இந்து டாக்கீஸ்

கோலிவுட் கிச்சடி: ‘யார்’ இந்த காயத்ரி?

செய்திப்பிரிவு

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெளியான திகில் தமிழ்ப் படம் ‘யார்?’ அதை இயக்கிய இயக்குநர்களில் ஒருவர் கண்ணன். படத்தின் வெற்றியால் ‘யார்’ கண்ணன் என்று அழைக்கப்பட்ட அவர், பல படங்களை இயக்கிப் பிரபலமானர். இயக்குநர் மகேந்திரனின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட ‘யார்’ கண்ணன், ‘அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா... சொல்லித் தந்த பூமி தந்தையல்லவா’ உட்படப் பல ஹிட் பாடல்களை எழுதிய பாடலாசிரியரும்கூட. தற்போது நடிகராகவும் வலம் வந்துகொண்டிருக்கும் யார் கண்ணனின் மகள் காயத்ரி கதாநாயகியாக அறிமுக இருக்கிறார். காயத்ரியின் அம்மா ஜீவா ஒரு நடனக் கலைஞர்.

‘நான் திரும்ப வருவேன்’

தெலுங்குப் பட உலகின் முன்னணிக் கதாநாயகர்கள் தமிழ் சினிமாவில் அழுத்தமாகக் காலடி பதிக்கத் துடிக்கிறார்கள். பிரபாஸ், ராணா, ஆகியோரைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். தற்போது அவரை முந்திக்கொண்டு தமிழுக்கு வருகிறார் மஞ்சு மனோஜ். தெலுங்கில் வெற்றிபெறும் மஞ்சு மனோஜ் படங்களின் தமிழ் மறுஆக்க உரிமை நல்ல விலை கொடுத்து கோலிவுட்டில் வாங்கப்படுமாம். அப்படி மஞ்சு மனோஜ் நடிப்பில், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தைக் கதைக்களமாகக் கொண்டு தெலுங்கில் உருவாகியிருக்கும் படம் ‘ஒக்காடு மிகிலாடு’ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை நினைவூட்டும் விதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ‘நான் திரும்ப வருவேன்’ என்ற தலைப்புடன் தமிழில் மொழியாக்கம் செய்து ஒரேநேரத்தில் வெளியிடுகிறார்கள். படத்தின் ட்ரைலருக்குச் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஸ்ரீதேவியின் நகல்!

சினிஷ் இயக்கத்தில் ஜெய் -அஞ்சலி ஜோடி சேர்ந்து நடித்து முடித்திருக்கும் படம் ‘பலூன்’. இந்தப் படத்தில் தற்போது மேலும் ஒரு கதாநாயகி இணைந்திருக்கிறார். இணையான ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார் ஜனனி ஐயர். “கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் நடிக்காமல், நல்ல கதாபாத்திரங்களுக்காகக் காத்திருந்து நடித்துவருகிறேன். பலூன் படத்தில் எனது கதாபாத்திரம் 1980-களின் பின்னணியில், கொடைக்கானலில் வாழும் ஒரு பெண்ணைப் பற்றியது. ஜெய்யைக் காதலிக்கும் குழந்தைத்தன்மை அதிமுள்ள பெண். ‘மூன்றாம் பிறை’ ஸ்ரீதேவியின் அப்பாவித்தனமான நடிப்பைப் பிரதிபலிக்கும் விதமாக எனது நடிப்பு இருக்க வேண்டும் என்று இயக்குநர் விரும்பினார். ரசிகர்கள் மனதில் இன்னும் நிலைத்து நிற்கும் அந்த நடிப்புக்கு ஈடு, இணை கிடையாது. என்றாலும் ஸ்ரீதேவியின் நினைவு வரும்விதமாக நடித்திருக்கிறேன்” என்கிறார் ஜனனி ஐயர்.

தொகுப்பு: ரசிகா

கன்னடத்தில் ஆர்யா

தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்துள்ள ஆர்யா இதுவரை கன்னடப் படத்தில் நடித்ததில்லை. சிறந்த மாநில மொழிப்படம், சிறந்த இயக்குநர் உட்பட மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற ‘ரங்கி தரங்கா’ என்ற கன்னடப் படத்தை இயக்கியவர் அனூப் பண்டாரி. அவரது இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘ரஜரதா’ என்ற படத்தில் ஆர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப் படம் தயாராக இருக்கிறது.

90 நாள் இடைவெளி

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘2.0’ அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ‘2.0’ படத்தின் வேலைகள் முடிந்து பின்தயாரிப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. இது ஒருபுறமிருக்க நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘காலா’ படம் ‘2.0’-வுக்கு முன்பே வெளியாகவிருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இதைத் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் தனுஷ். “ ‘2.0’ படத்துக்குப் பிறகே ‘காலா’வை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். ‘2.0’ வெளியாகி 90 நாட்களுக்குப் பிறகே ‘காலா’வை வெளியிடுவது என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.

SCROLL FOR NEXT