வட்டிக்குப் பணம் கொடுத்து, கொடூரமான முறையில் அதை வசூல் செய்பவனிடம் சிக்கிக் கொள்ளும் 4 பேர் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.
வட்டி வரதனிடம் (ஜான் விஜய்) பணம் வாங்கினால் ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் ஆளைக் கடத்திவந்து அடிமை வேலை செய்யவைத்து வசூல் செய்வான். அந்தக் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சூரி, விக்ரம் பிரபு குழுவினர். விக்ரம் பிரபு மட்டும் தன் ஹீரோயிஸத்தால் வேலை செய்யாமல் தப்பிக்க, மற்றவர்கள் குற்றேவல்களில் மாட்டிக்கொள்கிறார்கள். அங்கு ஒரு பெண் (ஸ்ரீதிவ்யா) மீது விக்ரம் காதல்வயப்படுகிறார். அந்தப் பெண்ணை ஜான் விஜய் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்திருக்கிறார். அந்தத் திருமண ஏற்பாட்டை முறித்துக் காதலர்கள் ஒன்று சேர்கிறார்கள்.
துளிகூட சீரியஸ் தன்மை ஒட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் இயக்குநர் கவனமாக இருந்திருக்கிறார். கொடூர வில்லன் வட்டி வரதன், அவனிடம் மாட்டிக்கொள்ளும் அபலைப் பெண், இவர்கள் நடுவில் பிரவேசிக்கும் நாயகன் ஆகிய புள்ளிகளை வைத்து அதிரடியாக ஒரு ஆக்ஷன் படம் எடுத்திருக்க முடியும். ஆனால் ‘காமெடியே கதி’ என்று களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர் எழில்.
முதல் காட்சியிலேயே தன் காமெடி நோக்கத்தைக் காட்டி விடுவதால் படத்தில் கேள்வி என்று எதுவும் கேட்கமுடியாது. அடுத்தடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எந்த லாஜிக்கும் பார்க்கக் கூடாது என்ற ரீதியில் படம் நகர்கிறது.
இதுபோன்ற படங்களில் காட்சிகள் விறுவிறுப்பாக நகர வேண்டும். உண்மையிலேயே சிரிப்பு வரவேண்டும். அந்த இரண்டையும் இந்தப் படம் நிறைவேற்றுகிறதா என்றால், திருப்தியான பதிலைச் சொல்லமுடியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் சூரியும் மற்றவர்களும் நம்மைச் சிரிக்கவைக்கப் படாதபாடு படுகிறார்கள். எல்லாமே கிச்சு கிச்சு மூட்டும் ரகம். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சிங்கம்புலி, சிங்கமுத்து ஆகியோர் சூரியுடன் சேர்ந்து அவ்வப்போது செய்யும் ரகளைகள் படத்தை நகர்த்த உதவுகின்றன. கோமாளித்தனமான காட்சிகளுக்குத் திரையரங்கில் சிரிப்பலை எழத்தான் செய்கிறது. ஆனால், மேலான நகைச்சுவைக்கான சிறு முயற்சிகூட இல்லை. மனம் விட்டுச் சிரிக்கும் காட்சி என்றுகூட எதுவும் இல்லை. கல்யாண வீட்டை துக்க வீடாக மாற்றும் காட்சி விதிவிலக்கு.
என்னதான் கேள்வி கேட்கக் கூடாது என்றாலும், நாயகனிடம் நாயகி அளவுக்கு அதிகமாகக் கண்ணாமூச்சி ஆடுவதை ஏற்கமுடியவில்லை. காதலை ஒளித்துவைத்துக்கொண்டு விளையாடுவது சரிதான். ஆனால் புதிய இடத்தில், அபாயகரமான சூழலில்கூடவா ஒரு இளம்பெண் இப்படி விளையாடுவாள். அப்புறம் அந்தத் தீவிரவாதி சமாச்சாரம். காமெடி என்றாலும் இவ்வளவு அபத்தமாக ஒரு கதாபாத்திரமா? கண்ணைக் கட்டுகிறது.
சண்டைக் காட்சிகளில் நாய கன் விக்ரம் பிரபு தூள் கிளப்பு கிறார். காதல் காட்சிகளிலும் ரசனை யோடு நடிக்கிறார். இவர் காமெடி செய்யாவிட்டாலும் காமெடி நடிகர் களுடன் இயல்பாக இணைந்து விடுகிறார். இதுவரை கனமான வேடங்களைத் தேர்ந்தெடுத்து நடித்த விக்ரம் பிரபு முதல் முறையாக பலவீனமான வேடத் தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ‘எனக்கு காமெடியும் வரும்’ என்று காட்டுவது அவர் நோக்கமாக இருக்கலாம். ஆனால் கதையே இல்லாமல் சின்னச் சின்ன கலாட் டாக்களால் நகரும் படம் எந்த அளவுக்கு அவரது இமேஜை கூட்ட உதவும் என்பது தெரியவில்லை.
பார்க்க அழகாக, துருதுரு வென்று இருக்கிறார் ஸ்ரீதிவ்யா. காதலை ஒளித்துவைத்துக் கொண்டு கண்டிப்பு முகம் காட்டும் ரோலில் வெகு இயல்பு. படத்தை நகர்த்திச் செல்லப் பெரிதும் உதவுகிறார் சூரி. கோணங்கித்தனமான வில்லத்தனத்தில் ரசிக்க வைக்கிறார் ஜான் விஜய்.
இசை டி. இமான். பாடல்கள் எதுவும் புதிதாக இல்லை. சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் நன்கு படமாக்கப்பட்டுள்ளன. கதை என்று எதுவுமே இல்லாமல் சிரிக்கவைக்க முயன்றிருக்கிறார்கள். கேள்வி கேட்காமல் உட்கார்ந்தால் கொஞ்சமாக சிரிக்கலாம்.