இந்து டாக்கீஸ்

கோலிவுட் கிச்சடி: ‘கதை’யின் நாயகன்!

செய்திப்பிரிவு

துவரை திரையில் சொல்லப்படாத கதை’ என்ற முழக்கம் திரையுலகில் எப்போதும் கேட்டுக்கொண்டேயிருக்கும். ஆனால் ‘கிருஷ்ணம்’ என்ற படத்தைத் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இயக்கிவரும் தினேஷ் பாபு நிஜமாகவே புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறேன் என்கிறார். இவர் மலையாளப் படவுலகில் பிரபலமான ஒளிப்பதிவாளர். பிரபலத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காதலில் வீழ்ந்து மீண்ட ஒரு இளைஞன் தன் கதையைப் பகிர, அது ஒரு உணர்வுப்பூர்வமான திரைப்படத்துக்கான தன்மையுடன் இருந்திருக்கிறது.

அந்த இளைஞரைச் சந்தித்து அதைப் படமாக்குவதற்கான அனுமதியைப் பெற்றுத் திரைக்கதை எழுதிமுடித்து நடிகர்களைத் தேடியிருக்கிறார். பொருத்தமான நடிகர் கிடைக்காததால் அந்த உண்மையான இளைஞரையே நாயகன் ஆக்கிவிட்டாராம் தினேஷ் பாபு. அவர் கேரளத்தைச் சேர்ந்த அக்ஷய் கிருஷ்ணன். சிரித்த, அழுத நாட்களை சினிமாவுக்காக மீண்டும் ஒருமுறை கேமராவுக்கு முன்னால் நடித்தது பெரும் சவாலாக இருந்ததாம் இவருக்கு.

கவனம் பெறும் சந்தீப்!

மாநகரம்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கும் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். சி.வி.குமார் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘மாயவன்’ படத்திலும் இவர்தான் நாயகன். நன்கு தமிழ் பேசத் தெரிந்த இவர், தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்திலும் நாயகனாக நடிக்கிறார். மருத்துவத் துறையைக் கதைக் களமாக வைத்து உருவாகவிருக்கும் இந்தப் படத்துக்கு ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகனாக விக்ராந்த் நடிக்கிறார்.

மீண்டும் ஆஷ்னா

ழகு, திறமை இருந்தாலும் சினிமாவுக்கு அதிர்ஷ்டம் தேவை என்பார்கள். அதுவும் இருந்து, புத்திசாலித்தனம் இல்லையென்றால் மறந்துவிடுவார்கள். ஆஷ்னா சவேரி விஷயத்தில் அதுதான் நடந்துவிட்டது. சந்தானத்துக்கு ஜோடி சேர்ந்து ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் அறிமுமானார். மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் நடிக்கப்போனதால் கொஞ்சம் சர்ச்சையாகி பெரிய கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்காமல் போய்விட்டதாம். தற்போது ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘பிரம்மா.காம்’ போன்ற பட்ஜெட் படங்களில் நடித்துவரும் ஆஷ்னா, அடுத்து முன்னணி ஹீரோக்கள் படத்தைக் குறிவைக்கிறாராம்.

இளையராஜாவுக்குப் பிடித்த கிராமம்!

தை பிடித்தால் மட்டுமே இசையமைக்க ஒப்புக் கொள்வார் இளையராஜா. மிகுந்த ஈடுபாட்டுடன் அவர் இசையமைத்துக் கொடுத்திருக்கும் படம் 'களத்தூர் கிராமம்'. சரண் கே. அத்வைதன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கிஷோர் கதை நாயகனாக நடித்திருக்கிறார். பிரபல கன்னடக் கதாநாயகியாக யக்னா அவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார். “விவசாயம் பொய்த்துப்போனதால் சீமைக் கருவேல மரங்களை வெட்டி, கரி மூட்டம் போட்டுப் பிழைக்கும் தொழிலை மையமாகக் கொண்ட ஒரு கிராமத்தின் கதை. ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமத்தின் ஜீவ-மரணப் போராட்டம் என்றும் கூறலாம். அந்தக் கிராமத்தை போலீஸ் வஞ்சிக்கிறது. இதனால் அவமதிப்பு, ஏமாற்றம், புறக்கணிப்பை அனுபவிக்கும் மக்கள் போலீசை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை உண்மை நிகழ்வுகளுக்கு நெருக்கமாகப் படமாக்கியிருக்கிறோம். மூன்று பாடல்கள், அதில் ஒன்றை இளையராஜா எழுதியதோடு மிகச்சிறந்த பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார்” என்கிறார் இயக்குர்.

வசந்தபாலனின் தேடல்

யக்குநர் வசந்தபாலன் அடுத்துத் தொடங்கவிருக்கும் புதிய படத்துக்கு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க16 வயது முதல் 20 வயது வரையுள்ள மாநிறம் அல்லது கறுப்பான இளைஞர்கள், இளம்பெண்கள் தேவை என்று கேட்டிருக்கிறார். சென்னையை மையமாக வைத்து உருவாகவிருக்கும் படமென்பதால் சென்னை வட்டார மொழியில் திறம்படப் பேசத் தெரிந்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் தங்களின் ஒளிப்படங்கள் சிலவற்றை vasanthabalannewmovie@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படியும் அவர் கேட்டிருக்கிறார்.

தொகுப்பு: ரசிகா

SCROLL FOR NEXT