இந்து டாக்கீஸ்

திகிலில் திரையரங்குகள்!

செய்திப்பிரிவு

கடந்த வெள்ளி, ஜூலை 7-ம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டன. அதற்கு முந்தைய வெள்ளி, ஜூன் 30 அன்று வெளியான சில படங்களுடன் ‘ஸ்பைடர் மேன்’ படம் மட்டுமே புதிதாக வெளியானது. வழக்கமாக ஹாலிவுட் மொழிமாற்றுப் படங்களுக்கு வரும் 60 சதவீத ரசிகர் கூட்டம்கூடத் திரையரங்குகளுக்கு வரவில்லை.

‘வனமகன்’, ‘இவன் தந்திரன்’ போன்ற தமிழ்ப் படங்களின் நிலமையோ படுபாதாளத்துக்குப் போய்விட்டது. சென்னைக்கு வெளியே ஓரிரு திரை கொண்ட திரையரங்குகளுக்கு ஒருகாட்சிக்கு 12 முதல் 25 ரசிகர்களுக்குமேல் வரவில்லை, பகல் காட்சிகளுக்கு ஐந்துபேரும், ஏழுபேரும் வந்ததால் காட்சியையே ரத்துசெய்ய வேண்டி வந்துவிட்டது என்று புலம்புகிறார்கள் பல திரையரங்க நிர்வாகிகள். திருச்சி, மதுரை,கோவை மாநரகங்களின் வளாகத் திரையரங்குகளிலும் சென்னை மால் திரையரங்குகளிலும் 30 முதல் 40 பேர் மட்டுமே ஒரு காட்சிக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

ஜி.எஸ்.டி.யால் உயர்ந்த டிக்கெட் விலைதான் இதற்குக் காரணமா என்றால் “அதுதான் முக்கியக் காரணம் என்றாலும் புதிய படங்கள் வெளியாகாமல் போனதும் ஒரு காரணம். ஜி.எஸ்.டியால் சினிமா டிக்கெட் விலை பலமடங்கு உயர்ந்துவிட்டதாகப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியான பரபரப்பான செய்திகளும் விவாதங்களும் ரசிகர்கள் வரத்தைக் குறைத்துவிட்டன. தற்போது ஜி.எஸ்.டி.க்குப் பிறகு உயர்த்தப்பட்டிருக்கும் டிக்கெட் கட்டண விகிதங்கள் 100 ரூபாயும் அதற்குக் கீழேயும் செலுத்திப் படம் பார்க்கும் ரசிகர்களைப் பாதிக்கப்போவதில்லை. இந்த வாரம் நிலமைச் சீரடையும் என்று எதிர்பார்க்கிறோம்” என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர்.

பயமுறுத்தும் கட்டணம்

ஸ்ரீதர் கூறுவது ஒருபுறம் இருக்க, மால் திரையரங்குகளில் இதுவரை விற்கப்பட்டுவந்த 120 ரூபாய் டிக்கெட் 153 ரூபாய் 60 காசுகளாக உயர்ந்திருக்கிறது. இந்த முப்பது ரூபாய் உயர்வைப் பார்த்துப் பல ரசிகர்கள் பாக்ஸ் ஆபீஸ்வரை வந்து படம் பார்க்காமல் திரும்பச் செல்வதாகக் கூறுகிறார்கள் மால் திரையரங்க ஊழியர்கள். இதே திரையரங்குகளில் முன்பு 95 ரூபாய்க்கு விற்கப்பட்ட டிக்கெட் தற்போது 112 ரூபாயாகவும் 85 ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்த டிக்கெட் 106 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன.

டிக்கெட் விலையேற்றம் உண்மையாகவே ரசிகர்களைப் புலம்பவைத்திருக்கிறது. ஆனால், மால் திரையரங்குகளின் இந்த டிக்கெட் கட்டண உயர்வைவிட வாகனங்களை நிறுத்துவதற்காக வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணம் மட்டுமே ஒரு டிக்கெட் விலைக்கு இணையாக இருப்பதை ஜீரணிக்க முடிவில்லை என்கிறார்கள். திரையரங்குகளின் உள்ளே பிஸ்கெட்டை எடுத்துவர அனுமதிக்காத காரணத்தால்தான் முதியவர்கள் படம் பார்க்க வருவதையே நிறுத்திக்கொண்டார்கள்.

பிஸ்கெட் என்றில்லை வேறு எந்தத் தின்பண்டத்தையும் எடுத்துவர அனுமதிக்காத நிலையில் உள்ளே விற்கும் உணவுப்பொருட்களின் பலமடங்கு விலைதான் குடும்பமாக வந்து படம்பார்க்கும் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவிடாமல் விரட்டி அடிக்கிறது என்பதே பலரது கருத்து.

கவலைப்பட மாட்டேன்

திரையரங்க வேலைநிறுத்தம் முடிந்திருந்த நிலையில் ஒரு சினிமா விழாவில் இதைப் பகிரங்கமாகவே உடைத்துப் பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால். “நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டருக்கு வரும்போது, பார்க்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம், தின்பண்டங்களின் விலை என அதிகத் தொகையைச் செலவிட வேண்டி உள்ளது.

திரையரங்குகளுக்கு இவ்வளவு வருமானம் வந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு இந்த வருமானம் வருவதில்லை. அதைச் சரி செய்ய வேண்டும். தியேட்டர்களுக்கு ரசிகர்களை மீண்டும் வரவைக்க வழிவகை செய்ய வேண்டும். இதையெல்லாம் சொன்னால் என்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை” என்பதுதான் விஷால் பேச்சின் சாராம்சம்.

நாங்கள் குற்றவாளிகள் அல்ல

“விஷாலின் கருத்தும் மக்களின் கருத்தும் மால் திரையரங்குகளுக்கு எதிரானதே தவிர, ஒன்று அல்லது இரண்டு திரைகளைக் கொண்ட சிறு திரையரங்குகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது அல்ல. தமிழகத்தில் உள்ள70 சதவீதத் திரையரங்குகள் நடுத்தர, சிறிய புற நகர்களில் இயங்கி வருகின்றன. இவற்றில் பார்க்கிங், தின்பண்டங்கள் போன்றவை நியாயமான விலையில் கிடைக்கின்றன. ஆனால், எங்களைப் போன்ற சிறிய திரையரங்குகளை வைத்து 30 சதவீதக் கேளிக்கை வரிவிலக்கால் அதிக டிக்கெட் விலைகொண்ட மால் திரையரங்குகள்தான் லாபமடைந்திருக்கின்றன. இவை எல்லாமே மாநகராட்சி பகுதிகளில் உள்ள திரையரங்குகள். இவர்களுக்கு அரசு இயந்திரம், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொல்லைகள் இருக்காது.” என்கிறார் புறநகர் திரையரங்க நிர்வாகி ஒருவர்.

மறுபடியும் வரிவிலக்கு

தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாட்டின்படி, கேளிக்கை வரி தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கப்பட்டிருப்பதால் டிக்கெட் விலையேற்றம் என்பது இப்போதைக்கு ஜி.எஸ்.டியுடன் மட்டும் தொடர்கிறது. தமிழக அரசு அமைத்திருக்கும் குழு, முன்போலவே அரசு எதிர்பார்க்கும் தகுதிகளுக்கு ஏற்பத் (தமிழில் தலைப்பு, யூ சான்றிதழ்) தயாராகும் படங்களுக்குக் கேளிக்கை வரிவிலக்கு அளித்தால் அதன் பலன் நிச்சயமாகப் பார்வையாளர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை.

ஆனால், வரிவிலக்கு பெற முடியாத படங்களின் டிக்கெட் கட்டணம் ஜி.எஸ்.டி., கேளிக்கை வரியுடன் சேர்ந்து மேலும் உயர்ந்தால் ரசிகர்கள் குழப்பத்துக்கு ஆளாவது மட்டுமல்ல; திரையரங்கின் பக்கமே தலைவைத்துப் படுக்க வேண்டாம் என்று நினைக்க வைத்துவிடும். மீண்டும் ‘யூ’ சான்றிதழை மனதில் வைத்து படங்களை எடுக்கும் போக்கும் தொடரும். தரமான படைப்புகளைத் தர வேண்டிய தமிழ் சினிமா தன் எல்லைகளை வரி விலக்குக்காகச் சுருக்கிக்கொள்வது அதன் வளர்ச்சியைத் தடுக்கும். எப்படியிருந்தாலும் மாநில அரசின் முடிவை எதிர்நோக்கி திகிலுடன் காத்திருக்கின்றன திரையரங்குகள்.

SCROLL FOR NEXT