50 லட்சம் இலக்கு
‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘ஆட்டோகிராஃப்’, ‘ தவமாய் தவமிருந்து’ உட்பட பல தரமான வெற்றிப் படைப்புகளைத் தந்தவர் சேரன். இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கும் அவர், தனது திரைப்படத்தை ‘சிடூஎச்’((CINEMA TO HOME) என்ற முறையின் மூலம் டிவிடி வடிவில் தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நேரடியாக ரசிகர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கிறார். சமீபகாலமாக இதன் வெளியீட்டு வேலைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு வந்த சேரன் இத்திட்டத்தின் முதல் வெளியீடாக ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை வரும் ஜனவரி 15-ம் தேதி பொங்கல் அன்று வெளியிட முடிவு செய்துவிட்டார். உலகம் முழுவதும் 50 லட்சம் டிவிடிக்கள் விற்பனை என்னும் இலக்கை வைத்திருக்கிறார் சேரன்.
படப்பிடிப்பை கட் அடிக்கும் தனுஷ்!
பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி’ படத்தில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். வரும் வெள்ளிக்கிழமை தன்னால் ‘மாரி’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது என்றும், தனக்கு அன்று விடுமுறை தேவைப்படுகிறது என்றும் ட்விட்டர் பக்கத்தின் மூலம் இயக்குநர் பாலாஜி மோகனுக்கு வேடிக்கையாக ‘லீவ் லெட்டர்’ அனுப்பியிருக்கிறார் தனுஷ். எதற்காக இந்த ‘லீவ்’ என்று ரசிகர்கள் கேட்க... எல்லாம் தெரிஞ்சும் இப்படிக் கேக்குறீங்களே... என்று பதில் கூறியிருக்கும் தனுஷ், ‘லிங்கா’ படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்கவே இப்படிப் படப்பிடிப்பை இன்று கட் அடித்திருக்கிறாராம்.
குழப்பிய காக்கி
அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘காக்கிச் சட்டை’ படத்தின் பாடல்களை இன்று வெளியிடவிருக்கிறார்கள். துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல்முறையாக போலீஸாக நடித்திருக்கும் இந்தப் படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிடத் திட்டம் வைத்திருந்தார்கள். இந்நிலையில் ‘காக்கிச் சட்டை’ படத்தின் பத்திரிகை விளம்பரங்களில் ‘பொங்கல் வெளியீடு’ என்று அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களைக் குழப்பியிருக்கிறது.
ஏற்கெனவே ஷங்கரின் ’ஐ’, அஜித்தின் ‘என்னை அறிந்தால், விஷாலின் ‘ஆம்பள’ ஆகிய மூன்று படங்களும் வெறும் 950 திரையரங்குகளைப் பகிர்ந்து கொள்வதில் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்க இப்போது ‘காக்கிச் சட்டை’யும் பொங்கல் வெளியீடு என்றால் ரசிகர்கள் மண்டை காயாமல் என்ன செய்வார்கள் என்பது பாக்ஸ் ஆபீஸ் பக்கமாய் ஒலிக்கும் குரல்.