வெங்கட் பிரபு இயக்கும் எல்லாப் படங்களிலும் இவருக்குக் கண்டிப்பாக ஒரு கதாபாத்திரம் இருக்கும். அலட்டாமல் இயல்பாக அவற்றைக் கடந்து முன்னேறிவரும் அவர் வைபவ். ‘டமால் டுமீல்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு முழுமையான நாயகனாக அறிமுகமான இவர், ‘கஹானி’ தமிழ்ப் பதிப்பில் கதையின் நாயகி நயன்தாராவுக்கு உதவும் இளம் காவல் அதிகாரியாகக் கவனிக்க வைத்தார். அறிமுக இயக்குநர் கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கத்தில் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் இன்று வெளியாக இருக்கும் ‘கப்பல்’ படத்திலும் வைபவ்தான் நாயகன். +2 தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவனைப் போல த்ரில்லாகப் பேச ஆரம்பித்தார் வைபவ்..
வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் நீங்கள் இருப்பதன் ரகசியம் என்ன?
அவரது தம்பி பிரேம்ஜியும் நானும் சந்தோம் செயிண்ட் பீட்ஸ் பள்ளியில் ஆறாம் கிளாஸ்லேர்ந்து க்ளாஸ்மெட்ஸ். அந்த வயசுலேர்ந்து ஒண்ணா சுத்துற அளவுக்கு நாங்கள் நெருக்கமான ஃபிரெண்ட்ஸ். அவன் வழியா வெங்கட் பிரபு அண்ணாவும் ஃபிரெண்ட் ஆனார். அவர் காட்டின கருணையிலதான் அவரோட படங்கள்ல எனக்கு இடம் கிடைச்சுக்கிட்டே இருந்தது. “உங்களுக்கெல்லாம் ரொம்ப செல்லம் கொடுத்துக் கெடுத்துட்டேன். வெளியில போயி பொழைக்கிற வழியப் பாருங்க”ன்னு சொல்லிட்டார். அதனால் வேற வழியில்லாம இப்போ சொந்தக் கால்ல நிக்க வேண்டியதாபோச்சு. இருந்தாலும் வெங்கட் பிரபு பிரதர்ஸ் போட்டுக் கொடுத்த ரோட்லதான் வந்துதான் இப்போ தன்னம்பிக்கையோட பேசிக்கிட்டு இருக்கேன்.
மங்காத்தா படத்துல அஜித்கிட்ட அடியெல்லாம் வாங்குனீங்களே?
கண்டிப்பா மறக்கவே முடியாது சார்… இப்போ வெளியில என்னை நல்லா அடையாளம் தெரியுதுன்னா அதுக்கு அஜித்கூட நடிச்சதும் முக்கியமான காரணம். ‘அவள் வருவாளா’ படத்துலேர்ந்து நான் அஜித்தோட ஃபேன். ‘அசல்’ பட ஷூட்டிங் அப்போ ஒரு ரசிகனா அவரை மீட் பண்ணி போட்டோ எடுத்துருக்கேன்னா பார்த்துக்கோங்க. அதே அஜித்கூட நடிக்கிற வாய்ப்பு சாதாரண விஷயமில்ல. மங்காத்தாவுக்காக அவர்கூட எட்டு மாசம் ரொம்ப க்ளோசா பழகினேன். ஒரு நிஜ அண்ணன் மாதிரியே மாறிட்டார். இப்பவும் அந்தப் பாசம் குறையாது.
“உன்னோட வேலைய ஒழுங்கா செஞ்சுகிட்டே இரு. தன்னம்பிக்கையை மட்டும் விட்டுடாதே. முயற்சி பண்றதையும் விட்டுடாதேன்னு” சொன்னார். அவர் சொன்னதைத்தான் ஃபாலோ பண்றேன். இப்பவும் தல ரசிகர்கள் என்னைப் பார்த்தா, “என்னா பிரதர் தலகிட்ட அடி வாங்கினப்போ எப்படியிருந்துச்சு? மறுபடியும் எப்பப்பா சேர்ந்து நடிப்பே?”ன்னு கேட்பாங்க. அந்த அளவுக்கு அஜித் மாஸ்.
நீ எங்கே என் அன்பே படத்தில் நயன்தாராவுடன் நடித்த பிறகு நீங்கள் அவரது நெருங்கிய நண்பராகி விட்டீர்கள் என்று செய்திகள் வெளியானதே?
யாரோ ஸ்கிரின்பிளே எழுதியிருக்காங்க சார். இப்போ நெனச்சாலும் வயித்தெரிச்சலா இருக்கு. அந்தப் படத்துல நயன்தாராவுக்கு உதவி செய்ற எஸ். ஐ கேரக்டர் பண்ணினேன். படம் தமிழ்ல பிளாப்தான். ஆனாலும் பரவாயில்லாம வசூல் செஞ்சுது. படம் பார்த்த ரசிகர்கள் “சார் உங்களுக்கும் நயனுக்கும் செம கெமிஸ்ட்ரி. கடையில தன்னோட காதலனைக் கொன்ன பிறகு உங்களைக் கல்யாணம் பண்ணிக்குவாங்கன்னு எதிர்பார்த்தோம். ஆனா அப்படி எதுவும் நடக்கலையேன்னாங்க.
ஆனா அந்தப் படத்தோட ஷூட்டிங் சமயத்துல நயன்தாரா கண்டிப்பா ஃபிரெண்ட் ஆயிடுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ம்ஹூம்… அதுக்கு வழியே இல்ல. கடைசி நாள் ஷூட்டிங்ல, உங்க நம்பர் கொடுங்கன்னு கேட்டேன். எதுக்கு நம்பர்ன்னு கேட்டுட்டுப் போயிகிட்டே இருந்தாங்க. ஏண்டா கேட்டோம்ன்னு ஆகிப்போச்சு.
சரி விடுங்க. கப்பல் பட ஹீரோயின் சோனம் பாஜ்வாகிட்டயாவது நம்பர் கிடைத்ததா?
அவங்க கேக்காமலேயே கொடுத்தாங்க. கப்பல் படத்துல ஒரு கடல் கன்னி மாதிரி அவ்வளவு அழகா வர்றாங்க. அவங்க நம்பர் கொடுத்தது ஒருபக்கம் இருக்கட்டும். அவங்க என்னோட கன்னத்தை எதுக்கு யூஸ் பண்ணிகிட்டாங்கன்னு கேளுங்க. சோனம் பாஜ்வா என்னை அறைவது போல காட்சி. என் கன்னம் சிவக்குற அளவுக்கு இயக்குநர் பல டேக்ஸ் எடுத்தார். நானும் ரொம்ப நேரம் வலிக்காத மாதிரிதான் நடிச்சேன்.
மங்காத்தா படத்தல தலகிட்ட வாங்கின அடியால நல்ல பேர் கிடைச்சுது. இப்போ மறுபடியும் அடி. அடியா சார் அது? ஒவ்வொன்னும் அந்த லேடி கொடுத்த ஆயிரம் வாட்ஸ் இடி. கடைசி நாள் படப்பிடிப்புல பூசணிக்காய் உடைச்சிட்டு எல்லாரும் டாடா சொல்லிட்டு கிளம்பினப்போ என் காதோரமா வந்து “வைபவ்.. நான் யாரையும் கன்னத்துல அறைஞ்சது இல்ல. யாரையாவது அடிச்சுப் பார்க்கணும்னு நிஜமாவே ஆசை. அதான்… கிடைச்ச சான்சை யூஸ் பண்ணிகிட்டேன் தப்பா எடுத்துக்காதேன்”னு கூலா சொல்லிட்டுக் கிளம்பிட்டாங்க.நம்பர் கொடுக்கலன்னாலும் நயன்தாராவே மேல்.
கப்பல் படத்துல என்ன கேரக்டர் பண்ணியிருக்கீங்க?
நண்பர்களை நம்புற வாசுவா வர்றேன். சின்ன வயசுலேர்ந்து எனக்கு நான்கு நண்பர்கள். பொதுவா காதலை நண்பர்கள்தான் சேர்த்து வைப்பாங்க. இதுல நட்பு காதலுக்கு எதிரி. காதலுக்கும், நட்புக்கும் இடையில சிக்கித் தவிக்கும் இளைஞனாக நடிச்சிருக்கேன். என்னோட கேரக்டர் இன்றைய இளைஞர்கள் மத்தியில நடமாடுற ஒரு நிஜ கேரக்டர்தான். ரசிகர்களை எளிதா கவர்ந்திடும்.
எனது நண்பர்களாக கருணா, அர்ஜுனன், வெங்கட் அப்புறம் கார்த்திக். பொஸஸிவ்னெஸ் காரணமா என் காதலைப் பிரிக்க இவங்க போடுற திட்டங்கள் ரகளையா இருக்கும். இயக்குநர் கார்த்திக்கு மட்டுமில்ல எனக்கும் பெரிய பிரேக்கா இந்தப் படம் இருக்கும். அடிச்சுச் சொல்றேன். ஏன்னா படத்தைத் தயாரிச்சிருக்கிற ஷங்கர் சார் படத்தைப் பார்த்துட்டு “கலக்கிட்டே”ன்னு பாராட்டினார்.