ஊ
ரைவிட்டு மக்களை விரட்டியடிக்க சபதம் போடுபவனுக்கும், ஊருக்கு நல்லது செய்ய நினைப்பவனுக்கும் நடுவே நடக்கும் போட்டிதான் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’.
ஊரில் பெரும் பணக்காரரான பார்த்திபன் தன்னை எப்போதும் மற்றவர்கள் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும் என விரும்புபவர். அவரது மகள் நிவேதா பெத்துராஜ். சிறு வயதில் தன் மகளுக்கு மொட்டையடிப்பதற்காக பக்கத்து கிராமத்துக்குச் செல்கிறார். அப்போது அந்த ஊரில் ஒரு இறப்பு நிகழ்ந்துவிட்டதால், கோயிலை ஊர் மக்கள் பூட்ட, பாதி மொட்டை அடித்ததோடு பார்த்திபன் குடும்பம் வெளியேற நேரிடுகிறது. இதை அவமானமாகக் கருதும் அவர், அந்த கிராமத்தினரைப் பழிவாங்கத் தீர்மானிக்கிறார். அவர்களை ஊரைவிட்டு வெளியேற்றத் திட்டமிடுகிறார்.
இந்த நிலையில், எந்த அடிப்படை வசதியும் இல்லாத அந்த ஊரை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்று தன் நண்பன் சூரியுடன் சேர்ந்து பல திட்டங்களை வகுக்கிறார் உதயநிதி. பணக்கார ரான பார்த்திபனின் தங்கையை பக்கத்து ஊரைச் சேர்ந்த நமோ நாராயணன் காதல் திருமணம் செய்த விஷயமும், புகழ்ச்சிக்கு ஆசைப்படும் பார்த்திபன் தன் தங்கை வசிக்கும் அந்த ஊருக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுத்த விஷயமும் உதய நிதிக்கு தெரியவருகிறது. பார்த்திபனின் மகள் நிவேதாவைக் காதலித்தால், பார்த்திபன் மூலமாக தன் ஊருக்கும் நல்லது நடக்கும் என்ற யோசனையில், அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். அந்தக் காதல் என்ன ஆனது? ஊர் மக்களை வெளியேற்ற நினைத்த பார்த்திபனின் திட்டம் கைகூடியதா? என்பது மீதிக்கதை
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த தளபதி பிரபு அதே பாணியில் இந்தப் படத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார். கிராமம், காதல், காமெடி, வம்பு என்று வழக்கமான ஃபார்முலாவாக இருந்தாலும், ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற கருவை மையமாக வைத்து படம் நகர்கிறது. மாவட்டத்தில் கடைசி 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு கொடுக்கும் இடத்தில் நாயகி அறிமுகமாவது, ஊரைவிட்டு வெளியே அனுப்ப ஊர்க்காரர்கள் வாக்களிப்பது உள்ளிட்ட சில இடங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன.
ஆனால், ஊருக்கு நல்லது செய்வதற்காக ஹீரோ மெனக்கெடுவது, தன்னை அவமானப்படுத்திய மக்களை வில்லன் பழிவாங்குவது என கதையின் போக்கை தீர்மானிக்கிற காட்சிகள் காமெடியாக நகர்வதால், கதை ஓட்டம் வலுவிழந்து மேலோட்டமாக நகர்கிறது. பார்த்திபனும் நக்கல் கலந்த காமெடியிலேயே கலகலப்பை உண்டாக்குவதால், அவரது வில்லத்தனம் எடுபடாமல் போகிறது. உதயநிதி, நிவேதா இருவரும் சந்திக்கும் முதல் காட்சியில் காதல் பேசுவதும், அடுத்த காட்சியில் சண்டை பிடிப்பதும் என்று மாறிமாறி தொடர்ச்சியாக வருவது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது.
கிராமத்துக்கு நல்லது செய்யும் இளைஞராக வரும் உதயநிதியின் நடிப்பில் நல்ல முன்னேற்றம். அப்பாவித்தனமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். இவரது நண்பர் டைகர் பாண்டியாக வரும் சூரியின் நகைச்சுவைக் காட்சிகளில் திரையரங்கம் சிரிப்பலையில் அதிர்கிறது. ஒட்டுமொத்த திரைப்படத்தையும் வலுவாகத் தாங்கி நிற்கிறார் பார்த்திபன். ஆட்சியர் வருவதைத் தெரிந்துகொண்டு, ஒரு குடிசைக்கு தீ வைத்து விட்டு, அங்கிருந்தவர்களையும் அவரே மீட்டு ஆட்சியரிடம் பாராட்டு பெறும் காட்சியில் பார்த்திபன் மாஸ்! அவரது உதவியாளராக வரும் மயில்சாமி, ஒரு காட்சியில் மட்டும் தலைகாட்டும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர்.
ஒரே மாதிரி பின்னணி கதை கொண்ட படங்களையே தொடர்ச்சியாக தேர்வு செய்தாலும், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் இதிலும் தனித்து நிற்கிறார்.
டி.இமான் இசை, யுகபாரதியின் பாடல்கள் பரவாயில்லை ரகம்.
அழுத்தமான திரைக்கதை இல்லாமல், மேம்போக்கான காமெடிகளிலேயே நகர்வதால் மாற்றுக் குறைந்த தங்கம்!