ஸ்ருதி ஹாஸனுக்குத் தமிழ்ப்படங்களின் மீது காதலே கிடையாது என்று குற்றப்பத்திரிகை வாசித்தவர்கள் இனி அப்படிச் சொல்ல முடியாது. தெலுங்குப் பட உலகிலும் இந்திப்பட உலகிலும் தலா இரண்டு படங்களைக் கைவசம் வைத்துக்கொண்டே தமிழிலும் வலுவாகக் காலூன்றிவருகிறார் ஸ்ருதி. ஹரி - விஷால் இணையும் ’பூஜை’ படத்தின் கதாநாயகி ஆகியிருக்கிறார். பூஜை படத்துக்கு அவர் ஓகே சொல்ல முதல் காரணம் விஷால் - ஹரி கூட்டணி. அடுத்து கோவையில் பிறந்து வளரும் மார்டன் பெண் கதாபாத்திரம் இரண்டும் ஸ்ருதிக்குப் பிடித்து விட்டதாம். அதேபோல பாண்டியநாடு படத்தில் விஷால் - சூரி நண்பர்கள் ஜோடிக்குக் கிடைத்த வரவேற்பை இயக்குநர் ஹரி எடுத்துக் சொல்லி, அவர்கள் மீண்டும் இதில் இணைகிறார்கள் என்றதும் டபுள் ஓகே சொல்லியிருக்கிறார்.
ஹரி படம் என்றாலே நட்சத்திரங்களைக் குவித்துவிடுவார். பூஜை படத்தில் ஸ்ருதி ஹாசனுடன் ராதிகா, சித்தாரா, ஐஸ்வர்யா, ரேணுகா, அபிநயா, துளசி உள்பட எட்டு மூத்த கதாநாயகிகளை நடிக்க வைக்கிறார்.
படம் பற்றி ஹரியிடம் கேட்டபோது “படத்தின் கதைக்களம் கோயம்புத்தூர். என்றாலும் கோவையில் தொடங்கும் கதை பாட்னாவில் முடிகிறது. அரிவாளை வைத்து படம் எடுப்பவன் என்று எனக்கு ‘நல்ல பெயர்’ உண்டு. இப்போது பூஜை என்று தலைப்பு வைத்து படம் எடுக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். கடவுளுக்கு மட்டுமல்ல மட்டுமல்ல அரிவாளுக்கும் பூஜை போடுவது தமிழர்கள் வழக்கம். படத்தின் ஒருவரிக் கதையே அதுதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று விறுவிறுப்புக் கூட்டுகிறார்.