ச
மூகத்தின் இருவேறு அடுக்குகளில் வாழும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எதிர்பாராமல் அரும்பி மலரும் காதலையும், அதனால் விளையும் உறவுச் சிக்கலையும் ‘உலகமயமாக்கல்’ எனும் பயாஸ்கோப் வழியாகச் சொல்வதுதான் ‘தரமணி’.
காதலிலும் பணத்திலும் ஏமாற்றப்பட்டு விரக்தியடைந்த இளைஞன் வசந்த் ரவி. கணவனைப் பிரிந்து குழந்தையோடும், தன் தாயோடும் தனித்து வாழும் ஆங்கிலோ இந்தியப் பெண் ஆண்ட்ரியா. இருவருக்கும் நட்பு மலர்ந்து காதலாகிறது. இணைந்து வாழ்கின்றனர். ஐ.டி. கம்பெனியில் 80 ஆயிரம் சம்பளம் வாங்கி, தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் துணிச்சல் மிக்க பெண் ஆண்ட்ரியாவின் வாழ்க்கை முறையில் ஒன்றமுடியாமல் தவிக்கிறான் வசந்த். நடத்தையில் சந்தேகம், சண்டையால் விரிசல் ஏற்பட்டுப் பிரிகிறார்கள். அதற்குப் பிறகு தவறான வழியில் தடம் மாறும் வசந்த், இறுதியில் திருந்தி காதலியை நோக்கித் திரும்புகிறானா? புதிய உறவால் ஆண்ட்ரியா எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன? அவனை அவள் ஏற்கிறாளா? இதை ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட மாதிரி’ (இயக்குநர் ராம் படம் நெடுகிலும் அடிக்கடி சொல்வது போல) சொல்கிறது தரமணி.
வழக்கமான காதல் கதை பாணியில் இருந்து விலகி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். ஆண்ட்ரியா, வசந்த், சவும்யா தொடங்கி, சாலையில் அடிபட்டுக் கிடக்கும் பிழைக்கவந்த வடமாநில கட்டிடத் தொழிலாளி வரை, பெரும்பாலான கதாபாத்திரங்கள் உலகமயமாக்கலின் குழந்தைகள் என்று நம்ப வைத்துவிடுகிறார். உலகமயமாக்கல் உருவாக்கி வைத்திருக்கும் எண்ணற்ற சிக்கல்களை ஒரு காதல் கதைக்குள் ‘வாய்ஸ் ஓவர்’ மெசேஜ்களாக இயக்குநர் சொல்லிச் செல்லும்போது திரையரங்கில் கரவொலி, சிரிப்பொலியோடு ‘கமென்ட்களும்’ எழுகின்றன.
சுய சார்போடும் சுயமரியாதையோடும், அதே நேரத்தில் கனிவோடும் உயர்ந்து நிற்கிறது ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம். தோற்றம், உடல்மொழி, குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கு என அனைத்திலும் பாத்திரத்தோடு கச்சிதமாகப் பொருந்துகிறார். ஆனாலும், இன்னும் எத்தனை காலம்தான் தறுதலை மன்னன்களை உருகி உருகிக் காதலிக்கும் பொறுப்பான பெண்களை நம் தமிழ் சினிமா காட்டப்போகிறதோ! காதலனிடம் காதலி, ‘‘நீ எப்போதுதான்டா வேலைக்குப் போவே?’’ என ஒருதரம்கூட கேட்காவிட்டாலும் திரையரங்கில் பார்வையாளர்கள் கத்தி கூப்பாடு போடுகிறார்கள். அதிகம் ஸ்டீரிரோ டைப் ஆண்களையே அவர் எதிர்கொள்வதாக காட்டியிருப்பது வலிந்து உருவாக்கப்பட்ட முரண்.
முதல்பாதி முழுவதும் இயல்பான நடிப்பைத் தந்திருக்கும் வசந்த் ரவி, 2-ம் பாதியில் பின்தங்கிவிடுகிறார். தரமணி ரயில்நிலையக் காவலராக வரும் அழகம்பெருமாள், பிரபுவின் காதலி அஞ்சலி, காவல் ஆணையர் ஜேஎஸ்கே சதீஷ்குமார், அவரது மனைவி, ஆண்ட்ரியாவின் மகன் என துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் படத்துக்கு உயிரூட்டியிருக்கின்றனர்.
உலகமயமாக்கலினால் மனித மனம் வெற்றிடமாகிப் போனதை தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது. பின்னணி இசையிலும், நிசப்தத்தை மிக கவனமாக முக்கிய காட்சிகளில் பொருத்திய விதத்திலும் அசத்தியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. பாடல்கள் அடிக்கடி வந்தாலும் கதைப் போக்கின் விளைவையும், கதாபாத்திரங்களின் மன உணர்வையும் நமக்குக் கடத்திவிடுகின்றன மறைந்த நா.முத்துகுமாரின் பாடல் வரிகள். தமிழ்த் திரைக்கு அவர் எத்தனை பெரிய இழப்பு என்பதை இந்தப் படமும் உணர்த்துகிறது!
நம் மனதில் தென்றல்போல வருடிப் பதியும் அழகம்பெருமாளின் மனைவி கதாபாத்திரத்தைச் சிதைத்தது வக்கிரத்தின் உச்சம். பெண் குடிப்பதை உரிமையாகக் கொண்டாடும் போஸ்டரும், படத்தில் ஆங்காங்கே இயக்குநர், ராமேஸ்வர கடலோடிகள் உயிர் பிழைக்கும் அரசியலையும், பணமதிப்பு நீக்க விவகாரத்தையும் ஒற்றை வரியில் ’வாய்ஸ் ஓவராக’ பேசிவிட்டால் நல்ல படம் ஆகிவிடுமா? ‘கற்றது தமிழ்’ என்றால்தான் வேலை கிடைக்காது, கற்றது ஆங்கிலம் என்றாலும் அப்படித்தானா ராம்?