இந்து டாக்கீஸ்

மொழி கடந்த ரசனை 39: வீண் பேச்சால் விரயமாகிவிடும் இரவு

எஸ்.எஸ்.வாசன்

தம்மிடம் உள்ள குறைகளைப் பார்க்காமல் மற்றவர்களின் செயல்களை எள்ளி நகையாடுவது இந்த உலகின் மிகப் பழைய மரபு. “வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா” என்ற அழகான யதார்த்தம் தொனிக்கும் வரிகளை எழுதிய அற்புதக் கலைஞன் கவி. கா.மு. ஷெரீப். ‘நான் பெற்ற செல்வம்’ படத்தில், இசை மேதை ஜி.ராமனாதன் இசையில் டி.எம்.சௌந்திரராஜன் குரலில் இடம்பெற்ற இப்பாடலை அப்படியே எதிரொலிக்கிறது ‘அமர் பிரேம்’ படத்தின் மற்றொரு பாடல். ஆனந்த பக்ஷ்யின் இசையில் உருவான ‘குச் தோ லோக் கஹேங்கே கஹனா லோகோங்கா காம் ஹை’ என்ற அப்பாடல் உலகின் பார்வையை விமர்சிக்கிறது.

உணர்ச்சி பொங்கும் அகன்ற விழிகளும் எல்லையற்ற அழகுடன் கூடிய பொலிவான தோற்றமும் இயற்கையாகவே அமைந்த ஷர்மிளா தாகூரின் உடல் மொழியும் உலகத்தை பற்றிச் சிறிதும் கவலையற்ற ஒரு கோடீஸ்வரனின் விட்டேற்றியான இயல்பை அனாயாசமாக வெளிப்படுத்தும் ராஜேஷ் கன்னாவின் நடிப்புத் திறனும் ‘அமர் பிரேம்’ படத்தைத் திரைக்கு அப்பாற்பட்ட காவியமாக ஆக்கியது. இப்படத்தில் தன் மீது உண்மையான அன்பு செலுத்தும் தேவதாசி பெண்ணுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றும் அவளின் நேசமுள்ள நண்பனின் பாத்திரத்தில் நடிக்கும் ராஜேஷ் கன்னா, இப்பாடலுக்கு முன்பும் பின்பும் கழுத்தைச் சாய்த்து ஒரு விசேஷக் கண்ணசைவுடன் சொல்லும் ‘Pushpa, I Hate Tears’(புஷ்பா நான் கண்ணீரை வெறுப்பவன்) என்ற ஆங்கில வசனம், பின்னர், ஏராளமான ரசிகர்கள் தங்கள் பேச்சில் மேற்கோள் காட்டும் ஒரு பிரபல சொலவடையாக மாறியது.

பாடலின் பொருள்

ஏதாவது சொல்லத்தான் செய்யும் இந்த உலகம்

எல்லோரையும் குறை சொல்வதுதான் அதன் குணம்

விட்டுத்தள்ளு வீண் பேச்சால் விரயமாகிவிடும் இரவு

எழுச்சி மிகு எல்லா காலைப் பொழுதுகளும் உடனே

மகிழ்ச்சியற்ற இரவாக மாறும் விதம் இங்குள்ள

உலகில் உள்ளன சில சடங்கு சம்பிரதாயங்கள்

சீதாவே களங்கப்பட்ட இங்கு சிறியவள் நீ எம்மாத்திரம்

பிறகு ஏன் இந்தப் பேச்சால் ஈரமானது உன் விழிகள்

(விலைமாதர்கள் ஆடிப் பாடி செல்வந்தர்களை மகிழ்விக்கும் இந்தக் கோதி பகுதிக்கு வந்து)

என்னை இழக்கிறேன் இந்த அற்ப சுகத்தில் என

வன்மத்துடன் வசை பாடும் பலர் இந்த வாசலுக்கு

வாடிக்கையாளராக மறைந்து வருவதை அறிவேன்

உண்மைதான் பொய் இல்லை உண்டா இல்லையா

உரைப்பாய் நீ

ஏதாவது சொல்லத்தான் செய்யும் இந்த உலகம்

எல்லோரையும் குறை சொல்வதுதான் அதன் குணம்.

முறையாக எவரிடமும் சங்கீதம் கற்காத கிஷோர் குமார் இப்பாடலில் காட்டும் ஏற்ற இறக்கங்கள், உணர்வு பொங்கும் உச்சரிப்புக்கள் அவரைப் போன்றே முறையான இசை கற்காத, குரல் வித்தையைக் காட்டும் நம் டி.எம்.சௌந்தரராஜன் ராஜனின் குரு என்று சொல்வது மிகை அல்ல.

‘அமர் பிரேம்’ படத்தில் லதா மங்கேஷ்கர் பாடியுள்ள ‘ரெர்னா பீத்தி ஜாயே ஷாம் நா ஆயே’ எனத் தொடங்கும் மற்றொரு பாடல் இந்திய இசையின் இனிமையை எடுத்துக்காட்டும் ஒரு அழகான பாடல். குர்ஜாரி தோடி ராகத்தில் அமைந்த ஆர்.டி. பர்மனின் இந்தப் பாடலுக்கு ஆனந்த் பக்ஷி எழுதியுள்ள எளிய வரிகள் ஆழமான கருத்து மிக்கவை. இந்தி மொழியில் ‘ஷாம்’ என்ற சொல் மாலைப் பொழுதை மட்டுமின்றி மாலை வேளையில் குழல் ஊதி கோபியரை மயக்கும் கிருஷ்ணனையும் குறிக்கும். இந்தப் புரிதலுடன் இந்தப் பாடல் கேட்கப்படும் பொழுது கூடுதல் ரசனை ஏற்படும்.

பாடலின் பொருள்

இரவு கழிந்து கொண்டே போகிறதே

இந்தக் கண்ணன் இன்னும் வரவில்லை

இமைகளில் உறக்கம் ஏற்படவில்லை

இந்தக் கண்ணன் இன்னும் வரவில்லை

மாலையில் (ஷாம் கோ) மறந்துவிட்டது

(ஷாம் கா) கண்ணனின் வார்த்தை

வண்ண தீபங்கள் ஏற்றி விழித்திருக்கிறாள் ராதா

விரக தாபத்தில் வேகிறாள் அவனின் தாசி

உடலும் உள்ளமும் வேட்கையில் அலைய

உற்றாய் பாயும் கண்ணீரில் விழிகள் நனைய

இரவு கழிந்து கொண்டே போகிறதே

இந்தக் கண்ணன் இன்னும் வரவில்லை.

கடினமான ஹிந்துஸ்தானி பத்ததியில் (ஒரே மூச்சில் நீண்ட ஸ்வரத்தையும் குறுகிய ஸ்வரத்தையும் ஒருங்கிணைத்து பாடுவது) லதா பாடிய இப்பாடலும் ராஜேஷ் கன்னாவின் மிதமான இயற்கையான மற்றும் எழிலான நடிப்பும் இப்பாடலை அமரத்துவம் ஆக்கியது.

SCROLL FOR NEXT