இந்து டாக்கீஸ்

திரை வெளிச்சம்: மறைக்கப்பட்ட உண்மைகள்

திரை பாரதி

பெ

ப்சி பிரச்சினையில் திரைப்படத் தொழிலாளர்களின் நடப்பு ஊதிய விகிதம் குறித்த கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதே நேரம் நடிகர்களின் சம்பளம் குறித்துத் தயாரிப்பாளர் சங்கத் தரப்பில் மூடி மறைக்கப்பட்டது அல்லது பூசி மெழுகப்பட்டது என்பதே கண்கூடு. “தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தின் தயாரிப்புச் செலவில் 45 முதல் 50 சதவீதம் வரை அதில் நடிக்கும் முன்னணிக் கதாநாயகனுக்கான ஊதியமாகப் போய்விடுகிறது. அவர்களது ஊதியத்துக்கான ‘சூப்பர்’ வருமானவரியும் இதில் அடக்கம். அடுத்து ‘ஷூட்டிங் எக்ஸ்பென்செஸ்’ என்று நாங்கள் குறிப்பிடும் படப்பிடிப்புச் செலவு என்பது 25 சதவீதம். இதற்குள்தான் தொழிலாளர்களின் ஊதியம் வருகிறது.

ஆனால், இன்று ஒரு படம் முழுவதுமாக உருவாகி முதல்பிரதி தயாராகிவிட்ட பிறகு அதை மக்களிடம் கொண்டு சேர்க்கச் செய்யப்படும் தொலைக்காட்சி, பத்திரிகை விளம்பரச் செலவுகள், ஆன்லைன், சோசியல் மீடியா புரோமோஷன், க்யூப் கட்டணம் ஆகியவற்றுக்கான செலவு பட்ஜெட்டில் 20 சதவீதத்தை எடுத்துக்கொண்டுவிட்டது. பயணப்படி உள்ளிட்ட சில விஷயங்களில் சினிமா தொழிலாளர் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு இறங்கி வந்தே ஆக வேண்டிய காலகட்டத்துக்கு வந்து நிற்கிறார்கள். ஆனால், தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுத்ததால் தயாரிப்பாளர்கள் கெட்டழிந்துவிட்டார்கள் என்று சொல்வதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்.

மாறாகக் கதாநாயகர்களின் மார்க்கெட் மதிப்பை நம்பி மோசம்போன என்னைப் போன்ற தயாரிப்பாளர்கள்தான் எங்கள் சமூகத்தில் அதிகம். இதற்குக் கடந்தகால வசூல் ரிப்போர்ட்களை எடுத்துப் பார்த்தாலே இந்த ரகசியம் உடைந்துவிடும்” என்று உள்ளம் திறந்து உண்மையை நம்மிடம் பகிர்ந்தார் முகம் காட்ட விரும்பாத மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.

இவர் சொல்வதைத்தான் பல தயாரிப்பாளர்கள் ஆமோதிக்கிறார்கள். “கதாநாயர்களிடம் கால்ஷீட் பெறும் ஒவ்வொருமுறையும் ஏற்கெனவே வெற்றிகரமாக ஓடிய முந்தைய படத்தின் வசூலை வைத்து நாங்கள் சம்பளம் பேசுவது உண்மைதான். ஆனால், எந்த ஹீரோவும் பேரம் பேசாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில்லை. அவர்களது ஓடாத படம் குறித்து அவர்களிடம் பேசினால் கால்ஷீட் கிடைக்காது” என்று உண்மையை உடைக்கிறார் மற்றொரு தயாரிப்பாளர்.

ஒரு படத்தின் தயாரிப்பில் பாதியை விழுங்குவதாகக் கூறப்படும் முன்னணிக் கதாநாயகர்களின் இன்றைய உண்மையான ஊதியம்தான் எவ்வளவு, அவர்களது படங்களின் வசூல் நிலவரம்தான் என்ன என்பதைத் தயாரிப்புக் களத்தில் விசாரித்தபோது, தங்கு தடையின்றித் தகவல்கள் வந்துவிழுந்தன. ஒரு படத்துக்கான ரஜினியின் இன்றைய சம்பளம் ரூ.55 கோடி எனக் கூறப்படுகிறது. அவருக்காகச் செலுத்தப்படும் சூப்பர் வருமான வரியையும் சேர்த்து அவர் இந்தத் தொகையைப் பெறுவதாகக் கூறுகிறார்கள். கமலின் ஊதியமோ இதில் பாதிதான் என்கிறார்கள். ஐந்து கோடிக்கு அதிகமாக ஊதியம் பெரும் அனைத்துக் கதாநாயகர்களும் சூப்பர் வருமான வரி செலுத்தக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். விஜய், அஜித் இருவருமே சூப்பர் வருமான வரியையும் சேர்த்து தலா ரூ.45 கோடிகள் ஊதியம் பெறுவதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு அடுத்த இடத்தில் சொந்தப் படங்கள் தயாரிக்கும் சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் தலா ரூ.25 கோடி ஊதியமாகப் பெற்றுக்கொள்வதாகக் கூறுகிறார்கள். இவர்களுக்கு அடுத்த இடத்தில் விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி ஆகிய கதாநாயகர்கள் தலா ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடிவரை ஊதியம் பெறுவதாகக் கூறுகிறார்கள். இவர்களுக்குக் கீழே ரூ.40 லட்சம் முதல் ரூ.10 கோடி வரைதான் மற்ற முகம் தெரிந்த கதாநாயகர்களின் ஊதியம்.

எத்தனை கோடிகள் ஊதியம் பெற்றாலும்’ ஒரு முன்னணிக் கதாநாயகனுக்கான சந்தை மதிப்பு எப்படி உருவாகிறது என்றால் அவரது படம் ‘அவுட் ரேட்’, ‘டேர்ம்ஸ்’ அல்லது மினிமம் கியாரண்டி ஆகிய மூன்று வியாபார முறைகளில் ஏதாவது ஒன்றில் படம் தயாரான உடனேயே விற்றுவிடும் மாயத்தைப் பொறுத்துத்தான். இப்படி உடனுக்குடன் விற்பனையாகிவிடுவது ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம்ரவி உள்ளிட்ட 15 கதாநாயகர்களுக்கு மட்டும்தான். மற்றவர்களுக்கெல்லாம் இழுபறியும் வியாபாரத்தில் சமரசங்களும்தான். இப்படி விற்கப்படும் படம், தமிழகத் திரையரங்க வசூல் மூலம் 70 சதவீதம் தயாரிப்புச் செலவை எடுக்க வேண்டும். இதை எடுத்த பிறகு விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகிய இரண்டு தரப்புக்கும் வாங்கிய தொகையைத் தாண்டி வசூல் கிடைக்கும்போதுதான் அது சூப்பர் வசூலாகிறது. இந்த சூப்பர் வசூல் பெரிய கதாநாயகர்களின் படங்களுக்கு முதல் ஐந்து நாட்கள் பிளாட் ரேட்டில் டிக்கெட் விற்பதன் மூலம் மட்டுமே கிடைக்கும்” என்ற உண்மையை உடைக்கிறார் மற்றொரு தயாரிப்பாளர்.

கமலுக்கு ரூ.20 கோடி சம்பளம் என்றால் அவரை வைத்து ரூ.30 கோடியில் படமெடுத்தால் மொத்தச் செலவான ரூ.50 கோடியை உலக உரிமை, சாட்டிலைட் உரிமையும் சேர்த்தே எடுக்க முடியும் என்கிறார்கள். ரஜினியின் நிலவரம் வேறுமாதிரி இருக்கிறது. “ரஜினிக்கான சந்தை நிலவரம் என்பது பிளாக் ரேட்டில் அதிக விலைக்கு டிக்கெட் விற்றால் மட்டுமே போட்ட பணத்தை எடுக்க முடியும். ரஜினி, கமல், அஜித், விஜய் என்ற போதை ரசிகர்களிடம் தெளிவதற்குள் போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்றால் முதல் ஐந்து நாட்களுக்கு பிளாட் ரேட்களில் டிக்கெட் விற்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. இப்படிப் பெரிய கதாநாயகர்களின் படம் வரும்போதுதான் தியேட்டர் கேன்டீன்களில் வியாபாரம் நடக்கிறது ”என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள் பலர். “பிளாட் ரேட்டில் டிக்கெட் விற்காமல் அரசு நிர்ணயித்த விலைக்கு டிக்கெட் விற்றால் கதாநாயகர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தில் பாதியைக்கூடத் தயாரிப்பாளரால் தேற்ற முடியாது” என்பது கடந்த 50 ஆண்டுகளாகத் திரையரங்கம் நடத்திவரும் உரிமையாளர் ஒருவரது அனுபவம் நிறைந்த கருத்து.

ஆண்டுக்கு ஒரு படம் என்று வெளியாகும்போது தங்களது தலைவரின் படத்துக்காகக் காத்திருப்பதில்தான் இந்த வசூல் சாத்தியமாகிறது. அதுவே ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் வருடத்துக்கு மூன்று படம் நடித்தால் எல்லாப் படங்களையுமே திரையரங்கில் காண ரசிகர்கள் வருவார்கள் எனக் கனவு காண முடியாது. ரசிகர்களின் இந்தச் சோர்வு மனநிலை பெரிய நடிகர்களுக்கு என்றில்லை. சிறிய நடிகர்களுக்கும் நடக்கக்கூடியதுதான் என்று ஃபாக்ஸ் ஆபீஸ் நிபுணர்களின் கருதுகிறார்கள். வசூல் களத்தின் நிலவரம் இப்படி இருக்கையில் அதிக ஊதியம் பெரும் நடிகர்களால் மட்டுமே சினிமா தயாரிப்புச் செலவு இரண்டு மடங்கு அதிகரிக்கிறது என்ற உண்மை தொடர்ந்து மறைக்கப்பட்டுவிடுகிறது.

SCROLL FOR NEXT