இந்து டாக்கீஸ்

திரைப் பார்வை: தற்காலத் திருடர்களின் கதை - வர்ணயத்தில் ஆசங்க (மலையாளம்)

ஜெய்

லையாளத்தில் திருடர்களை மையமாக வைத்து, ‘உறும்புகள் உறங்காரில்ல’, ‘தொண்டிமுதலும் திருக்சாட்சியும்’ போன்ற பல படங்கள் அடுத்தடுத்து வெளிவந்திருக்கின்றன. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த காயங்குளம் கொச்சுண்ணியின் கதையை 1966-ல் இயக்குநர் பி.ஏ.தாமஸ் ‘காயங்குளம் கொச்சுண்ணி’ என்ற பெயரில் படமாக்கியதுதான் இவற்றுக்கான தொடக்கம். சித்தார்த் பரதனின் இயக்கத்தில் வந்துள்ள ‘வர்ணயத்தில் ஆசங்க’ இதன் தொடர்ச்சி.

பார் மூடப்பட்டதால் வேலை இழந்தவர் தயானந்தன். இதனால் தனது காதல் மனைவிக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போகிறது. மனைவியின் நகையை விற்றுத் திரும்பும்போது, பணத்தைத் திருடர்களிடம் பறிகொடுக்கிறார். பிரபலத் திருடன் சிவன், வெகுநாள் திட்டமிட்டு நவம்பர் 8-ம் தேதி 5 லட்சம் ரூபாயைக் கொள்ளையடிக்கிறார். ஆனால் அன்று இரவு, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லத்தக்கதல்ல என பிரதமர்அறிவிக்கிறார். பிக்பாக்கெட் அடிக்கும்போது பிடிபட்ட ஒருவன், வஞ்சம் தீர்க்க ஒரு செங்கொடிக் கட்சிக்காரரின் ப்ளக்ஸ் பலகையைத் தள்ளிவிடச் செங்கொடியும் சேர்ந்து விழுந்துவிடுகிறது. இதனால் உண்டாகும் கலவரத்தில் ஒரு காவிக்கொடிக் கட்சிக்காரர் கொல்லப்படுகிறார்.

இந்த மூன்று சம்பவங்களும் கேரளத்தின் மதுபான பார்கள் பூட்டப்பட்டது, ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ராஜேஷ் கொல்லப்பட்டது, பணமதிப்பு நீக்கம் எனத் தற்காலத்தில் நடந்த பிரச்சினைகளை நினைவூட்டக்கூடியவை. இதனால் பாதிக்கப்பட்ட மூவரின் ஒரு வாரகாலச் சம்பவங்களை சினிமாவாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். குஞ்சாக்கோ போபன், சுராஜ் வெஞ்சாரமூடு, ஷைன் டோம் சாக்கோ ஆகியோரே இந்த மூவர். இந்த மூன்று பாத்திரங்களை இணைக்கும் கதாபாத்திரங்கள் செம்பன் வினோத்தும் மணிகண்டன் ஆச்சாரியும்.

இந்தச் சம்பவங்களை உணர்ச்சிகரமாக அல்லாமல் கிண்டலாக விவரித்துச் செல்கிறது சினிமா. போபன், மணிகண்டன் இருவரும் திருட்டுத் தொழிலில் விற்பன்னர்கள். டோம் சாக்கோ வளரும் திருடன். டோம் அடகுவைத்த தன் தோழியின் நகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயம். போபனுக்குத் தம்பியிடமிருந்து சொத்தைப் பிரிக்க 80,000 ரூபாய் தேவைப்படுகிறது. மணிகண்டனுக்கு 2 லட்சம். இவர்களுக்கு இடையிலிருக்கும் செம்பனுக்கு, தன் தங்கை மகனுக்குத் தங்கக் கொடி வாங்க வேண்டும் என்ற ஆசை. இந்த நால்வருக்கும் வெளியிலிருக்கும் சுராஜ் வெஞ்சாரமூடுக்கும் பணத் தேவை. இந்தப் பணத் தேவைகள், ஒரு திருட்டுச் சம்பவத்தில் சந்தித்துக்கொள்கின்றன. படம், திருட்டைச் சொல்வதைவிடத் திருட்டிலிருந்து தப்பிக்கும் முறைகளை ரசனையாக விவரிக்கிறது.

கேரளத்தில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே நடந்த மோதல், இப்போது கம்யூனிஸ்ட்-பா.ஜ.க. கட்சிகளுக்கு இடையிலானதாக மாறியுள்ளது. இதையும் இந்தப் படம் சித்திரிக்கிறது. சத்யன் அந்திக்காடின் அரசியல் பகடி படமான ‘சந்தேச’த்தின் கதாபாத்திரங்களை ஒளிப் படங்கள், ஃப்ளக்ஸ் போர்டு வடிவில் இதில் களமிறக்கி, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளைக் கிண்டலடிக்கிறது.

கதையாகக் கேட்பதற்கு சுவாரசியம் உள்ள இதை, சினிமாவாக ஆக்குவதில் இயக்குநர் தோல்வி கண்டிருக்கிறார். மிகப் பெரும் ரகசியத்தை அவிழ்ப்பதுபோல் தொடங்கும் படம், சில காட்சிகளில் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது. இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சுவாரசியம் எடுக்கும் படம், முடிந்த பிறகும் நீண்டுசெல்கிறது. ஆனால், மறைந்த இயக்குநர் பரதனின் மகனான சித்தார்த் பரதனுக்கு இரண்டு தோல்விகளுக்குப் பிறகு இந்தப் படம் வெற்றியைத் தேடித் தந்துள்ளது. பத்திரிகைச் செய்திகளில் பதிவுசெய்யப்படும் திருட்டுகளுக்கு அப்பாற்பட்டு, நாட்டில் நடக்கும் அரசியல்வாதிகளின், மதவாதிகளின், சமூக சேவகர்களின், காவல் துறையின் திருட்டுகளைச் சொல்வதுதான் படத்தில் நோக்கம். ஆனால், அதை வசனங்களால் மட்டுமே விளக்குகிறது படம்.

SCROLL FOR NEXT