இந்து டாக்கீஸ்

கோலிவுட் கிச்சடி: அனலடிக்கும் சங்கங்கள்!

செய்திப்பிரிவு

கோலிவுட்டில் தயாரிப்பாளர்கள் சங்கம், சினிமா தொழிலாளர்கள் அமைப்பான பெப்சி, திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளிலும் தற்போது அனலடிக்கிறது. பெப்சி தொழிலாளர்களால் கடந்த பல வருடங்களாகவே பெரும் தலைவலியைச் சந்தித்துவருவதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி உடனான தற்போதைய சம்பள ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்திருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளைக் கடந்து திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு தலைவர், பிறகு செயலாளர் எனப் பொறுப்புகளை வகித்து, அதை முன்மாதிரி சங்கமாக மாற்றிக்காட்டியவர் என இயக்குநர் ஆர்.கே.செல்வமணியைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள், சக இயக்குநர்களும் உதவி இயக்குநர்களும். அப்படிப்பட்டவர்தான் தற்போது பெப்சி சங்கத்தின் தலைவர்.

இவர் சினிமா தொழிலாளர்களுக்குச் சினிமா தயாரிப்பின் இன்றைய யதார்த்த நிலையை உணர்த்தி, பெப்சியை ஓர் இணக்கமான சங்கமாக முன்னெடுப்போம் எனப் பல முடிவுகளை நிர்வாகக் குழுவுடன் இணைந்து ஒருமனதாக எடுக்க இருந்தார் என்கிறார்கள். இந்தநேரத்தில் விஷாலின் அதிரடி, பெப்சியை நிலைகுலையச் செய்திருக்கிறது. தற்போது தயாரிப்பாளர்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது பெப்சி. இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என்கிறது தயாரிப்பாளர்களின் தரப்பு.

இதுவொருபுறம் இருக்க, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு வரும் 30-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் இயக்குநர் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி தலைமையிலான அணிக்கே மூன்றாவது முறையாக வெற்றிவாய்ப்பைக் கொடுப்போம் என்பது பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தாக இருக்கிறது. மருத்துவக் காப்பீடு, கல்வி உதவி, குறும்படம் எடுக்க கேமரா, சினிமா தலைப்பை பதிவு செய்வதில் இருந்த சிக்கலைக் களைந்தது, காலாவதியான சங்கப்பதிவை போராடி மீட்டது எனச் சிறப்பாக செயல்பட்டு வருகிறதாம் திரைப்பட இயக்குநர்கள் சங்கம். இதனால்தான் இந்த அணிக்கு மீண்டும் வெற்றி கிடைக்கும் என்கிறார்கள்.

இரண்டு புதுமுகங்கள்

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பரவலான கவனத்தைப் பெற்றுவரும் ‘ரூபாய்’, ‘மீசைய முறுக்கு’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் இரண்டு அறிமுக நடிகர்களுக்கு ‘புதுமுகம் போலவே தெரியவில்லை’ என்கிற பாராட்டும் அடுத்த வாய்ப்புகளும் கிடைத்திருக்கின்றன. ‘ரூபாய்’ படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்திருந்த கிஷோர் ரவிச்சந்திரனுக்கு ஒருபடி அதிகமாக, ரஜினியின் பாராட்டு கிடைத்திருக்கிறது. அடுத்து பிரபு சாலமன் உதவியாளர் ஏழுமலை இயக்கத்தில் நாயகனாகக் களம் இறங்குகிறார்.

மீசைய முறுக்கு படத்தின் நாயகன் ‘ஹிப் ஹாப்’ ஆதியின் தம்பியாக நடித்திருக்கும் அனந்த்ராம் லயோலா கல்லூரியின் விஸ்காம் மாணவர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றிருக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன இவருக்கு.

தமிழில் ராணா

அஜித்துடன் ‘ஆரம்பம்’ படத்தில் தமிழில் நேரடியாக நடித்திருந்தார் ராணா. ஆனால் அந்தப் படத்தின் மூலம் தமிழ்நாட்டில் அவருக்குக் கிடைக்காத புகழ்வெளிச்சத்தை ‘பாகுபலி’ கொடுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள நினைத்த ராணா, தெலுங்கில் நடித்த ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ படத்தைத் தமிழிலும் வெளியிட முன்வந்துவிட்டார். இந்தப் படத்தை 'நான் ஆணையிட்டால்' என்றத் தலைப்புடன் தமிழில் வெளியிட இருக்கிறார்கள். ஒரு மொழிமாற்றுப்படம் போல் தெரியாமல் பல முக்கியமான காட்சிகளை நேரடியாகத் தமிழில் படமாக்கியிருக்கிறார்களாம். தேஜா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராணாவுக்கு ஜோடி காஜல் அகர்வால்.

புதிய வெளிநாட்டு நிறுவனம்

லைக்கா உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ் சினிமா தயாரிப்பில் களமிறங்கி முதலீடு செய்து வருகின்றன. இந்த வரிசையில் லண்டனைத் தலைமையகமாக கொண்ட பிளாக் அண்ட் வைட் எனும் புதிய நிறுவனமும் கோலிவுட்டில் புதிதாக களமிறங்கியிருக்கிறது. திரைப்பட தயாரிப்பு, விளம்பரம், மாடலிங் தொடங்கிப் பல துறைகளில் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், தற்போது புதிய இயக்குநர்கள், புதிய கலைஞர்களை தேடுவதற்காகச் சென்னையில் தனது அலுவலகத்தைத் திறந்திருக்கிறது.

திருமணத்துக்குப்பின் சமந்தா

அக்டோபர் 6-ம் தேதி நாகசைதன்யாவை திருமண வாழ்வில் கரம் பற்றுகிறார் சமந்தா. ஆனால் திருமணம் முடித்தபின் நான்கே நாட்களில் அக்டோபர் 10-ம் தேதி முதல் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு வந்துவிடுவதாகக் கூறியிருக்கிறாராம் சமந்தா. அதேபோல் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் ‘அநீதிக் கதைகள்’ படத்துக்கும் தனது திருமணத்துக்குப் பிறகு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

SCROLL FOR NEXT