கடவுளுக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பு மிக விசித்திரமானது. தன் காதல் வெற்றி அடையும்பொழுது தனது ஆற்றலாலும் முயற்சியாலும் மட்டுமே அது கைகூடியது என்று நினைக்கும் மனிதன் அது தோல்வியடையும்போது விதியையும் கடவுளையும் ஏசுவது வழக்கம்.
“கடவுள் மனிதனாகப் பிறந்து காதலித்திருந்தால்தானே அவனுக்குத் தெரியும் இதைப் பற்றி” என்ற தமிழ் வரிகளின் கடுமையான உணர்வை, “உலகைப் படைக்கும் கடவுளே, இப்படி மனிதருக்குக் காதலைக் கொடுத்துப் பிறகு பிரிவையும் தந்து அங்கிருந்து வேடிக்கை பார்க்கிறாயே உனக்கும் இப்படி ஆகும் அல்லவா” என்ற மெலிதான கண்டன உணர்வுடன் இணையும் பொதுவான இந்த மனித இயல்பை அழகாக எடுத்துக்காட்டும் தமிழ்-இந்தி திரைப் பாடல்களைப் பார்ப்போம்.
இந்தித் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படும் தீஸ்ரிகசம் (மூன்றாவது சத்தியம்) என்ற படத்தில் இடம் பெற்ற இப்பாடலை எழுதியவர் ஹஸ்ரத் ஜெயப்பூரி. இசை சங்கர் ஜெய்கிஷன். நடிப்பு ராஜ்கபூர்-வகிதா ரஹ்மான்.பாடலின் பொருள் அறிந்து அதற்குரிய பரிகாசக் குரலில் பாடலைப் பாடியவர் முகேஷ்.
பாடல்:
துனியா பனானேவாலே
கியா தேரி மன்மே சமாயி
து நே காஹேகோ துனியா பனாயி
காஹே பனாயி து நே
மாட்டிகோ புத்லே
தர்தி யே பியாரி பியாரி
முக்டே யே உஜ்லே.
பாடலின் பொருள்:
உலகைப் படைப்பவனே
என்ன உறைந்தது (நினைத்து) உன் மனதில்
நீ எதற்காக உலகைப் படைத்தாய்
எதற்காக மண் பதுமைகளை
அழகான அன்பு முகங்களாகப் படைத்தாய்
எதற்காக உலகின் இந்த விளையாட்டையும்
அதில் இளமையின் துள்ளலையும் செய்தாய்
(இதையெல்லாம் படைத்துவிட்டு)
சப்தம் இன்றி வேடிக்கை பார்க்கிறது
ஆஹா உன் இறையாண்மை
நீயும் தடுமாறுவாய் (இந்த மாதிரி)
மனதைப் படைத்துவிட்டு (அதனால்)
காதலின் சூறாவளியை மனதில் மறைத்துக்கொண்டு
ஏதோ சித்திரம் (காதல் வடிவு)
உன் கண்களிலும் இருக்கும்
கண்ணீர் பெருகும் உன்
கண் இமைகளிலிருந்தும்
சொல் நீயே உனக்கு யாரிடமாவது
காதலை ஏற்பட செய்தாயா
(எல்லோரிடமும் நீ)
காதலை ஏற்படுத்தி வாழக் கற்பித்தாய்
சிரிக்கக் கற்பித்தாய் அழுவதற்குக் கற்பித்தாய்
வாழ்க்கைப் பாதையில் துணையைச்
சந்திக்க வைத்தாய்
துணையை அளித்து நீ (உறங்கிக் கிடந்த) கனவுகளை விழிக்கச்செய்தாய்
கனவுகளை விழிக்கச் செய்து {பிறகு}
எதற்காகப் பிரிவினை தந்தாய்.
என்ன உறைந்தது
உன் மனதில்
நீ எதற்காக உலகைப் படைத்தாய்?
இப்பாடலின் கண்டன உணர்வு சற்றும் குறையாமல் அதே சமயம் தனக்கே உரிய எளிய, ஆனால் மனதைத் தாக்கும் கடுமையான கவி வரிகளுடன் கண்ணதாசன் எழுதிய பாட்டு அவரது அப்போதைய ஆளுமையையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
பாடல் இடம் பெற்ற படம் : வானம்பாடி
வரிகளின் உணர்வுக்கு மெருகேற்றிப் பாடியவர் : டி.எம் சௌந்தர்ராஜன்.
படம் வெளிவந்த ஆண்டு : 1962.
தமிழ்ப் பாடல்:
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்-அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்.
(கடவுள்)
எத்தனை பெண் படைத்தான்
எல்லோருக்கும் கண் கொடுத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையென்னும் விஷம் கொடுத்தான்-அதை
ஊரெங்கும் தூவிவிட்டான்
உள்ளத்திலே பூசவிட்டான்
ஊஞ்சலை ஆடவிட்டு
உயரத்திலே தங்கிவிட்டான்
(கடவுள்)
அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடாடா ஆடு என்று
ஆடவைத்து பார்த்திருப்பேன்
படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண் குலத்தை
படைக்காமல் நிறுத்தி வைப்பான்.
(கடவுள்)
படங்கள் உதவி: ஞானம்