இந்து டாக்கீஸ்

‘வசீகரா’ பாடல் 25 ஆண்டுகள் - மின்னல் வெட்டும் இசையும் வரிகளும்!

டோட்டோ

மின்னலே படத்தின் இசை வெளியீட்டு விழா 11.01.2001 அன்று நடைபெற்று 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஒரு ரசிகப் பார்வை இது...

“ஹாரிஸ் ஜெயராஜுக்கு வந்து... நான் பெரிய ரசிகன். அவர் இளையராஜா மற்றும் ரகுமானின் கலவை. அந்தப் பாடல் இப்ப வரைக்கும் என்னுடைய விருப்பத்திற்குரிய பாடல் வரிசையில் இருக்கு” - இதைச் சொன்னவர் ‘எந்திர’னில் வசீகரனாக நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சொன்னது 2017 ‘காப்பான்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில். ரஜினி அப்படி ரசித்துக் கொண்டாடிய பாடல்தான் ‘வசீகரா’.

தமிழ்த் திரை இசையுலகின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விசேஷமான மூவர் கூட்டணி அமைவதுண்டு. ஸ்ரீதர் - எம்எஸ்வி - கண்ணதாசன், கே.பாலச்சந்தர் - எம்எஸ்வி - கண்ணதாசன், பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து, மணிரத்னம் - இளையராஜா - வாலி, மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் - வைரமுத்து, செல்வராகவன் - யுவன் - நா.முத்துக்குமார், ராம் - யுவன் - நா.முத்துக்குமார் போன்றவை வெவ்வேறு தலைமுறையினரின் சிறந்த உதாரணங்கள்.

அந்த வகையில் புத்தாயிரத்தின் தொடக்கத்தில் உருவான மற்றுமொரு வலுவான, பிரத்யேகமான கூட்டணி தான் கௌதம் வாசுதேவ் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் கவிஞர் தாமரை. தமிழ் சினிமா பேசத் தொடங்கி 70 வருடம் கடந்த பின்னரே முதல் பெண் பாடலாசிரியர் கூட்டணி அமைந்தது. (தமிழ் சினிமாவின் முன்னோடியான பெண் பாடலாசிரியரான ரோஷனாரா பேகத்தின் ஒரே ஒரு பாடலான ‘குங்குமப் பொட்டின் மங்கலம் - குடியிருந்த கோயில்’ ஒரு விதிவிலக்கு).

ஒருபுறம் மணிரத்னத்தின் படங்களால் உந்தப்பட்டு, ராஜீவ் மேனனிடம் உதவியாளராகப் பணிபுரிந்த அனுபவத்துடன் விளம்பரப் படங்கள் எடுத்து, முதல் முறை திரைப்படமெடுக்க களம் இறங்கியிருந்தார் கௌதம் வாசுதேவ் மேனன். இன்னொருபுறம், கிட்டார் இசைக்கலைஞரான தன தந்தை ஜெயக்குமார் வழியில் கிட்டார் கற்று, 12 வயதில் இசையமைப்பாளர் ஜோசப் கிருஷ்ணாவிடம் கிட்டார் வாசித்து (ஊதியம் 200 ரூபாய்) கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் வாத்தியக் கருவி இசைப்பவராகவும், இந்தியாவிலேயே அதிகச் சம்பளம் பெற்ற கீபோர்டு வாசிப்பாளராக வலம் வந்ததோடு, முதல் முறை திரையிசை அமைக்கக் காத்திருந்த ஹாரிஸ் ஜெயராஜ்.

இவர்களுடன், 1983-இல் கல்கி வாரப் பத்திரிகையில் முதல் கவிதை வெளிவந்தது தாமரைக்கு. கவிதைகள், கதைகள் எழுதிப் பல பரிசுகள் வென்று, 1998-இல் இயக்குநர் சீமானின் ‘இனியவளே’ திரைப்படத்தில் ‘தென்றல் எந்தன்’ என்கிற முதல் பாடலின் மூலம் திரைக்கு அறிமுகமானார் தாமரை. பின்னர் ‘தெனாலி’யில் ‘இஞ்சியிரங்கோ’ உள்பட 12 பாடல்கள் எழுதி, கிட்டத்தட்ட 2 வருடங்கள் சரியான வாய்ப்பிற்காகக் காத்திருந்தார் கவிஞர் தாமரை.

‘மின்னலே’ திரைப்படத்தில் சேர்ந்ததும் கவிஞர் தாமரை சொன்னது இதைத்தான். “இதுவரை நான் தேடிக்கொண்டிருந்தது வாய்ப்புகளை அல்ல. எனக்கான இயக்குநரையும் இசையமைப்பாளரையும் தான். அவர்களைக் கண்டடைந்து விட்டேன்”. கூடுதலாக, இந்தக் கூட்டணியோடு இசைஞானி இளையராஜாவுடன் ‘வியட்நாம் காலனி’யில் ‘கையில் ஏந்தும் வீணை’ பாரதியில் ‘நின்னைச் சரணடைந்தேன்’, ஏ.ஆர்.ரகுமானிடம் ‘நறுமுகையே’ என்று திரைப்பாடல்களில் பிரபலமடைந்த கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இணைந்ததும் தனிச்சிறப்பு.

‘நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே’, ‘ஒரு போா்வைக்குள் இரு தூக்கம்’, ‘எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும், சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்’, ‘திருடன் போல் பதுங்கியே திடீரென்று பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை’. ‘காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே’.

இதற்கு முன்னர், ஒரு பெண் பாடும் பாடலை, அவளின் உணர்வுகளை எத்தனையோ ஆண் கவிஞர்கள் எழுதியிருந்தாலும், முதல் முறை, அது ஒரு பெண்ணின் எழுத்திலிருந்து உயிர்ப்புடன் வந்ததுதான் வசீகராவின் முதல் சிறப்பு. அது ஆணையும் பெண்ணையும் சேர்த்தே ஆச்சரியப்படுத்தியது. என் ஆசையை இதுவரை யாரும் இப்படி எழுதி வெளிப்படுத்தவில்லை என்கிற ஆச்சரியம் பெண்ணுக்கு. ஒரு பெண்ணுக்கு இப்படியெல்லாம் தோன்றும், கனவுகள் இருக்கும் என்று தெரியாத ஆச்சரியம் ஆணுக்கு!

ஒரு ஐந்து நிமிடப் பாடலில் அவ்வளவு மென்னுணர்வுகளையும் கலந்து சொன்ன அசல் தமிழ் வரிகள், கேட்டவுடன் ஒட்டிக்கொள்ளும் அபாரமான ட்யூன், மனதை வருடி வார்த்தைகளை மீறாத பிரமாதமான இசை, அதுவரையில் இல்லாத அடிக்குரலில் பாடிய ஜெயஸ்ரீயின் தேவ குரல் என எல்லாவற்றையும் சரியாகக் கலந்திருந்தது இப்பாடல்.

அதே நேரம் அப்படி ஒரு பாடலைச் சரியான முறையில் காட்சிப்படுத்த முடியாது போனதும் ஒரு குறையே. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், இதை 2025-இல் வெளிவந்த ஒரு பேட்டியில் இயக்குநர் கவுதம் மீண்டும் உறுதிப்படுத்தினார். ஒரு ரசிக பார்வையில், அதற்கு முந்தைய ஆண்டான 2000-இல் வெளிவந்த ‘காதல் சடுகுடு’ (அலைபாயுதே’ பாடலில் வரும் காட்சி அமைப்புகள் இப்பாடல் வரிகளோடு ஒத்துப்போவது ஒரு சின்ன ஆச்சரியம்.

1992 முதல் தொடர்ச்சியாக ஒன்பது வருடங்கள் ஃபிலிம் ஃபேர் விருதுகளை ஏ.ஆர். ரகுமான் மட்டுமே வென்று கொண்டிருந்ததை ‘மின்னலே’ மாற்றி அமைத்தது. சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணிப் பாடகி மற்றும் சிறந்த புதுமுக நடிகை என மூன்று விருதுகளை மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளை இந்தப் பாடல் தொகுப்பு குவித்தது.

வசீகரா மட்டுமல்லாமல் ‘அழகிய தீயே’, ‘வெண்மதி வெண்மதியே’, ‘இரு விழி உனது’ ஆகிய பாடல்கள் இன்றும் எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இத்தனை வருடங்களாகவும் வசீகராவை காலர் ட்யூனாக பயன்படுத்தி வரும் ரசிகர்கள் உலகெங்கும் உண்டு.

சில பாடல்கள் காலப்போக்கில் காலாவதியாகிவிடும். வெகு சில பாடல்கள் மட்டுமே எந்தக் கணம் கேட்டாலும் முழுதாகக் கேட்டு முடிக்காமல் நம்மை நகர விடாமல் செய்துவிடும். அந்த வரிசையில் அன்றும், இன்றும் முழுப் பாடலாக மட்டுமே கேட்க வைத்து நம்மை கட்டிப்போடும் வசீகரா பாடலுக்கு வயதாவதும் இல்லை. வசீகரம் துளி கூட குறைவதும் இல்லை.

SCROLL FOR NEXT