கதை யாருடையது என்று கத்தி சண்டை நடந்துகொண்டிருக்கையில் நாம் 14 வருடங்கள் முன் வந்த ஒரு ஆங்கிலப் படத்தை இன்று விவாதிக்கலாம்.
கிரிஸ்டோஃபர் நோலன் இயக்கிய படம் மெமன்டோ. வித்தியாசமான திரைக்கதைக்குப் பெயர்பெற்றது.
ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் என்று மருத்துவ உலகினரால் அழைக்கப்படும் பிரச்சினையால் தவிக்கும் கதாநாயகன் தன் காதலியைக் கொன்றவனைப் பழி தீர்க்கும் கதை. 15 நிமிடங்களுக்கு மேல் எதுவும் நினைவில் நிற்காது. எந்தத் துப்பும் இல்லை. வஞ்சம் தீர்க்கப் போகிறான் நாயகன். உடலில் பச்சை குத்திக்கொண்டும், புகைப்படம் எடுத்து வைத்தும் தன் நிகழ்கால நினைவுகள் மூலம் கடந்த காலத்தைக் கட்டமைக்கிறான். அதுவும் துண்டு துண்டாக.
“அட, இது நம்ம கஜினி!” என்போருக்கு என் தாழ்மையான விண்ணப்பம். கஜினி பார்த்திருந்தாலும் மெமன்டோ பாருங்கள்.
காரணம் அந்தக் கதை படமாக்கப்பட்ட விதம் அபாரமானது. மிகச் சிறிய சோதனைப் படமாக, நட்சத்திரங்கள் இல்லாமல் வெளிவந்த படம். விருதுகள், விமர்சகர் பாராட்டு, வசூல் என ஏகமாக உலகம் முழுவதும் சக்கைப் போடு போட்டது. ஆஸ்கரைத் தவறவிட்டாலும் திரைக்கதைக்கு மட்டும் உலகமெங்கும் 13 விருதுகளை வாங்கிய படம் இது.
முதல் காட்சியில் கதையின் கடைசிப் பகுதியும், கடைசிக் காட்சியில் கதையின் முதல் பகுதியும் எனத் துண்டு துண்டாக முன்னும் பின்னும் இணைத்துப் பின்னப்பட்ட திரைக்கதையை அத்தனை திரை ஆர்வலர்களுக்கும் சிபாரிசு செய்வேன். கறுப்பு வெள்ளை காட்சிகளாகவும் வண்ணக் காட்சிகளாகவும் மாறி மாறிப் படம் பயணிக்கிறது.
கறுப்பு வெள்ளைக் காட்சிகள் 1 முதல் 22 காட்சிகள். வண்ணக் காட்சிகள் A முதல் V வரை. படக் காட்சி வரிசை 1, V, 2, U, 3, T, 4, S, ..., 22, A, என்று இருக்கும்.
இத்தகைய கதை சொல்லல் முறையைப் பிறகு பலர் கையாண்டனர். இருந்தும் கிரிஸ்டோஃபர் நோலன் போல இல்லை எனச் சொல்லலாம். இவர் பிறகு இன்செப்ஷன் படத்தில் கனவுக்குள் கனவு எனும் கதையைத் திரையில் காட்டியவர்.
மெமன்டோவை ஆரத் தழுவி எடுக்கப்பட்ட கஜினி ப்ளாஷ் பேக் முறையை மட்டும் கையாண்டு எளிமையான சீரான வடிவில் எடுக்கப்பட்ட படம். சூர்யா மற்றும் அசின் இருவரின் நடிப்பும், ஆர்ப்பாட்டமான இசையும் படத்தைத் தூக்கி நிறுத்தியது.
தமிழில் நாயகனின் பிரிவு வலியும், பழி உணர்ச்சியும் நம்மைப் பாதித்த அளவிற்கு அவன் சிந்தனைச் சிக்கல் நம்மைப் பாதிக்கவில்லை. ஆனால் மெமன்டோவில் அவன் உளச்சிக்கல் நமக்குப் புரியும். தகவலைத் தேடித் தேடி அலைந்து அதை நினைவுபடுத்தி, பின் நினைவுகளைக் கட்டுமானம் செய்யும் அவன் அவஸ்தை புரியும். காரணம் திரைக்கதை வடிவம்.
நாயகனின் பாயின்ட் ஆஃப் வியூதான் படம். அதனால் திரையில் தோன்றும் அத்தனை காட்சிகளும் அவன் மன நிகழ்வுகள். பார்வையாளனுக்கு வரும் குழப்பங்கள் நாயகனின் குழப்பங்களே. பார்வையாளனும் நாயகனும் ஒரே நேரத்தில் (படம் முடியும்போது) தெளிவதால் இந்தப் படம் ஒரு புதிய சிந்தனை மற்றும் உணர்வு அனுபவத்தைத் தருகிறது.
தம்பி ஜோனாத்தான் நோலன் எழுதிய சிறுகதையை அண்ணன் கிரிஸ்ட்போஃபர் நோலனுக்குப் படித்துக் காட்ட, முன்னும் பின்னுமாக நகரும் திரைக்கதையை கிரிஸ்ட்போஃபர் எழுத, அது நியூமார்க்கெட் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளருக்குப் படிக்கக் கிடைக்கிறது. “இது போன்ற ஒரு திரைக்கதையைப் படித்ததில்லை!” என்று சிலாகித்துத் தயாரிக்க ஆரம்பிக்கிறார்.
முதலில் பிராட் பிட் நடிக்கச் சம்மதித்து முடியாமல் போக கை பியர்ஸிற்கு அந்த வாய்ப்பு வருகிறது. 25 நாட்களில் படப்பிடிப்பு முடிகிறது. அமைதியாய் வெளிவந்த படத்தின் ஓபனிங்கே இதை பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்று உறுதி செய்கிறது.
நடிகருக்குக் கதை பண்ணாமல் நல்ல திரைக்கதைக்கு நடிகர்களைத் தேர்வு செய்யும்போது நல்ல படங்கள் எடுப்பது சுலபமாகிறது.
இதை நியோ நாய்ர் (Neo Noir) படம் என்று வகைப்படுத்துகிறார்கள். நம் ஊரிலேயே ஒரு மிகப் பிரமாதமான “நியோ நாய்ர்” படம் வந்து சரியாகக் கொண்டாடப்படவில்லை. அது ஆரண்ய காண்டம். படக் காட்சிகளை வித்தியாசமாக வரிசைப்படுத்தியதன் மூலம் பார்வையாளனின் காட்சி அனுபவத்தை எப்படி மாற்றி அமைக்கலாம் என்பதற்கு மெமன்டோ சிறந்த உதாரணம். ஒரு சாதாரணப் பழி வாங்கல் கதைதான். ஆனால் அதில் அம்னீஷியா உள்ள மனிதனின் உளச்சிக்கலை மிகச்சிறப்பாகத் திரையில் காட்டியதால் கிரிஸ்டோஃபர் நோலன் படம் தனித்து நிற்கிறது.
“எல்லா நல்ல சிறுகதைகளும் எழுதப்பட்டுவிட்டன” என்பார் சுஜாதா. அதனால் புதிதாகக்கூட எதையும் செய்ய வேண்டாம். இங்கு கதை பிரச்சினையே அல்ல. ஜீவனுள்ள கதைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றில் சிலவற்றை நல்ல திரைக்கதைகள் ஆக்கினால்தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயார் செய்ய முடியும்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com