காற்று மண்டலமெங்கும் எந்நேரமும் கலந்திருப்பவை திரையிசைப் பாடல்கள். அப்பாடல்கள் பற்றிச் சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் பாடலாசிரியரின் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. ஒவ்வொரு திரைப்பாடலும் ஒரு படைப்பே என்கிற பார்வையில், அதன் படைப்பாளியைக் குறிப்பிடாமல் விடுவதும், மறக்கடிக்கப்பட்ட பாடலாசிரியர்களைப் பற்றிப் பதியாமல் விடுவதும் வரலாற்றுப் பெருங்குறை.
அந்த வகையில், அவர்களைப் பற்றி ஒரு சமகாலப் பாடலாசிரியரே முன்வந்து, தனது முன்னேர் உழுது சென்ற பாதையைத் தேடியலைவதும் அதைப் புத்தகமாகப் பதிப்பிப்பதும் செயற்கரிய செயல். அதைக் கவிஞர், பாடலாசிரியர் யுகபாரதி திறம்படச் செய்துள்ளார்.
‘கடந்து போகக்கூடியதே காலம்’ எனத் தொடங்கி ‘அப்படியொரு நாளே வரப்போவதில்லை’ என 492 பக்கங்களில் முடியும் இந்தத் திரையிசை ஆவணம் கவிஞர்.நா.காமராசன், புலமைப்பித்தன், கா.மு.ஷெரீப், முத்துலிங்கம், ச.து.ச.யோகியார், சுரதா, மருதகாசி, உடுமலை நாராயணகவி, மு.மேத்தா, பஞ்சு.அருணாச்சலம், மு.கருணாநிதி, எம்.ஜி.வல்லபன், அறிவுமதி, கங்கை அமரன், ஆலங்குடி சோமு, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கம்பதாசன், கு.மா.பாலசுப்ரமணியம், தஞ்சை ராமையாதாஸ், கே.டி.சந்தானம் எனத் தமிழின் 20 முதன்மையான கவிராயர்கள் பாடலாசிரியர்களாக மாறிய கதையை, அவர்கள் காலத்தை, பின்புலத்தை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் பின்தொடர்ந்த அரசியலை மிகுந்த கவனத்துடன் பதிவுசெய்திருக்கிறார். இத்தனையையும் அவர் சுயதம்பட்டமில்லாமல், சார்பில்லாமல் ஒரு ரசிகனாக, கவிஞராகத் தன்னுடைய 20 வருடப் பாடல் அனுபவத்தைத் துணைகொண்டு, போதிய தரவுகளுடன் எழுதியிருக்கிறார்.
சுதந்திரப் போராட்டக் காலம், சுயமரியாதைக் காலம், திராவிட ஆட்சிக் காலம், திராவிட எதிர்ப்புக் காலம் என்று நான்கு காலநிலைகளில் மிக முக்கியமாக அன்றைய சமூக அரசியல் சூழலின் பின்னணியில் பாடலாசிரியர்களின் வரலாற்றை விவரித்திருக்கிறார். இந்த நூல் பாடலாசிரியர்களின் வரலாற்றை எழுதும் ஒரு தொடக்கமாக இருக்கும் என்றும் குறிப்பிடுகிறார்.
அதேபோல் கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற அதிபிரபலமான கவிஞர்களைத் தவிர்த்த காரணத்தைச் சொல்லி, அதிகம் பேசப்படாத கவிப்பெரியோர்களை வியந்திருக்கிறார். பிற்சேர்க்கையாக இதற்காகப் பயன்பட்ட நூல்களின் பட்டியலைச் சேர்த்திருந்தால், மேலும் இந்தத் தலைப்பை ஆராய்பவர்களுக்குப் பயனளிக்கும்.
தொடர்புக்கு: tottokv@gmail.com
நேற்றைய காற்று
யுகபாரதி
விலை ரூபாய் 500
நேர்நிரை வெளியீடு
தொடர்புக்கு: 9841157958