திரைவிழாக்களில் தென்படாதவர் ஆண்ட்ரியா. ஆனால் ‘தரமணி’ படத்தின் வெற்றிச் சந்திப்புக்கு வெள்ளுடையில் ஆஜராகியிருந்தார். ‘தரமணி’ தனக்கு எத்தனை ஸ்பெஷலான படம் என்பதைப் பற்றி ரத்தினச் சுருக்கமாகப் பேசிவிட்டு அமர்ந்தவரை நிகழ்ச்சியின் முடிவில் சந்தித்தபோது நலம் விசாரித்து கைகுலுக்கியவர், புன்னகையுடன் கேள்விகளை எதிர்கொண்டார்.
‘தரமணி’ படம் தயாராகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானதில் பொறுமை இழந்துவிட்டீர்களா?
அப்படிச் சொல்ல முடியாது. இதுபோன்ற படங்களுக்குச் சரியான ரிலீஸ் டைம் தேவை. அதை முடிவுசெய்வதில் தயாரிப்பாளர் மிகத் திறமையானவர் என்று இயக்குநர் ராம் என்னிடம் கூறியிருந்தார். என்றாலும் படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு எனக்குத் தனிப்பட்டமுறையில் இருந்துகொண்டேயிருந்தது. அதற்குக் காரணம் எனது கதாபாத்திரமும் ஒட்டுமொத்தமாக இந்தக் கதையும் கண்டிப்பாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்று நம்பினேன். திடீரென்று இயக்குநர் ராம் எனக்கு போன் செய்து ‘அஜித் சாரின் ‘விவேகம்’ படத்துடன் ‘தரமணி’ படத்தை ரிலீஸ் செய்யத் தயாரிப்பாளர் முடிவு செய்துவிட்டார்’ என்று கொஞ்சம் அச்சத்தோடு சொன்னார். நான் அப்படியாவது தரமணி ரிலீஸ் ஆகிறதே என்று சந்தோஷப்படுங்கள் என்று அவருக்குச் சொன்னேன். ஆனால், இத்தனை பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.
உங்கள் பார்வையில் தரமணிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்புக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
கமர்ஷியல் சினிமா, ஆர்ட் சினிமா இரண்டுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைத் தரமணி இல்லாமல் செய்துவிட்டது என்று என்னால் தைரியமாகச் சொல்லமுடியும். அந்த அளவுக்குப் படத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆஃப் பீட் படங்களை ரசிகர்கள் ஒதுக்கிவிடுவார்கள் என்று இனியும் சாக்கு சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இதுபோன்ற படங்கள் வெற்றியடைந்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் பயத்தை விட்டுவிட்டு படமாக்கலாம் என்று நினைப்பார்கள்.
‘தரமணி’ படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மா, மது அருந்தும் பெண், புகைபிடிக்கும் பெண், கெட்டவார்த்தை பேசும் பெண் என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள். கதை கேட்டபோதே இதுபோன்ற சித்தரிப்பு இருக்கும் என்று யோசிக்கவில்லையா, படத்திலிருந்து வெளியேற நினைத்தீர்களா?
எனக்குக் கதாபாத்திரம் பிடித்துவிட்டால் போதும். அதன் பிறகு பின்வாங்க மாட்டேன். ராமிடம் கதை கேட்டபோதே அவரைக் குறித்து பெருமையாக உணர்ந்தேன். இதுபோல் ஒரு கதையை யோசிப்பதும் இப்படியொரு தைரியமான கதாபாத்திரத்தை எழுதவும் தனியான பார்வை வேண்டும். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் என்னைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களும் வரும் என்று எனக்குத் தெரியும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுபவள் அல்ல நான். நடிப்பு என்று வந்துவிட்டால் எல்லாவிதமான கேரக்டர்களையும் செய்ய வேண்டும். இமேஜ் பார்க்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் அந்தப் புள்ளியிலிருந்து பின்தங்கிவிடுவீர்கள்.
இயக்குநர் ராம் உங்களை எப்படிக் கையாண்டார்?
சில சந்திப்புகளிலேயே இயக்குநர் ராமுடன் பணியாற்றுவது என்று முடிவுசெய்துவிட்டேன். அவ்வளவு இனிமையான மனிதர் அவர். எனது சொந்த உடல்மொழியையும் யதார்த்த நடிப்பையும் வெளிப்படுத்த எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். ‘உடல்மொழியால் மட்டுமல்ல, மனதளவிலும் இந்தப் படத்துக்கு நீங்கள் நிறைய உழைக்க வேண்டியிருக்கும்’ என்றார். அவர் அப்படிக் கூறியதைப் படப்பிடிப்பில் உணர்ந்தேன். எனது திறமை, நேரம் இரண்டையும் மதிப்பவர்களோடு பணிபுரிவது எனக்கு மிகவும் பிடிக்கும். ராம் இந்த இரண்டு அம்சங்களையும் மதிக்கும் கிரியேட்டர். கதாபாத்திரம் பற்றிய அவரது அணுகுமுறையும் யதார்த்தமாகக் காட்சியமைக்கும் அவரது விஷுவல் சென்ஸும் எனக்குப் பிடித்திருந்தது. நடிகர்களுக்கு அறிவுரை கூறி போரடிக்க மாட்டார். படமாக்கப்பட இருக்கும் காட்சி பற்றி ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்குப் பின்னரே படப்பிடிப்பை நடத்துவார்.
ஆல்தியா முழுமையானவள் என்று நினைக்கிறீர்களா?
எந்தக் கதாபாத்திரமும் முழுமையானதாக இருக்க முடியாது. மனிதர்களைப் பிரதிபலிப்பவைதானே கதாபாத்திரங்களும். ஆல்தியாவிடம் சில குறைகள் இருக்கலாம். ஆனால், அவள் தீர்க்கமானவள், எந்தச் சூழ்நிலையிலும் போலியாக இல்லாதவள். பெண் என்பவள் எல்லா விதத்திலும் ஆணுக்குச் சமம் என்பது நிரூபணமாகி வரும் காலம் இது. ஆண்களைச் சார்ந்து வாழும் நிலை மாறி , பெண்கள் தங்களது அன்றாடத் தேவைகளைத் தாங்களே பூர்த்திசெய்துகொள்ளும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் துணிந்து முடிவெடுக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதனால் ஆண்களின் ஈகோ பாதிக்கப்பட்டிருக்கிறது. நான் நம்பும் எனது சொந்த கருத்துக்களால்தான் ‘தரமணி’ ஆல்தியாவை எனக்குப் பிடித்துப்போனது.
தற்போது நடித்துவரும் படங்கள்?
‘துப்பறிவாளன்’,‘வட சென்னை’. வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்து வரும் ‘வட சென்னை’ வெளிவரும்போது நான் ஆன்ட்ரியாதானா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும்.