இந்து டாக்கீஸ்

திரைமுன்னோட்டம்: இது எனக்கான நேரம்

ஆர்.சி.ஜெயந்தன்

காமெடியன்கள் கதாநாயகர்களாக அரிதாரம் பூசிக்கொள்வது தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. ஆனால் சந்தானம் கதாநாயன் ஆகியிருப்பதை, கோலிவுட்டில் கொஞ்சம் கோக்கு மாக்காகத்தான் பார்க்கிறார்கள். முன்னணி ஹீரோக்களின் படங்களில் சந்தானம் இருந்தால் படத்தின் வியாபாரத்துக்கு உதவும் என்றுதான் வளைத்து வளைத்து அவரது கால்ஷீட்டை வாங்கி அவரது காமெடியை வைத்தார்கள். ஒரு கட்டத்தில் கவுண்டமணி பாணியில் முன்னணி ஹீரோக்களை நக்கலடிக்கும் அளவுக்கு அவரது மதிப்பு ரசிகர்கள் மத்தியில் உயர்ந்தது. தற்போது சந்தானம் தனி ஹீரோவாக நடிக்கிறார் ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் புகைப்படங்கள் வெளியான நாளில் இருந்தே பல கதாநாயகர்களின் காதுவழியே திகு திகு புகைதானாம். அந்தப் புகைப்படங்களில். ஒரு இளம் வட இந்திய மாடலைக் கதாநாயகியாக்கி, அவருடன் பாலிவுட் ஹீரோ பாணியில் ஹேர் ஸ்டல், உடை, இறக்குமதி மேக் அப் என்று பட்டையைக் கிளப்பிவிட்டார் சந்தானம். ஒரு காமெடியன் போல் இல்லாமல், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒரு ப்ரெஷ்ஷான அறிமுக ஹீரோவாக சந்தானம் டாலடிக்கிறார்.

’வல்லவனுக்கு புல்லும் அயுதம் ’ படம் குறித்த விஷயங்கள் அப்படி பளிச்சிடவில்லை என்பதுதான் இப்போது செய்தி. முதலில் இந்தப ்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷஙக்ரும், தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியும் வந்து, முன்னணி ஹீரோக்கள் புடை சூழ இசையை வெளியிடுவார்கள் என்று அறிவித்தார்கள். ஆனால் இசை வெளியீட்டு விழாவுக்கு ஷங்கர் வரவில்லை. சந்தானத்தை அறிமுகப்படுத்திய சிம்பு வரவில்லை. அவரது நெருங்கிய ஹீரோ நண்பர்களான ஆர்யா, கார்த்தி உட்பட யாரும் வரவில்லை. ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ராஜமௌலி இயக்கிய ’ மரியாத ராமண்ண’ தெலுங்குப் படத்தின் மறு ஆக்கம் என்பதால் அவர் வந்திருந்தார். இந்த விழாவில் கொஞ்சம் கடுப்பாகவேதான் பேசினார் சந்தானனம்.

‘‘ இந்த விழாவுக்கு முன்னணி ஹீரோகள் யாரும் வரவில்லை. நான் நல்லா இருக்கனும்ன்னு நினைக்கிற உள்ளங்களைத்தான் கூப்பிட்டேன். அவங்க வந்துட்டாங்க எனக்கு அது போதும். இந்தப் படத்தில் நான் ஹீரோவாக நடிப்பதற்கு காரணமே என் ரசிகர்கள்தான். எனது நண்பர்களும் ரசிகர்களும் நான் ‘லொள்ளு சபா’ பண்ணும் காலத்திலிருந்தே என்னை ஹீரோவாக நடிக்கனும்னு கேட்டாங்க. அப்போ நான் அதற்கான நேரம் வரும் நடிக்கிறேன்னு சொன்னேன். அந்த நேரம் வந்துடுச்சி. இது எனக்கான நேரம். என் படம் பார்க்க வரும் ரசிகர்கள் ஏமாறக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இப்படம் எந்த விதத்திலும் ரசிகர்களை ஏமாற்றாது” என்று பேசினார்.

இந்தப் படத்தை காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் ஸ்ரீநாத் இயக்கியிருக்கிறார். இவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான ஜீவனின் உதவியாளர். சந்தானத்துக்கு ஜோடியாக ஆஷா சவேரி நடித்திருக்கும் இந்தப்படத்துக்கு இசை சித்தார்த் விபின். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வில் சந்தானத்துடன் கை கோர்த்து காமெடியில் கலக்கியவர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்! அவர் ஏற்று நடித்தது போன்ற ஒரு கேரக்டர் இந்தப் படத்திலும் உண்டு! அந்த கேரக்டரில் ‘திருமதி தமிழ்’ படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களைக் கலங்கடித்த ‘சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன் நடிக்கிறார்!

படத்தில் துரதிஷ்டம் துரத்திக்கொண்டேயிருக்கும் சந்தானம் சென்னையில் வாழும் இளைஞர். அவரது குடும்பத்தை அழித்த எதிரிகளிடமிருந்து சந்தானம் மட்டும் தப்பித்து சென்னைக்கு வந்துவிடுகிறார். ஒரு கட்டத்தில் கிராமத்தில் அவருக்கு ஐந்து ஏக்கர் நிலம் இருப்பதாகத் தகவல் வர அதை விற்றுவிட்டு வந்து தொழில் தொடங்கலாம் என்று கிராமத்துக்குக் கிளம்பிப் போகிறார். அங்கேதான் ஆஷா என்ற தேவதையைப் பார்க்கிறார். அவர் சந்தானம் குடும்பத்தை அழித்த வில்லனின் மகள். சிறுவனாகத் தப்பித்துப் போன சந்தானம் திரும்பி வந்துவிட்டதை அறிந்துகொண்ட வில்லன், கண்கள் சிவக்க மீசையை முறுக்குகிறார். ஒரு துளி ரத்தம் சிந்தாமல் எப்படி தனது, காதலியுடன் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் திரைக்கதை. ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கே உரிய கதை என்றாலும், முழுக்க நகைச்சுவை படம்தானாம். அதே நேரம் சந்தானத்தைப் புதிய ஆளாகப் பார்க்கலாம் என்கிறார் இயக்குநர் ஸ்ரீநாத். இந்தப் படத்துக்காக சந்தானம் பிரத்யேகமாக நடனம், சண்டை ஆகியவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறார்.

“இது எனக்கான நேரம்” என்று சந்தானம் சொல்வதை அவர் ரசிகர்களும் ஆமோதிக்கிறார்களா என்பது இன்னும் ஒருசில வாரங்களில் தெரிந்துவிடும்.

SCROLL FOR NEXT