வீதி நாடகங்கள் வழியே கலையுலக பயணத்தை தொடங்கியவர், ஜெயராவ்.சேவூரி. கூத்துப்பட்டறையில் பெற்ற பயிற்சியோடு, நவீன நடிப்பு முறைகளை கற்றுத்தேர்ந்த இவர், கடந்த 2005-ம் ஆண்டில் ‘தியேட்டர் லேப்’ என்ற நடிப்பு பயிற்சி கூடத்தை நிறுவினார். நெருங்கிய நண்பர்களின் சிறுகதைகள் மற்றும் கவிதைகளை அவற்றின் தொகுப்பு வெளியிடப்படும் மேடையிலேயே நாடகமாக அரங்கேற்றும் நவீன முறையை தொடங்கி வைத்த இவர், தற்போது ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்’ படைப்பை, தமிழகத்தில் முதன்முறையாக நாடக வடிவில் இயக்குகிறார்.
ஜனவரி 3 மற்றும் 4-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் இந்த நாடகத்தின், ஒத்திகை பணிகளில் ஈடுபட்டிருந்த இயக்குநர் ஜெயராவை சந்தித்தோம்.
ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்’ படைப்பை எந்த கோணத்தில் உங்கள் மேடை நாடகம் பிரதிபலிக்கப்போகிறது?
ஷேக்ஸ்பியரின் நாடகம் என்றால் வெறுமனே மேடை அலங்காரம், வசன வேகம் என்று மட்டும் இருந்துவிடக்கூடாது. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அது எந்த நோக்கத்துக்காக எழுதப்பட்டதோ, அதை முழுமையாக உள்வாங்கி, தற்போதைய காலகட்டத்துக்கு அவசியமான விழிப் புணர்வு மற்றும் சமூக அக்கறை கலந்து இந்த நாடகத்தை படைக்கவிருக்கிறோம்.
காதலர்கள் இறப்பது விதி என்று சொல்கிறார்கள். அது விதியல்ல. செயல் பாட்டில் சரியான திட்டமிடல் இருந்தால் எதிலும் வெற்றி அடையலாம். அவசரப்பட்டு செய்யக்கூடிய நிகழ்வுகள் எல்லாம் தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. அது காதலுக்கும் பொருந்தும். அது போன்ற கருத்துகளை இந்த 2 மணிநேர நாடகத்தில் சொல்லியிருக்கிறோம். இதுவே புதிய கோணமாக இருக்கும் என்று நிச்சயமாக சொல்ல முடியும்.
திரைப்படக் கல்லூரிகளில் கூட நடிப்புக்கான வகுப்புகள் வழக்கொழிந்து போன சூழலில் உங்களுடைய ‘தியேட்டர் லேப்’ அமைப்பு எந்த வகையில் நடிப்பு பயிற்சி அளிக்கிறது?
இயக்குநராகட்டும், திரைக்கதை ஆசிரியராகட்டும், நடிகனாகட்டும் முறையே பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி பயிற்சி பெற்றவர்களால்தான் சினிமாவை காப்பாற்ற முடியும். தற்போது வாரிசு கலைஞர் என்ற பெயரில் வரும் பலர் தங்கள் வசதிகளால் மேல்நாட்டு அனுபவ பின்னணியில் வளர்கிறார்கள். அவர்களுக்கு முறையே நடிப்பு பற்றிய புரிதல் இருப்பதில்லை. இயக்குநர்களும் தங்களது வாய்ப்புக்காக அவர்களை செறிவூட்டுவதாக உத்திரவாதம் அளித்து அழைத்து வந்துவிடுகிறார்கள். இதுபோன்ற கலைஞர்களால் ஒரு மாதத்தில் முடியவேண்டிய படைப்பு, 3 மாதம் ஆகியும் முடியாமல் இருக்கிறது. இதுபோன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க நடிப்பை விரும்பும் கலைஞர்களுக்கு நாங்கள் பயிற்சியளித்து வருகிறோம். எந்த தகுதி யும் இல்லாமல் இங்கே வரும் ஒருவரை 100 சதவீத அடையாளம் மிக்க மனித னாக மாற்றி அனுப்பும் பொறுப்பு என்னுடயது.
ஒரு நடிகனின் சமூக பங்களிப்பு என்ன?
விழிப்புணர்வு சிந்தனை வேண்டும். அரவிந்தர், அன்னை தெரசா, இயேசுநாதர், காந்தி, அம்பேத்கர், புத்தர் போன்ற மகான்கள் கொடுத்த விழிப்புணர்வை சரியாக உணர்ந்தாலே போதும் என்று நினைக்கிறேன்.
இன்றைய சினிமா உலகைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஆண்டுக்கு 200 படங்கள் வரை வெளி வருகிறது. 100 நாட்கள் ஓடிய படங்கள் இன்று 3 நாட்கள் ஓட்டுவதற்கே பாடுபட வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக சினிமா உலகம் சில்லறை வியாபார மேடையாக மாறி நிற்கிறது. இங்கே திட்டமிடல் அவசியம். தற்போதைய சூழலில் இன்னும் சரியான சினிமா எடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
இந்த நிலை மாற என்ன செய்ய வேண்டும்?
தயாரிப்பாளராகட்டும், இயக்குநராகட் டும், நடிகனாகட்டும் கற்பனை சார்ந்த ஒரு விஷயத்தை தொடும் போது அதற் காக மெனக்கெட வேண்டும். ஒரு வரலாறை ஒரு காட்சியில் நிறுத்துவது எவ்வளவு சாதுர்யமான வேலை. அதற்கான உழைப்பும், கற்பனைத்திறனும் அசாத்தியமாக இருக்கவேண்டும். அதனால் தான் இலக்கியம், ஓவியம், இசை, நடிப்பு கோட்பாடு ஆகிய நான்கையும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் கூறிவருகிறேன்.
கார்த்திக் சுப்புராஜ், பா. ரஞ்சித், நலன் குமரசாமி போன்றவர்கள் தற்போதைய சினிமாவில் புதிய அலையை பாய்ச்சுவது போல் தெரிகிறதே?
இவர்கள் எல்லோருமே நாடகப் பின்னணியில் செயல்படுவதால்தான் நல்ல சினிமாவை கொடுக்க முடிகிறது. அதனால்தான் அவர்களது படைப்பில் அதிக அளவில் நாடக நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம்.
நடிகர்களை மட்டும்தான் நீங்கள் உருவாக்கு கிறீர்களா?
ஒளிப்பதிவாளராக வர வேண்டும் என்று இங்கு வருபவர்களையும் திறமை யானவர்களாக மாற்றுகிறேன். அப்படி வருபவருக்கு நடிப்பு, ஓவியம், இசை குறித்த விஷயங்களில் பயிற்சி அளிக்கப் படுகிறது.
நடிப்பு பாடம் எடுப்பதோடு நீங்கள் நடிக்கவும் செய்கிறீர்களே?
என் ஆற்றலை புரிந்துகொண்டவர் களோடு சேர்ந்து அந்த பணியையும் தொடர்கிறேன். என் நடிப்புக்கான இடம் உருவாகும் இடத்திலும், நண்பர்களுடனும் மட்டுமே பணியாற்றுகிறேன். தமிழில் வெளிவந்த ‘மெட்ராஸ்’ உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களில் அவ்வப்போது நடித்தும் வரு கிறேன். அடுத்ததாக நான் திரைப் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கான கதை தயாராகிவிட்டது. விரைவில் பட வேலைகளை தொடங்கவிருக்கிறேன்.