பாலிவுட்டின் ‘போஸ்டர் பாய்’ என்று அழைக்கப்படும் இயக்குநர் அனுராக் காஷ்யப், பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டான ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ படத்துக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் ‘அக்லி’(Ugly). டிசம்பர் 26-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் ட்ரைலர் பார்வையாளர்களிடம் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அனுராக் காஷ்யப், இந்த முறை பத்து வயதுச் சிறுமியின் கடத்தலைப் பின்னணியாக வைத்து உணர்வுபூர்வமான த்ரில்லர் திரைக்கதையை எழுதியிருக்கிறார். “இந்தப் படம் உணர்ச்சிகளின் போராட்டம், ஆழமான த்ரில்லர் என்ற இரண்டும் கலந்த கலவையாக இருக்கும். ஒருவன் தன் வாழ்க்கையை முக்கியமான கட்டத்தில் திரும்பிப் பார்க்கும்போது, தன் கனவுகள் எதுவுமே நிறைவேறவில்லை என்பதை உணர்கிறான். அந்தத் தருணத்தில் வாழ்வதற்கு அறநெறிகள் தேவையில்லை என்று முடிவெடுக்கிறான். அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிய படம்தான் இது” என்கிறார் அனுராக் காஷ்யப்.
மும்பையில் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் சந்திக்கும் உறவுச் சிக்கல்கள், வன்முறை, பேராசை, சுயநலம், ஊழல் போன்றவற்றின் கோர முகத்தை இப்படத்தில் அனுராக் காஷ்யப் பதிவுசெய்திருக்கிறார். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கற்பனைக்கு அப்பாற்பட்ட சுயநலவாதிகளாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். மனிதர்களின் மிதமிஞ்சிய மோசமான பண்புகள் அனைத்தும் வெளிப்படும்படி இந்தப் படத்தில் கதாபாத்திரங்களை அமைத்திருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப். அதனால்தான் படத்துக்கு ‘அக்லி’ என்று பெயர் .
‘அக்லி’ 2013-ல் வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால், அனுராக் காஷ்யப் படத்தில் வரும் புகைபிடிக்கும் காட்சிகளில் ‘புகைபிடிப்பது உடல்நலத்துக்குக் கேடு’ என்ற வாக்கியத்தைப் போட முடியாது என்று மறுத்ததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்திய திரைப்படத் தணிக்கைக் குழுவும், பாம்பே உயர் நீதிமன்றமும் வாக்கியம் இல்லாமல் படம் வெளியாகக் கூடாது என்று கூறிவிட்டன.
கிட்டத்தட்ட ஓர் ஆண்டு பிடிவாதத்துக்குப் பிறகு ‘புகைபிடிப்பது உடல்நலத்துக்குக் கேடு’ என்ற வாக்கியத்துடன் படத்தை வெளியிட ஒப்புக்கொண்டிருக்கிறார் அனுராக் காஷ்யப். “சுகாதார அமைச்சகம் புகையிலைக்கு எதிரான பிரச்சாரங்களுக்குப் படங்களைப் பயன்படுத்தக் கூடாது. இப்போது சமரசம் செய்துகொண்டாலும், தொடர்ந்து இந்த வழக்கத்தை எதிர்த்துப் போராடுவேன்” என்று சொல்கிறார் காஷ்யப்.
படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் ராகுல் பட், ரோனித் ராய், தேஜஸ்வினி கோல்ஹாபுரே, அன்ஷிகா ஸ்ரீவஸ்தவா, கிரிஷ் குல்கர்னே, வினித் குமார் சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரயன் மேக் ஓம்பர் உடன் இணைந்து ஜி.வி. பிரகாஷ் குமார் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.