இந்து டாக்கீஸ்

ஈகோவால் தடுமாறும் போராட்டம்!

ஆர்.சி.ஜெயந்தன்

டந்த திங்கள் கிழமை (ஜூலை 3) திரையரங்குக்கு வந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்ததோ இல்லையோ, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அதிர்ந்துபோய் நின்றார்கள். கடந்த வெள்ளியன்று வெளியான ஏழு புதிய படங்கள், அதற்கு முதல்வாரம் வெளியான ‘வனமகன்’ உள்ளிட்ட மூன்று படங்கள் திரையரங்கில் இரண்டாவது வாரத்தைக் கடந்து கணிசமாக வசூல் செய்துகொண்டிருந்த நிலையில் திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டன.

“ஜி.எஸ்.டி 28 சதவீதம், உள்ளாட்சி நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட கேளிக்கை வரி 30 சதவீதம் ஆக மொத்தம் 58 சதவீதத்தை வரியாகக் கட்டித் திரையரங்கத் தொழில் நடத்த முடியாது. மற்ற மாநிலங்களைப் போல தமிழக அரசும் கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்தால் மட்டுமே இந்த இரட்டை வரிவிதிப்பின் சுமை பாதியாகக் குறையும். நாங்கள் ஜி.எஸ்.டியை எதிர்க்கவில்லை. ஆனால் கேளிக்கை வரியையும் கட்டினால் திரைப்படத் தொழிலே கேள்விக்குறியாகிவிடும்” என்று கூறியே தமிழ்த் திரைப்பட வர்த்தகசபை, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்ப்பட விநியோகிஸ்தர்கள் சங்கள் ஆகியவை தயாரிப்பாளர்கள் சங்கத்தைக் கலந்தாலோசிக்காமல் இந்த வேலை நிறுத்ததை அறிவித்துவிட்டதாகக் குமுறித் தீர்த்தார்கள் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்.

ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி இரண்டுமே திரைப்படம் பார்க்கவரும் மக்களுக்கான சுமை. இந்த இரண்டு வரிகளையும் டிக்கெட் விலையில் வைக்கும்போது திரையரங்குக்கு வரும் ரசிகர் கூட்டம் குறைந்துவிடும் என்பது திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்கத்தின் வாதம். நியாயமான வாதம்தான். ஆனால் சேவை வரியைக் குறைக்க வேண்டும், திருட்டு வீடியோ ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த மே மாதம் 30-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்தபோது அதற்கு ஆதரவு இல்லை என்று அப்போது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அறிவித்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழ்த் திரைப்பட வர்த்தக சபையும் விஷால் அறிவித்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை எனப் புறக்கணித்தது. போதிய ஒத்துழைப்பு இல்லாததால் விஷாலும் தனது முடிவை மாற்றிக்கொண்டு வேலைநிறுத்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றார்.

ஆனால் இந்த முறை வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படங்களை மனதில் வைத்து திரையரங்குகளை மூடாமல் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று விஷால் கூறியதை மூன்று சங்கங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதிலிருந்தே முழு வீரியத்துடன் நடந்திருக்க வேண்டிய இரட்டை வரிவிதிப்புக்கு எதிரான திரையுலகின் போராட்டம் ஈகோவால் இலக்கை எட்டமுடியல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரை வெளியாகியிருக்கும் சமயத்தில் வசூல் இழப்பை மனதில் கொண்டு திரையரங்க வேலைநிறுத்தம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், திரையுலகில் இரண்டு முதன்மையான சங்கங்களாகப் பார்க்கப்பட வேண்டிய தயாரிப்பாளர் சங்கத்தையும், சினிமா தொழிலாளர்களின் இணையமாகிய பெப்சியையும் தவிர்த்துவிட்டு, திரையுலகத்தை மற்ற சங்கங்கள் மட்டுமே நடத்திவிட முடியுமா என்பதுதான் திரையுலகில் அனைவரும் கேட்கும் கேள்வி.

இத்தனைக்குப் பிறகும் இரண்டு தரப்பும் தலைமைச் செயலகம் சென்று முதலமைச்சர், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து கேளிக்கை வரி விலக்கின் அவசியத்தை வலியுறுத்தியிருப்பதை அனைவரும் பாராட்டியிருக்கிறார்கள். கருத்துவேற்றுமைகள் இருந்தாலும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தை முதல்வரிடம் அழைத்துச் சென்றது விஷால்தான் என்று திரையரங்குத் தரப்பிலிருந்து பலர் தெரிவித்து வருகிறார்கள். அரவணைத்துச் செல்லும் இந்த ஒற்றுமையான அணுகுமுறை மட்டுமே திரைத்துறை எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைத் தேடித்தர முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சினிமா சங்கம், அனைத்துத் தரப்பையும் ஆலோசித்து எடுக்கும் முடிவுகளை சக சங்கங்கள் ஈகோ இல்லாமல் ஆதரிக்க முன்வரவேண்டும். இதுதான் ஒற்றுமைக்கான முதல்படி. இதைவிட முக்கியமாக அவரவர் தரப்பில் இருக்கும் தவறுகளைக் களைவதும் தவறான நடைமுறைகளைக் கைவிடுவதும் முக்கியமானது.

மாநகரங்களில் இணையம் வழியாக டிக்கெட்டை பதிவுசெய்துவிட்டுத் திரையரங்குக்கு வரும் புதிய வழக்கம் பிரபலமாகிவருகிறது. இப்படிப் பதியும்போது ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய்க்கும் அதிமாக இணையச் சேவைக் கட்டணம் வசூலிப்பதைத் திரையரங்க உரிமையாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தக் கட்டணம் பகல் கொள்ளையாக இருக்கிறது என்று ரசிகர்கள் தரப்பில் குமுறியும் அந்த நடைமுறையில் மாற்றங்களைச் செய்ய தயாரிப்பாளர் சங்கம் மட்டுமே முன்வந்தது. இந்தக் கட்டணம்10 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என்று கூறியது மட்டுமல்ல, தயாரிப்பாளர் சங்கமே இணையச் சேவையை அளிக்கவும் முன்வந்தது. இணையக் கட்டணக் கொள்ளையைப் போலவே மால் திரையரங்குகளில் பார்கிங் கட்டணம் ஒருமணிநேரத்துக்கு 30 ரூபாய் என்ற கொள்ளையைத் தட்டிக்கேட்க வேண்டியதும் திரையுலகினரே. முதலில் திரையுலகச் சங்கங்கள் முன்வந்து தடுக்கவேண்டிய கட்டணக் கொள்ளைகளை சரிசெய்துவிட்டு அதன்பிறகு வரிச்சுமை பற்றிப் போராட வாருங்கள் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

SCROLL FOR NEXT