இந்து டாக்கீஸ்

இயக்குநரின் குரல் - கனவின் குறுக்கே ஒரு காதல்!

ஆர்.சி.ஜெயந்தன்

“பதின் பருவத்தின் உச்சம் என்றால் அது பதினாறு வயதுதான். இந்த வயதில்தான் அரசுத் தேர்வுகளை எதிர்கொள்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். பொறுப்புடன் படிக்க வேண்டிய நிலையில் அந்த வயதுக்கே உரிய விடலைத்தனங்களால் வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாகக் கருதுகிறார்கள். இந்தச் சமயத்தில் ஹார்மோன்களின் கலவரமும் அதிகமாக நிகழ்கையில் ஒரு உளவாளியைப் போல் குறுக்கிடுகிறது காதல் எனும் பொறி. அதில் சிக்கிவிடாமல் எப்படிக் கடந்துவந்து கனவுகளை வென்றெடுக்கலாம் என்பதைக் கொண்டாட்டமாகச் சொல்ல வருகிறது இந்தப் படம்” என்று வார்த்தைகளை அழகாகக் கோத்துப் பேசுகிறார் ‘உறுதிகொள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஆர்.அய்யனார்.

‘உறுதிகொள்’ என்ற தலைப்பு என்ன சொல்ல வருகிறது?

நாயகன் சந்திக்கும் பிரச்சினைகளை எப்படி உறுதியுடன் சந்தித்து வெற்றிபெறுகிறார் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே இந்தத் தலைப்பைத் தேர்வு செய்தோம். ‘கோலிசோடா’ படத்தில் மற்ற அனைவரையும்விட கிஷோர் வெளிப்படுத்திய ஆக்ரோஷமும் கோபமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அவர் தற்போது வளர்ந்து இளைஞராகிவிட்டார். இந்த நாயகனாக கிஷோர் சிறந்த தேர்வாக இருப்பார் என்று நினைத்தே ஒப்பந்தம் செய்தோம். எங்கள் தேர்வு வீண்போகவில்லை. மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இதில் அவருக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கின்றன. அதிலும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார். நாயகியாக மேகனா நடித்திருக்கிறார். நன்கு தமிழ் பேசத் தெரிந்த ஆந்திரப் பெண். நடிப்பில் இருவருமே போட்டி போட்டிருக்கிறார்கள்.

என்ன கதை?

“பத்தொன்பது வயதைக் கடக்காத பள்ளி மாணவ, மாணவிகள் இடையே உருவாகும் காதல் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. போதிய புரிதல் இல்லாத வயதில் ஏற்படும் காதல், பருவ மாற்றம் ஏற்படுத்துகிற இனக் கவர்ச்சிதானே தவிர அது காதல் இல்லை. இதைப் பதின்வயதில் இருப்பவர்களால் உணர முடியாது. இப்படி உணராமல் காதலிக்கிற ஒரு பள்ளி மாணவன், காதலிப்பதைக் கெத்தாக நினைக்கிறான். ஆனால், அது அத்தனை எளிதாகக் கடந்துபோய் விடக்கூடிய உணர்வு அல்ல என்பதை அவன் சந்திக்கும் பிரச்சினைகள் வழியாகக் கண்டுகொள்கிறான்.

பாடத்தில் இருக்க வேண்டிய கவனத்தை, காதலில் மடைமாற்றும்போது சக மாணவர்கள், பள்ளிக்கூடம், இருதரப்பின் குடும்பங்கள் என எல்லா மட்டங்களிலும் அவன் சந்திக்கும் சிக்கல்களைத் தீவிரமாக அலசாவிட்டாலும் கதைக்குத் தேவையான அளவுக்குத் தொட்டிருக்கிறோம்.

அதேபோல் காதலன் அழைக்கும் இடத்துக்கெல்லாம் பெண் பிள்ளைகள் போகக் கூடாது. அப்படிப்போனால் என்ன மாதிரியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பது கதையின் முக்கியத் திருப்பமாக இருக்கும். படம் பார்க்கும் பெற்றோரும் ஆண், பெண் பிள்ளைகளை எப்படியெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்ற படிப்பினையைப் படம் மறைமுகமாகப் போதித்துவிடும்.

- ஆர்.அய்யனார்

பதின்பருவக் காதலை மையப்படுத்தி ஏராளமான படங்கள் வந்துவிட்டனவே?

“சரியா, தவறா?” எனத் தெரியாத குழப்பமும் நம்மை ஏன் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அடிமைப்படுத்துவதுபோல் நடத்துகிறார்கள் என்ற எண்ணமும் உருவாகும் வயதுடைய இளைஞர்கள், யுவதிகளின் கதைகள் நிறைய வந்துவிட்டன. ஆனால், இந்த இரண்டும் கெட்டான் வயதில் எடுத்த முடிவு தவறாக இருந்தால் அதைத் திருத்தி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைப் புதிய கோணத்தில் எனது ‘உறுதிகொள்’ எடுத்துவைக்கும்.

உங்களைப் பற்றி?

விழுப்புரம் அருகேயுள்ள அடங்குணம்தான் எனது சொந்த ஊர். 15 ஆண்டுகள் சினிமாவில் உதவி இயக்குநராகப் போராட்டம். கடைசியாக ‘நெடுஞ்சாலை’ பட இயக்குநர் கிருஷ்ணாவிடம் பணியாற்றினேன். இப்போது படத்தையும் விழுப்புரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடத்தினேன். பி.அய்யப்பன், சி.பழனி உள்ளிட்ட என் நண்பர்களே படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். பாண்டி அருணாசலம் என்ற திறமையான இளைஞர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜூடு வினிகர் என்ற மற்றொரு இளைஞர் இசையமைத்திருக்கிறார்.

SCROLL FOR NEXT