பான்.
இரவு. திருமண மண்டபத்தில் சந்தடிகள் அடங்கி, அந்தப் பெண் உடை மாற்றிக்கொள்ள தனியே ஓர் அறைக்குள் போவாள். கதவைச் சாத்திக் கொள்வாள். மணமகன் அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டு, பூனைப் பாதம் வைத்து நடந்து வந்து, அந்த அறையின் கதவுகளை ஒலியில்லாமல் திறந்து, உள்ளே நுழைவதை அர்ச்சனா வேறோர் அறையில் இருந்து தற்செயலாக கவனிப்பாள். திடுக்கிடுவாள்.
தோழி உடை மாற்றும் அதே அறைக்குள் அவளும் வேகமாக நுழைவாள். உடைகளைக் களைந்துகொண்டிருக்கும் பார்வையற்ற தோழி மிரண்டு, புடவையை அப்படியே மார்பு வரை பிடித்துக்கொண்டு, “யார் அது..?” என்று கேட்பாள்.
“நான்தான்…” என்று அர்ச்சனா சொன்னதும், “யாரோன்னு பயந்துட்டேன்...” என்று அவள் நிம்மதியாவாள்.
ஒரு பீரோவின் மறைவில் இருந்து வெளிப்படுவான், அங்கே ஒளிந்திருந்த மணமகன். அர்ச்சனாவின் கனல் கக்கும் பார்வையைச் சந்திக்க முடியாமல் தடுமாறி அறையைவிட்டு வெளியேறுவான்.
அப்படிப்பட்ட கண்ணியமற்றவனைத் திருமணம் செய்துகொள்ள இயலாது என்று அர்ச்சனா முடிவுக்கு வந்து, நாயகனுடன் சென்னைக்கு பஸ் ஏறுவாள். கதையின் ஒரு முக்கியத் திருப்பமாக இந்தக் காட்சி அமைந்தது.
- வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:
dsuresh.subha@gmail.com