தனித்துவமும் வீச்சும் கொண்ட நவீன ஓவியங்களைப் படைத்தவர் ஓவியர் வீரசந்தானம். வரும் ஜூலை 13 அன்று அவரது முதலாம் நினைவு நாள். தமிழ்த் தேசியப் போராளியாகத் திகழ்ந்த பன்முக ஆளுமையான அவரை முதன்மைக் கதாபாத்திரமாக நடிக்க வைத்து, ‘ஞானச் செருக்கு’ என்ற சுயாதீனத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தரணி ராஜேந்திரன்.
சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் உட்படப் பல சர்வதேச விருதுகளைப் பெற்று தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்திருக்கும் நிலையில் தரணி ராஜேந்திரனுடன் உரையாடியதிலிருந்து…
‘ஞானச் செருக்கு’ எதைப் பற்றிப் பேசுகிறது; இது யாருக்கான படம்?
‘ஞானச் செருக்கு’ படைப்பு விடுதலையைப் பற்றிப் பேசுகிறது. அதிகாரத்துக்கு மண்டியிடாத ஒரு அசலான கலைஞனின் வாழ்வியல் தேடல்தான் படத்தின் கதை.
இன்றைய அரசியல் சூழலைத் தீவிரமும் விறுவிறுப்பும் மிக்க காட்சி மொழியுடன் எடுத்துக்காட்டும் படம். இது அனைத்து மக்களுக்குமான படைப்பு. குறிப்பாக, தங்களுக்கான கனவை நேசித்தபடி பயணிக்கும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ‘ஞானச் செருக்கு’ நம்பிக்கையை அள்ளிக்கொடுக்கும்.
உங்களுக்கும் ஓவியர் வீரசந்தானத்துக்குமான உறவு பற்றிக் கூறுங்கள். அவரை ‘ஞானச்செருக்’கில் நடிக்கத் தேர்ந்தெடுத்தது ஏன்?
எனக்கும் ஓவியருக்கும் 2015-ல் அறிமுகம் ஏற்பட்டது. அன்று முதல் அவரது இறுதி நாட்கள்வரை நாங்கள் பயணித்தோம். அவர் இறப்பதற்கு முதல் நாள் இரவு நாங்கள் ஒன்றாக உணவு உண்டோம்.
வீரசந்தானத்தை ஓவியர் எனும் பிம்பத்தில் மட்டும் அடக்கிவிட முடியாது. அவர் பன்முகம் கொண்டவர். முக்கியமாக அவர் ஒரு தமிழ்த் தேசிய போராளி. போராளிகள் துப்பாக்கி கொண்டு மட்டும் போராடுவதில்லை, சில நேரம் தூரிகை கொண்டும் பேனா கொண்டும் தோன்றுகிறார்கள்.
வீர சந்தானம் ஒரு தூரிகைப் போராளி. எழுத்து, கவிதை, நடிப்பு, பேச்சு, களப்போராட்டம் என அவரது சமூகச் செயல்பாடுகள் விரியும். அவரை நான் தேர்வுசெய்ய அதுவும் ஒரு காரணம். வெனிசுலா நாட்டின் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘ஞானச்செருக்கு’ பங்குபெற்றது. அங்கே அவர் சிறந்த நடிகராகத் தேர்வுசெய்யப்பட்டார். வீரசந்தானம் அடுத்த தலைமுறையின் சொத்து. அவரின் தொடர்ச்சியாக நான் இயங்க முயல்கிறேன்.
ஒரு சுயாதீனத் திரைப்படத்தை உருவாக்குவதில் என்ன மாதிரியான சவால்களைச் சந்தித்தீர்கள்?
சுயாதீனத் திரைப்பட உருவாக்கத்தில் இறங்கும் பெரும்பாலான படைப்பாளிகள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிதான் எனக்கும். என் நண்பர்கள், உறவுகள், படக்குழுவினர் எந்த ஒரு பொருளாதார எதிர்பார்ப்பும் இல்லாமல் துணை நின்றார்கள். அதனால்தான் பெரிய வணிகப் படங்களுக்கு இணையான வடிவமைப்பை ஒரு சுயாதீனப் படத்துக்கும் தரமுடியும் என்பதில் வெற்றிபெற்றோம்.
அதேபோல் வீரசந்தானத்தின் அர்ப்பணிப்பும் முதன்மைக் கதாபாத்திரத்துக்கான அவரது உணர்வுபூர்வ நடிப்பும் படத்தைப் பெரும் படைப்பாக உருவாக்கியது. ஆனால், ஓவியரின் திடீர் மறைவு எங்களை நிலைகுலைய வைத்தது.
பிறகு மனம் தளராமல் பல ஏற்ற இறக்கங்களைக் கடந்துதான் ‘ஞானச் செருக்கு’ உருவானது. கடந்துவந்த பாதையை இன்று திரும்பிப் பார்க்கும்போது, உதட்டில் மலர்ச்சி தோன்றுகிறது; மனம் இலகுவாகிறது.
படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி?
‘ஞானச்செருக்கு’ தொழில்நுட்பப் பிரிவில் இதுவரை மூன்று சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. பெரிய பட்ஜட் படங்களுக்கு இணையான வடிவமைப்பும் படமாக்கமும்தான் ‘ஞானச்செரு’க்கை உலக அரங்கில் கௌரவித்தது என நம்புகிறேன் தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள்தாம்.
கோபி துரைசாமியின் ஒளிப்பதிவு, மகேந்திரனின் படத்தொகுப்பு, சக்கரவர்த்தியின் இசை ஆகிய முக்கியத் தொழில்நுட்பங்களுடன் கிராஃபிக்ஸ், வண்ணக் கலவை, சிறப்பு ஒலியாக்கம் ஆகிய பிரிவுகளில் பங்களித்த அரவிந்த், லோகேஷ்வரன், கண்ணன் ஆகியோரையும் மறக்க முடியாது.
‘ஞானச் செருக்கு’ தொட்டிருக்கும் உயரம்?
சர்வதேசப் படவிழாக்களுக்கு அனுப்பிவைக்க நுழைவுக் கட்டணமோ போட்டிப் பிரிவுகளில் மோத பங்கேற்புக் கட்டணமோ செலுத்த முடியாத நிலையில் தற்போது இருக்கிறேன். கையில் பணம் இருந்தவரை 30 முக்கியப் பட விழாக்களுக்கு அனுப்பினேன். இன்றுவரை ஆறு சர்வதேச விருதுகளையும் 20-க்கும்
மேற்பட்ட சர்வதேசப் படவிழாக்களில் சிறந்த படத்துக்கான பரிந்துரைகளையும் பெற்றுள்ளது. இது மேலும் தொடரும். படத்தைத் திரையரங்க வெளியீட்டுக்கும் எடுத்துவர வேண்டும். வீரசந்தானத்தின் ஆன்மா அதற்கு உதவும் என்ற நம்பிக்கை இருக்கிறது.