தமிழ்த்திரையின் டவுன்ஹாலான கோடம்பாக்கத்தில் கனவு களோடு வாழும் உதவி இயக்கு னர்களின் அறைகளுக்கு விசிட் அடித்தால் ஒரு உண்மை விளங்கும். அவர்களது அறைகளில் சாப்பாடு இருக்கிறதோ இல்லையோ, உலக சினிமா டிவிடிக்கள் இறைந்து கிடக்கும். அவற்றில் ஈரானியப் படங்களும் இடம் பிடித்திருக்கும்.
இவற்றை நாளைய இயக்குனர்களாக உருவாக இருக்கும் இன்றைய உதவி இயக்குனர்கள் இங்கே விரும்பிப் பார்ப்பதோடு சரி. இந்தப் படங்களின் தாக்கத்தை உள்வாங்கி, தமிழுக்கான படைப்பை தனித்த ஆளுமையுடன் தர முயற்சிக்கிறவர்கள் வெகுசிலர்தான். உலகசினிமா பார்க்கும் அனுபவம் கொண்ட பெரும்பாலான அறிமுக இயக்குனர்கள் எடுக்கும் படங்கள், இங்கே வெறும் மசாலாப் படங்கள். தணிக்கைக் குழுவின் கடுமையான வெட்டுக்கு ஆளாகும் வில்லங்கமான வன்முறையும், க்ளிஷேக்களின் நெடி கமறும் மசாலா வாசனையும்தான் இன்றைய தமிழ்சினிமா என்ற நிலை இருக்கிறது.
ஆனால் நமது உதவி இயக்கு னர்கள் கொண்டாடும் ஈரானின் சினிமா சூழல், இந்தியாவில் இருப்பதைப் போன்றதல்ல. அங்கே திரைப்படத் தணிக்கை என்பது மிகப்பெரிய முட்டுக்கட்டை மட்டுமல்ல இரும்புச் சுவர். மதம் சார்ந்தோ, அரசியல் சார்ந்தோ எதையும் அங்கே எடுத்துவிட முடியாது. மீறி எடுத்தால் வீட்டுச்சிறை. இதனால் பல படைப்பாளிகள் நாட்டை விட்டு வெளி யேறிவிட்டார்கள்.
சொந்த மண்ணைப் பிரியமுடியாத படைப்பாளிகள் அங்கேயே இருந்து, குழந்தைகளையும், உறவுநிலைகளையும் முதன்மைக் கதாபாத்திரங்களாக்கி, நுட்பமான காட்சி மொழிவழியாக அரசியலை பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விளைவு! தணிக்கை தந்த அழுத்தத்தால் அங்கே திரைக்கலை செழித்திருக்கிறது. உலக சினிமா வுக்கு மிகச்சிறந்த படங்களை ஈரான் இன்றளவும் தந்துகொண்டிருக்கிறது.
இன்று சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில், உட்லாண்ட்ஸ் திரையரங்கில் மாலை 4.30 மணிக்கு திரையிடப்படும் ‘பர்வெஸ்’ ஈரானிய இயக்குனர் மஜித் பார்ஸெஹார் இயக்கியிருக்கும் படம். திருவனந்த புரத்தில் நடந்து முடிந்த கேரள சர்வ தேசப் படவிழாவில் சிறந்த படமாக 14 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை, ‘சொர்ணசகோரம்’ விருதுடன் வென்றிருக்கும் இந்தப் படம், தனித்து விடப்படும் 50 வயது ‘வயோதிக’ பிரம்மச்சாரி இளைஞனின் திசை மாறும் வாழ்க்கையை, யதார்த்தமாக முன்வைக்கிறது.
பர்வெஸ், 50 வயதுவரை தனது தந்தையைச் சார்ந்து வாழும் ஒருவன். உடல் பருமனால் திருமணத்துக்கும் தகுதி இல்லாதவனாக நிராகரிக்கப் பட்டவன். இந்நிலையில் 2வது திருமணம் செய்துகொள்ள அவ னது தந்தை முடிவெடுக்கிறார். தந்தையின் முடிவால் வீட்டுக்கு வெளியே அனுப்பப்படுகிறான். பர்வெஸ் தனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிந்ததா என்பதை நோக்கி நகரும் கதையின் வழியாக, இயக்குனர் பார்ஸெஹார், மறைமுகமான சமூகவிமர்சனத்தை அழுத்தமாக முன்வைக்கும் கலைப்படைப்பாக பர்வெஸ் கதாபாத்திரம் உயிர்பெற்றிருக்கிறது.
இந்தப்படத்துடன் டென்மார்க் நாட்டிலிருந்து வந்திருக்கும் ‘தி ஷுட்டர்’, ஆனந்த் காந்தி இயக்கி யிருக்கும் ‘ஷிப் ஆஃப் தஸிசியஸ்’, ‘ஜெர்மனியிருந்து வந்திருக்கும் ‘இல்யூஷன்’, ஆகிய படங்களும், தமிழ்ப்பட இயக்குநர்களான வி.இஸட். துரை இயக்கியிருக்கும் ‘6 மெழுகுவர்த்திகள்’, பரத்பாலா இயக்கியிருக்கும் ‘மரியான்’ ஆகிய தமிழ்ப்படங்களும், ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டி யிருக்கின்றன.