இந்து டாக்கீஸ்

திரைப்பார்வை: காதலும் கழிப்பறையும் - டாய்லட், ஏக் பிரேம் கதா (இந்தி)

யாழினி

த்திய பிரதேசத்தைச் சேர்ந்த அனிதா நர்ரே என்ற பெண்ணின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது ‘டாய்லட், ஏக் பிரேம் கதா’ திரைப்படம். கழிப்பறை வசதியில்லாத காரணத்தால், அவர் திருமணமான இரண்டு நாட்களிலேயே கணவர் வீட்டைவிட்டுச் சென்றுவிடுவார். கழிப்பறை கட்டிய பிறகே, கணவர் வீட்டுக்குத் திரும்புவார். 2011-ம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வைப் பின்னணியாக வைத்து இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ நாராயண் சிங்.

கேசவ் (அக்ஷ்ய் குமார்), தன் தம்பி நருவுடன் (திவ்யேந்து ஷர்மா) உத்திர பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் சைக்கிள் கடை நடத்திவருகிறார். இவர்களுக்குச் சாதிய பழமைவாதத்தைப் பின்பற்றும் ஒரு தந்தை (சுதீர் பாண்டே). ஜாதகத்தின் காரணமாக இரட்டைக் கட்டைவிரல் இருக்கும் பெண்ணைத்தான் மகன் திருமணம்செய்துகொள்ள வேண்டும் எனப் பிடிவாதமாக இருக்கிறார் தந்தை. அதனால், முப்பத்தாறு வயதாகியும் திருமணமாகாமல் இருக்கிறார் கேசவ்.

இந்நிலையில், ஒரு ரயில் பயணத்தில், கழிப்பறை வாசலில் நடக்கும் மோதலில் ஜெயாவைச் (பூமி பெட்நேகர்) சந்திக்கிறார் கேசவ். வழக்கம்போல, பார்த்தவுடன் ஜெயாவின்மீது காதல் வயப்பட்டுவிடுகிறார் கேசவ். கல்லூரியிலேயே முதல் மாணவியாகத் திகழும் ஜெயாவைத் தொடர்ந்து பின்தொடர்ந்து சென்று ‘காதலிக்கிறார்’ சைக்கிள் கடைக்காரர் கேசவ். முதலில், பெண்களைப் பின்தொடர்ந்து வருவது மோசமான செயல் என்று கேசவுக்குப் பாடமெடுக்கும் ஜெயா, வழக்கம்போல அவரையே திருமணம் செய்துகொள்கிறார்.

ஆனால், திருமணமான மறுநாள் கேசவின் வீட்டில் கழிப்பறையில்லாத விஷயத்தை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகிறார் ஜெயா. கழிப்பறை வசதியில்லாத கணவர் வீட்டில் சில நாட்கள் சமாளிக்கும் ஜெயா, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து கழிப்பறை கட்டினால்தான் மீண்டும் வீட்டுக்கு வருவேன் என்று அம்மா வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். மனைவியை வீட்டுக்கு அழைத்து வருவதற்காகக் கழிப்பறை கட்டுவதற்குக் கடினமான முயற்சிகளை மேற்கொள்கிறார் கேசவ்.

துளசி மாடம் இருக்கும் வீட்டில் கழிப்பறை இருக்கக் கூடாது என்று சொல்லும் தந்தை, பொதுக் கழிப்பறை கட்டக் கூடாது என்று பிடிவாதமாக இருக்கும் கிராம மக்கள், இந்த இரண்டு தரப்பையும் சமாளித்து கேசவ் எப்படிக் கழிப்பறை கட்டுவதில் வெற்றிபெறுகிறார் என்பதுதான் ‘டாய்லட், ஏக் பிரேம் கதா’ திரைப்படம்.

இந்தத் திரைப்படம், மத்தியில் ஆளும் மோடி அரசாங்கத்தின் ‘தூய்மை இந்தியா திட்டத்தின் பெருமையைப் பேசுவதற்கான நோக்கத்தில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பொதுச் சேவை விளம்பரத்தை இரண்டரை மணிநேரம் பார்த்த உணர்வைத்தான் இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. திரைக்கதை, கதாபாத்திரப் படைப்பு, பாடல்கள் என இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் எந்தவொரு அம்சமும் திரையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பூமி பெட்நேகர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் வலுவில்லாத திரைக்கதையால் அது பெரிதாக எடுபடவில்லை.

இயக்குநர் ஸ்ரீ நாராயண் சிங் பிரதமர் மோடியைப் பாராட்ட வேண்டுமென்ற ஒரு விஷயத்தில் மட்டுமே கவனமாக இருந்திருக்கிறார். அது திரைப்படம் முழுக்கவும் பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. அக்ஷ்ய் குமார், ‘ஏர்லிஃப்ட்’, ‘ருஸ்தம்’ திரைப்படங்களுக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற பிறகு, முழுநேர ‘தேசியவாதியாக’மாறிவிட்டார் என்பது இந்தப் படத்தில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.

2011-ம் ஆண்டு, மோடி ஆட்சியில்லாதபோது நடக்கும் ஒரு சம்பவத்தை, அவர் ஆட்சிக்கு வந்த பிறகு நடந்ததாகப் படத்தில் சித்தரிப்பது எந்த வகையில் சரி? அத்துடன், மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக ஒரு வசனமும் இடம்பெற்றிருக்கிறது.

சென்ற ஆண்டு, தமிழில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் கிராமத்தில் கழிப்பறை வசதியில்லாமல் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் கதையைப் பேசியிருந்தது. அந்தத் திரைப்படம், கிராமங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்காத அரசு அமைப்பை எதிர்த்துக் கேள்விகள் எழுப்பியிருக்கும். ஆனால், இந்த ‘டாய்லட், ஏக் பிரேம் கதா’ திரைப்படம், அரசைக் கேள்வி கேட்காமல் கிராம மக்களையே கழிப்பறைகளைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இந்த ஒரு வித்தியாசத்தில், இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றிவிடுகிறது என்றாலும் படம் பரிதாபகரமான பபூனின் சாகசங்கள்போல ஆகிவிடுகிறது. ‘மனைவி வீட்டில் இருக்க வேண்டுமென்றால், கழிப்பறை கட்டுங்கள்’ என்ற போதனையுடன் இவ்வளவு மேலோட்டமாக, இந்தப் பிரச்சினையை இதுவரை எந்தத் திரைப்படமும் பேசியதில்லை. இனிப் பேசப்போவதும் இல்லை.

SCROLL FOR NEXT