இந்து டாக்கீஸ்

திரைமுற்றம்: லிங்காவுமா?

செய்திப்பிரிவு

ஒரு படம் வெளிவருவதற்கு முன் அந்தப் படத்தின் கதை தன்னுடையது எனச் சிலர் பிரச்சினையை எழுப்புவதும், வழக்கு தொடுப்பதும் சமீப காலத்தில் அதிகமாகிவிட்டது. அப்படிப்பட்ட விவகாரங்களைச் சம்பந்தப்பட்ட படக் குழுவினர் படம் வெளிவருவதற்குள் சமாளிப்பது பெரிய விஷயம். பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஒரு படம் வெளியாகும் முன் அதன்மீது குவிபவை கதைத் திருட்டுப் புகார்கள். படம் வெளியான பின் படக்குழு சமாளிக்க வேண்டியிருப்பது சமூக வலைத்தளங்களை. படம் மொக்கை என்று பரப்புரை செய்வதைக்கூடச் சம்மந்தப்பட்டவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மாறாக அது எந்த ஆங்கில, அல்லது உலக சினிமாவின் காப்பி, காட்சிகளை எந்தெந்தப் படங்களிலிருந்து உருவியிருக்கிறார்கள் என்பதை யூடியூப் காணொளிகளோடு புட்டுப் புட்டு வைப்பதால் குட்டு வெளிப்பட்டுவிடுகிறதே என்று கவலைப்படுவார்கள்.

இதுவரை சமீபத்திய ரஜினி படங்களுக்கு அப்படி ஒரு பிரச்சினை வந்ததில்லை. தற்போது லிங்கா படத்தை வறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். லிங்கா படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு நகைக் கண்காட்சியில் பேரன் ரஜினி மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நெக்லஸைத் திருடிச் செல்வார். அப்போது ஒரு குறுகலான ஒரு சின்ன அறைக்குள் ரஜினியும், அனுஷ்காவும் மாட்டிக் கொள்வார்கள். அந்த அறையிலிருந்து கொண்டு, ஒரு காந்தத் துண்டின் உதவியுடன் அறைக்கு வெளியே மாட்டி வைக்கப்பட்டுள்ள சாவியை, ரஜினி தன் கைக்குக் கொண்டுவரும் காட்சி ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாகப் போட்டு உடைத்திருக்கிறார்கள்.

1966-ம் ஆண்டு வெளிவந்த ‘ஹௌ டு ஸ்டீல் எ மில்லியன்’ என்ற படத்தில் மேலே குறிப்பிட்டுள்ள காட்சி அப்படியே இருக்கிறதாம். வில்லியம் வைலர் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியும் அனுஷ்காவும் சிக்கிக்கொண்டதுபோல் சிக்கிக்கொண்டவர்கள் பீட்டர் ஓ டூல், ஆட்ரி ஹீப்பர்ன் ஆகிய நடிகர்கள். அடுத்து லிங்கா படத்தின் கிளைமாக்ஸ் பலூன் காட்சி. இந்தக் காட்சிக்காக அவர்கள் எந்த ஹாலிவுட் படத்தையும் பார்க்கவில்லை போலிருக்கிறது. தர் இயக்கத்தில் 1969-ம் ஆண்டு வெளிவந்த ‘சிவந்த மண்’ இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகி காஞ்சனாவை, பலூனில் கடத்திச் செல்வார் வில்லன் எம்.என். நம்பியார் அப்போது, நாயகன் சிவாஜி பலூனுக்குள் தாவி ஏறி நாயகியைக் காப்பாற்றுவார். அந்தக் காட்சிதான் அப்படியே லிங்காவில் நவீனமயமாகியிருக்கிறது என்கிறார்கள் இணையவாசிகள்.

SCROLL FOR NEXT