இந்து டாக்கீஸ்

மாஸ் ஹீரோக்கள் செய்ய முடியாத சாகசம்!

திரை பாரதி

குழந்தைகளைப் பொருத்தவரை பொம்மைகள் உயிரற்றவை என்றபோதும் பொம்மைகளைத் தங்களின் தோழர்களாக எண்ணி அவற்றிடம் அன்பு காட்டுவது குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் இயல்பாக இருக்கிறது. தனக்கு விருப்பமான பொம்மையைப் பத்திரமாகப் பாதுகாப்பதும் இதனால்தான். ஆண் பிள்ளைகளை விடப் பெண் பிள்ளைகள் பாப்பா பொம்மைகள் மீது அதிகம் விருப்பம் கொள்வார்கள், அவற்றுக்குத் தாமே அம்மா என்றெண்ணி ‘பூவா’ ஊட்டி தண்ணீர் கொடுப்பார்கள். தலைமுடி கொண்ட சற்றுப் பெரிய பெண் பொம்மை என்றால் தலை பின்னி விடுவதும், ஆடைகளை மாற்றிவிடுவதுமாகக் குழந்தைகளுக்கும் பொம்மைகளுக்குமான உளவியல் பிணைப்பின் அடிப்படையே டாய் ஸ்டோரி படத்துக்கான கதையின் மையம்.

ஆன்டி (Andy) என்ற செல்வந்தர் வீட்டுச் சிறுவனிடம் ஏராளமான விளையாட்டு பொம்மைகள் இருக்கின்றன. அவன் தனது பிறந்த நாளுக்கு ஒருவாரம் முன்னதாகப் பெற்றோருடன் ஒரு சின்ன சுற்றுலாவுக்குக் கிளம்புகிறான். இப்படி அவன் வீட்டில் இல்லாத சமயங்களில் அவனது பொம்மைகள் உயிர்பெற்றுச் செய்யும் சாகசங்களைச் சொல்லும் கதைதான் டாய் ஸ்டோரி.

ஆண்டியின் பொம்மைகளுக்குத் தலைவராக இருக்கும் கௌபாய் கதாபாத்திரப் பொம்மையான ‘வுடி’தான் (Woody) முதல் கதாநாயகன். ஆன்டியின் பிறந்த நாளுக்குப் பரிசாகத் தரப்படும் புத்தம் புதிய பொம்மையான விண்வெளி வீரன் பஸ் லைட்இயரை (Buzz Lightyear) வுடியும் மற்றப் பொம்மைகளும் வரவேற்கின்றன. பஸ் வீட்டுக்கு வந்தது வுடிக்குப் பிடிக்கவில்லை. காரணம் தனது இடத்தைப் பஸ் எடுத்துக்கொள்வானோ என்ற கலக்கம்.

காரணம் தன்னையொரு நிஜமான விண்வெளி வீரனாகக் கருதும் பஸ்ஸை, வுடியைத் தவிர மற்றப் பொம்மைகள் கொண்டாடுகிறார்கள். வுடி தனக்கு எதிரானவன் என்று முதலில் நினைக்கும் பஸ் ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பஸ் வெளியேற வுடியே காரணம் என்று மற்றப் பொம்மைகள் தவறாக நினைக்கின்றன. இதனால் பஸ்ஸைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்து வரக் களத்தில் இறங்கும் வுடி அதிரடி சாகசங்களுக்குப் பிறகு நண்பன் பஸ்ஸை வீட்டுக்கு அழைத்து வந்து சேர்ப்பதுதான் மீதி கதை.

ஜான் லாஸ்செட்டர் (John Lasseter) இயக்கிய இந்தப் படத்தில், நமது மாஸ் ஹீரோக்கள் செய்யமுடியாதப் பல சாகஸங்களை வுடியும் பஸ்ஸும் செய்தன. அப்படிப்பட்ட இந்தக் கதாபாத்திரங்களை முப்பரிமாண மெஷ்(triangle mesh modeling method) முறையில் உருவாக்கினார்கள். முப்பரிமாணத்தில் சதுர வடிவிலான உருவங்களை உருவாக்குவது எளிதானது. ஆனால் வுடி போன்ற மனித உருவம் கொண்ட ஒரு பொம்மையை முப்பரிமாணத்தில் உருவாக்கச் சிறப்புத் தொழில் நுட்பம் தேவைப்பட்டபோது கைகொடுத்ததுதான் முக்கோண மெஷ் முறை.

கதாபாத்திரத்தின் உருவம் என்பது வலைந்தும், தட்டையாகவும், கரடு முரடாகவும், உருண்டையாகவும் இருப்பதை முப்பரிமாணத்துக்குக் கொண்டுவரப் புள்ளிகள் உதவுகின்றன. கதாபாத்திரத்தின் முகத்தை எடுத்துக் கொள்வோம். முகத்தின் ஏற்ற இறக்கம் மற்றும் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப அதை புள்ளிகள் மூலம் பல முக்கோணங்களாகவும் சதுரங்களாகவும் பிரித்துக் கொண்டு அவற்றை ஒரு வலைப்பின்னல் மூலம் இணைத்து முழுக முகத்துக்குமான உருவத்தைப் பெற அடைப்படை அமைக்கிறார்கள். இந்தப் புள்ளிகளின் வழியாக முக அசைவூட்டத்துக்கான நிரலையும் உருவாக்கிக்கொள்கிறார்கள். இதன் பின்னரே முகத்துக்கான தோல், வண்ணம் அனைத்தும் அதன்மேல் ஏற்றப்படுகிறது.

முக்கோண மெஷ் முறையில் ஒரு கதாபாத்திரம் அல்லது அந்தக் கதாபாத்திரம் பயன்படுத்தும் பொருள் அல்லது அது வாழும் பின்னணியில் உள்ள பொருள் எதுவாயினும் அதன் பரப்பை (surface) மிகச் சிறிய முக்கோணங்களால் நிரப்பி விடலாம். வுடியின் முகமாகட்டும் வுடியின் கௌ பாய் தொப்பி அல்லது அவனது குதிரையாகட்டும், அனைத்தின் மேற்பரப்பும் முக்கோணங்களால் இணைக்கப்படும் வலைப்பின்னல் நிரல்களே.

ஒவ்வொரு பொருளையும் முப்பரிமாண அனிமேஷன் உலகில் ஒரு முக்கோணத் தொகுப்பு என்று எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் விரிவாக முக்கோண வலைப்பின்னல் முறையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதன் அடிப்படைக்குக் காரணமாக இருக்கும் vertex, edge, face, polygon, Surfaces ஆகிய ஐந்து விதமான முப்பரிமான உருவ அளவுகோல்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT