கேரள மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை ஐந்துமுறை பெற்ற நகைச்சுவை நடிகர் ஜெகதீ ஸ்ரீகுமார். மம்முட்டி, மோகன்லால் படங்களாக இருந்தாலும், திலிப், சுரேஷ்கோபி, ஜெயராம் உட்பட முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தாலும் தவறாமல் இடம்பெறும் ஒரே நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். இதுவரை 1,200 படங்களில் நடித்திருக்கும் இவரைத் திரையில் பார்த்தாலே மலையாள ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். முகத்தை அஷ்டகோணலாக்கியும் வசன உச்சரிப்பு வழியாகவும் வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பதில் இவருக்கு இணை இவர்தான்.
கடந்த 2012-ம் ஆண்டு கோழிக்கோடு நகருக்குப் படப்பிடிப்புக்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் சென்டர் மீடியனில் இவரது கார் மோதியது. இதில் ஸ்ரீகுமார் கடுமையான காயமடைந்தார். 14 மாதங்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய ஸ்ரீகுமார் தனது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்.
உயிர்பிழைத்ததே பெரிய விஷயம் என்ற நிலையில் அவரால் பேசவோ, முன்புபோல் சிரிக்கவோ முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள். தன் மாநில மக்களைக் கடந்த முப்பது ஆண்டுகளாக இடையறாமல் சிரிக்கவைத்த ஜெகதீ ஸ்ரீகுமார், பேச முடியாமல் போனதில் அவரது ரசிகர்களுக்குப் பெரும் வருத்தம்.
இதற்கிடையில், ஜெகதீ ஸ்ரீகுமாரின் மனைவி ஷோபா, தன் கணவருக்கு நேர்ந்த விபத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி, இன்சூரன்ஸ் நிறுவனம் மீது மோட்டார் வாகனத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஜெகதீஷ் மனைவி ஷோபா 13 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டிருந்தார். ஆனால், தீர்ப்பாயம் 5 கோடியே 90 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை ஏற்று இழப்பீட்டுத் தொகையை ஸ்ரீகுமாரின் வீட்டுக்கே சென்று வழங்கியது