இந்து டாக்கீஸ்

இயக்கும் கரங்கள்: பிரிட்டன் சினிமாவின் இந்திய அடையாளம்

ஆதி

யார் இவர்?

பிரிட்டிஷ் சினிமாவுக்கு உலக அங்கீகாரம் கிடைக்கச் செய்து வருபவர்களில் முக்கியமானவர், ஒரு இந்திய வம்சாவளிப் பெண். அவர் குரீந்தர் சத்தா.

ஆனால் குரீந்தரால், தான் ஒரு பிரிட்டிஷ் குடிமகள் என்று அவரால் உணர முடிந்ததே இல்லை. அவருடைய படங்களில் இந்தத் தன்மை அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். அவருடைய படங்கள் அனைத்துமே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதை நகைச்சுவை உள்ளிட்ட பலவித உணர்ச்சிகளின் வழியாக வலியுறுத்துபவைதான். இவற்றில் ‘பெண்ட் இட் லைக் பெக்காம்' பெரு வெற்றி பெற்றது.

பின்னணி

கென்ய தலைநகர் நைரோபியில் பிறந்தார் குரீந்தர் . பிறந்த ஒரு வருடத்திலேயே அவருடைய குடும்பம் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தது. லண்டனில் வளர்ந்த குரீந்தர் சத்தா, ஈஸ்ட் ஆங்லியா பல்கலைக்கழகத்தில் படித்தார். ஜப்பானிய - அமெரிக்கர் பால் மயேடா பெர்ஜஸை திருமணம் செய்துகொண்டார்.

பி.பி.சி. வானொலியில் செய்தியாளராக வாழ்க்கையைத் தொடங்கிய குரீந்தர், விருது வென்ற பல ஆவணப் படங்களை பி.பி.சி.க்காக இயக்கியுள்ளார்.

அவருடைய முதல் ஆவணப் படம் ‘ஐயாம் பிரிட்டிஷ், பட்...', பிரிட்டனில் பிறந்த இளம் ஆசிரியர்களின் அடையாளச் சிக்கல் தொடர்பாகப் பேசியது. சேனல் 4 - பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டுக்காக 1989-ல் எடுக்கப்பட்ட இப்படத்தில், பாரம்பரியப் பஞ்சாபி இசையான பாங்க்ராவைப் பயன்படுத்தியிருந்தார். உம்பி ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் வைத்திருக்கிறார்.

முதல் அரும்பு

‘நைஸ் அரேஞ்ச்மென்ட்' என்ற முதல் குறும்படத்தை 1990-ல் எடுத்தார். தங்களுடைய மகளுடைய திருமண நாளன்று காலையில் ஒரு பிரிட்டிஷ்-ஆசிய குடும்பத்தினர் மனதில் அலைபாயும் கவலைகளைப் பற்றியது அப்படம். அவருடைய முதல் முழுநீளப் படம் ‘பாஜி ஆன் தி பீச்' (1993). ஒரு நாள் டூர் செல்லும் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த ஆசியப் பெண்களின் அனுபவங்கள் தொடர்பான நகைச்சுவைப் படம்.

முக்கியப் படைப்பு

உலக ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த அவருடைய படம் ‘பெண்ட் இட் லைக் பெக்காம்' (2002). நகைச்சுவை நிரம்பிய இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதிக் கொண்டிருந்தபோதுதான், குரீந்தரின் பிரியமான அப்பா பாஜன் காலமானார். தந்தையின் இறப்பையொட்டித் தனது குடும்பத்தின் பின்னணியைத் தெரிந்துகொள்வதில் குரீந்தர் கூடுதல் கவனம் செலுத்தினார். அது பட உருவாக்கத்திலும் உதவியது.

பிரிட்டனில் வாழும் ஓர் ஆசிய இளம்பெண், கால்பந்து வீராங்கனையாக வேண்டும் என்ற தனது குறிக்கோளையும், பழமைவாதம் நிரம்பிய தனது குடும்பப் பாரம்பரியங்கள், எதிர்பார்ப்புகளையும் எப்படிச் சமாளிக்கிறாள் என்பதை ரசிக்கும் வகையில் சொல்லியிருந்தது இந்தப் படம்.

கதை நிகழும் களம் லண்டனின் உள்ள சவுத்ஆல் பகுதி. அங்கேதான் குரீந்தர் வளர்ந்தார் என்பதால், படத்தில் நிறைய நுணுக்கமான விவரணைகளை அவரால் சேர்க்க முடிந்தது.

பிரிட்டனில் வசிக்கும் ஆசியர்களின் அனுபவங்கள் மற்ற இனங்கள்-பண்பாட்டுக் குழுக்களைப் போலவே பன்முகப்பட்டவை. அந்த அனுபவங்களுக்கு ஒரு பொதுத்தன்மை இருக்கிறது என்பதை ஆர்ப்பாட்டம் இல்லாமல், அழுத்தமாகச் சொன்னது இப்படம்.

தனித்தன்மை

ஒருபக்கம் பாரம்பரியம் - மறுபக்கம் நவீனம், ஒரு பக்கம் இந்தியத்தன்மை - மறுபக்கம் ஆங்கிலேயத்தன்மை, ஒரு பக்கம் தன்வயப் பண்பாடு - மறுபக்கம் சர்வதேசம் என முரண்களை முன்வைப்பவை இவருடைய படங்கள். ஆனால், இந்த முரண்களுக்கு இடையே ஒரு சமநிலை உள்ளது. அதில்தான் இவருடைய படங்கள் வேர்கொள்கின்றன.

தெரியுமா?

பிரிட்டிஷ் சினிமாத் துறைக்குச் செய்த சேவைக்காக ஒ.பி.இ. (பிரிட்டிஷ் பேரரசின் அதிகாரி) என்ற விருது 2006-ல் குரீந்தருக்கு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT