அஞ்சான் படத்துக்குப் பிறகு அதிரடியான பொழுதுபோக்குப் படம் ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த சூர்யா டிக் அடித்தது வெங்கட் பிரபு சொன்ன த்ரில்லர் கதையை. ‘மாஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் நயன்தாரா, ஏமி ஜாக்ஸன் என இரண்டு ஹீரோயின்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். நகைச்சுவைக்கு பிரேம்ஜி அமரன், இசைக்கு யுவன் ஷங்கர் ராஜா என தனது பிராண்ட் கூட்டணியோடு இம்முறை அமானுஷ்யப் படங்களுக்கே உரிய திரைக்கதை, புதுமையான கிராஃபிக்ஸ் காட்சிகள் என்று அதிரடி வித்தியாசம் காட்ட இருக்கிறாராம் வெங்கட் பிரபு.
‘மாஸ்’ படச் செய்திகள் இன்னும் வெளியே கசியாத நிலையில் சூர்யா, நயன்தாரா சம்பந்தப்பட்ட சில காட்சிகளைப் படமாக்கியிருக்கிறாராம் இயக்குநர். இந்நிலையில், கதையில் நயன்தாராவுக்கே படத்தில் அதிகம் முக்கியத்துவம் இருக்கும் விதமாகக் கதை மாற்றி அமைக்கப்பட்டது என்றும் இதனால் கால்ஷீட் இல்லை என்று கூறி இப்படத்திலிருந்து ஏமி ஜாக்ஸன் விலகிவிட்டதாகவும் பரபரப்பு கிளம்பியது. இதுகுறித்து ‘மாஸ்’ படக்குழுவைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ஏமி ஜாக்ஸன் ‘மாஸ்’ படத்திலிருந்து வெளியேறவில்லை எனவும், அவருக்காக ஒதுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கண்டிப்பாக அவர்தான் நடிக்கவிருக்கிறார் என்றும் உறுதிப்படுத்தினார்கள்.
இதற்கிடையில், லன்டனிலிருந்து சென்னைக்கு வந்திருப்பதாக ஏமி ஜாக்சன் ‘ட்வீட்’ செய்திருந்தார். ஏமி ஜாக்ஸனுக்கான காட்சிகள் பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே படமாக்கப்படவிருக்கிறதாம். ஏமி அழகான ஆவியாக நடிக்கிறார் என்ற தகவலும் கிடைக்கிறது. ஆக, வதந்திகளை நம்பாதீர் என்பதுதான் இப்போது ‘மாஸ்’ படக் குழு சொல்லும் சேதி.