கெட்ட அரசியல்வாதியால் பாதிக்கப்படும் நல்ல மாணவன், புத்திசாலித்தனமாகப் பாடம் கற்றுக்கொடுக்கும் கதை. கட்டப்பஞ்சாயத்து, கழுத்தை அறுக்கும் ரவுடியிஸம், ரியல் எஸ்டேட், கட்சித் தாவல் என அரசியலை அழுக்காக்கி அதன்மூலம் கல்வி வியாபாரியாகவும் மாறிய ஒரு வில்லன் அரசியல்வாதி அங்கண்ணன் (ஏ.எல்.அழகப்பன்). இவருக்கு நேர்மாறான ஒழுக்கசீலர் அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெயப்பிரகாஷ். தன் மகன் ஜீவாவை(அஸ்வின்) பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஆக்க வேண்டும் என கனவு காண்கிறார். இதற்கிடையில், அங்கண்ணனின் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி ஆளும் அவரது மகன் கிஷோரை (அர்ஜெய்) எதிர்பாராத சூழ்நிலையில் அறைந்துவிடுகிறார் ஜீவா. அங்கண்ணனின் கல்லூரியில். பொறியியல் இறுதியாண்டு பயிலும் அவருக்கு ‘மோசமான மாணவன்’ என்ற குறிப்புடன் நடத்தைச் சான்று வழங்கப்படுகிறது. கொதித்துப்போகும் அவர், நீதி கேட்டு அங்கண்ணனைச் சந்திக்கிறார். அதற்குப் பதிலாக அடியே கிடைக்கிறது. ஜீவா திருப்பி அடித்தாரா, இல்லையா, அவர் கையாண்ட வழிமுறை என்ன என்பதுதான் ‘திரி’.
கதாபாத்திரங்கள், அவர்களது பின்னணி ஆகியவற்றை அறிமுகப்படுத்தவே முதல் பாதிப் படத்தை எடுத்துக்கொண்டுவிட்டார் இயக்குநர் அசோக் அமிர்தராஜ். கதையின் முக்கிய பிரச்சினை என்ன, அதைத் தீர்க்க நாயகன் என்ன செய்கிறார் என்பதைச் சொல்ல இயக்குநரிடம் சுவாரசியமான காட்சிகளும் இருக்கின்றன. ஆனால், அவற்றைக் கோர்த்துக் கொண்டுசெல்ல திரைக்கதைதான் இல்லை.
ஒரு சினிமாவில் நல்ல கதை, சுவாரசியமான காட்சிகள், நாயக பிம்பம், நாயகியின் அழகு, நகைச்சுவை, அழுத்தமான சென்டிமென்ட், பாடல்கள், சண்டை, நடனம் இதில் ஏதாவது ஒன்றாவது ரசிகர்களை திருப்திப்படுத்தும். இந்தப் படத்தில் எல்லாமே ரசிகர்களைப் படுத்துகின்றன. ஒழுக்கப் பாடம் எடுக்கும் ஆசிரியரின் வீட்டு மாடியிலேயே பையன் நண்பர்களுடன் மது அருந்துவது, கல்லூரித் தாளாளர் மகன் என்று தெரியாமல் இறுதியாண்டு மாணவன் அவரையே அடிப்பது, சிடுமூஞ்சி போலீஸ்காரர் திடீரென திருந்துவது என்று ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்.
ஒழுக்கமான அப்பாவுக்கும், அதை கடைபிடிக்க போராடும் மகனுக்கும் இடையிலான உறவு, சொல்லாமலே வளரும் அஸ்வின் - ஸ்வாதி ரெட்டி காதல், அரசியல்வாதிகளின் கல்வி நிறுவனங்கள் செய்யும் தகிடுதத்தங்கள் என எல்லாவற்றையுமே நுனிப்புல் மேய்ந்ததுபோல சொல்கிறார்கள். மனதில் ஒட்டாத காட்சியமைப்புகளால், முத்தாய்ப்பான சில வசனங்கள்கூட எடுபடாமல் போகின்றன.
மிக மோசமான ஒரு அரசியல்வாதி கதாபாத்திரத்துக்கு ஏ.எல்.அழகப்பன் சுத்தமாகப் பொருந்தவில்லை. அதைவிடத் துயரம் கதாநாயகன் அஸ்வின். அப்பாவுக்கும் மகனுக்குமான காட்சிகளில் பாந்தமான நடிப்பைத் தரும் அஸ்வின் அரசியல்வாதியுடனும், அவரது மகனுடனும் மோதும் காட்சிகளில் பரிதாபகரமாகத் தெரிகிறார். புத்திசாலித்தனம், ஆக்ஷன் இரண்டின் கலவையாக வெளிப்பட்டிருக்கவேண்டிய ஒரு நாயகன் கதாபாத்திரத்துக்கான உழைப்பு, அஸ்வினிடம் போதுமான அளவுக்கு வெளிப்படவில்லை.
அழகப்பனின் பி.ஏ.வான சென்றாயன் செய்யும் சேட்டைகளை காமெடி கணக்கில் சேர்த்தால் சாமி குத்தம் ஆகிவிடும்! படத்தில் கருணாகரன் இருந்தும், கலகலப்பு இல்லை. அஜேஸின் பின்னணி இசையைப் பாராட்டலாம். பாடல்களுக்கே அவசியம் இல்லாத இந்தக் கதையில், வீணாக 2 குத்துப் பாடல்களைத் திணித்ததும் படத்துக்கு உதவவில்லை.
‘கல்வி என்பது அரசின் வசம்தான் இருக்கவேண்டும். பிரச்சினை என்று வந்தால், ‘எதற்கு வம்பு’ என்று படித்தவர்கள், நல்லவர்கள் ஒதுங்கிவிடக் கூடாது’ என்ற அழுத்தமான கருத்து இருந்தும், திரைக்கதையாக்குவதில் கோட்டை விட்டதால், கொஞ்சம்கூட பிரகாசிக்கவில்லை ‘திரி’