இந்து டாக்கீஸ்

நட்சத்திர சந்திப்பு: எதிர்பாராதது!

அ.முத்துலிங்கம்

ஒரு பிரபலத்தை நேர்காணல் செய்வதற்கு எனக்கு ஒரு வருடகாலம்கூட அலையவேண்டி இருந்திருக்கிறது. என் வாழ்க்கையில் பலரை நேர்காணல் செய்திருக்கிறேன். பிரபல எழுத்தாளர்கள், நடிகர்கள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், இயக்குநர்கள், பாடகர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் எளிதில் நேரத்தை ஒதுக்கித் தரமாட்டார்கள். தட்டிக் கழிக்கவே செய்வார்கள். ஆனால், சமீபத்தில் எனக்கு ஒருசின்ன அதிர்ஷ்டம் அடித்தது. நான் தேடிப்போகாமல் அதுவாகவே என்னிடம் வந்தது. நான் கனவிலும் எதிர்பாராத ஓர் உலகப் பிரபலமான நடிகருடன் பத்து நிமிடம் பேசும் வாய்ப்பு. துயரம் என்னவென்றால் என்னால் நேர்காணலுக்குத் தயாராக முடியவில்லை.

அது தற்செயலாக நடந்தது. பேருந்து புறப்பட்டுவிட்டது. நான் கடைசி இருக்கையில் உட்கார்ந்தேன். அது ஒன்றுதான் இருந்தது, மீதி எல்லாம் நிரம்பிவிட்டன. இனி ஒருவரும் ஏறப்போவதில்லை, ஏறினாலும் இடமில்லை என்று யோசித்துக்கொண்டிருந்தபோது ஓடிய பேருந்து திடீரென நின்று கதவு திறந்தது. இரவு மணி ஒன்பது ஆனாலும் கோடைக்காலம் என்பதால் அமெரிக்காவின் சியாட்டில் நகரத்துச் சூரியன் முழுதும் மறையாமல் தயக்கம் காட்டியபடியே நின்றான்.

பேருந்தினுள் பாதி இருள் பாதி வெளிச்சம். கையிலே மதுப்புட்டியை ஏந்தியபடி உயரமான ஓர் உருவம் ஏறி ஒவ்வொரு இருக்கையாகப் பார்த்தபடி கடைசி ஆசனத்துக்கு வந்தது. நான் என்னைச் சுருக்கி இடம் விட்டேன். வந்தவர் என்னை நெருக்கிக்கொண்டு உட்கார்ந்து “நன்றி” என்றார்.

28chrcj_airforce one‘ஏர் போர்ஸ் ஒன்’ படத்தில்

அவர் வேறு யாரும் அல்ல. பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் ஃபோர்டு. ‘ஸ்டார் வார்ஸ்’(Star wars) படத்தில் நடித்துப் புகழ் பெற்றவர்.

இவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த இன்னொரு படமான ‘இண்டியானா ஜோன்ஸ்’(Indiana Jones), இலங்கையில் கண்டி நகரத்தில் படம்பிடிக்கப்பட்டது. இந்தி நடிகர் அம்ரிஷ் பூரி அதில் நடித்திருப்பார்.

இவர் நடித்த படங்களில் எனக்குப் பிடித்த ஒன்று ‘ஏர் போர்ஸ் ஒன்’(Air Force One). அதில் அமெரிக்க ஜனாதிபதியாக நடித்திருப்பார். ரஷ்யாவுக்குப் போய்விட்டு திரும்பும்போது அவருடைய விமானம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு விடுகிறது. முன்னாள் ராணுவ வீரரான ஜனாதிபதி கடத்தல்காரர்களுடன் போராடி வெற்றிபெறும் கதை.

அன்று மதியம் நடந்த விருந்தில் கலந்து கொண்டிருந்தபோது என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார்கள். என்ன பேசுவது? “நீங்கள் நடித்த படம் பார்த்தேன். உங்கள் நடிப்பு அமோகமாயிருந்தது”- அப்படிச் சொல்வதா? நான் ஒன்றுமே பேசவில்லை. பிரபலமில்லாதவர்களுடன் உரையாடலைத் தொடங்குவது எளிதானது. எனக்குப் பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். வயது 30 அல்லது 35 இருக்கும். சாதுவான முகம்.

தன் நீண்ட தலைமுடியைப் பாம்புபோல வட்டம் வட்டமாகச் சுருட்டி தலைக்குமேல் வைத்திருந்தார். ஏதாவது பேசவேண்டுமே என்று “என்ன செய்கிறீர்கள்?” என்று சாதாரணமாகக் கேட்டு வைத்தேன். அவரும் சாதாரணமாகவே பதில் சொன்னார். “இசை ஞானம் உள்ளவர்கள் சிலர் வசதிக் குறைவால் தங்கள் இசையைக் குறுந்தகடாக வெளியிட முடியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுகிறேன்” என்றார். “நல்ல பணி” என்றேன். பின்புதான் தெரிந்தது அந்த இளைஞர் ஒரு கோடீஸ்வரர் என்று. விருந்துக்கு இன்னொரு மாகாணத்திலிருந்து சொந்த விமானத்தில் வந்திருந்தார்.

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இன்னொருவர், 30 வருடங்களாகத் தோழமை பாராட்டி வருபவர். ஆப்பிரிக்காவில் எனக்குப் பழக்கமானவர். “இப்படியான விருந்துகளில் “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டால் அவர்கள் அன்று காலை செய்ததைத்தான் சொல்வார்கள். நீங்கள் என்ன துறையில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும்.

இவர்கள் பணம் சம்பாதிப்பது எப்படி என்று சிந்திப்பதை நிறுத்திவிட்டார்கள். ஏற்கெனவே சம்பாதித்ததை எந்த அறக்கட்டளைக்கு, எப்போது, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதைத் திட்டமிடுவதிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறார்கள்.” என்றார்.

ஆகவே, பேருந்திலே பக்கத்தில் அமர்ந்த ஹாரிசனிடம் எப்படி உரையாடலைத் தொடங்குவது என்று யோசித்தேன். அந்தப் பிரச்சினையை அவரே தீர்த்தார். மதுவை ஒரு மிடறு விழுங்கிவிட்டு “நீங்கள் கனடாவிலிருந்து வந்திருக்கிறீர்கள். இல்லையா?” என்றார். மதிய விருந்தில் சந்தித்ததை ஞாபகம் வைத்திருக்கிறார். “நான் கனடாவில் ஒரு படம் நடித்திருக்கிறேன். ஆனால் அதன் பெயர் சட்டென்று நினைவுக்கு வரமறுக்கிறது” என்றார்.

“நீர்மூழ்கிக் கப்பல் படமா?” என்றேன். “ஆமாம்” எனத் தலையாட்டினார். அவர் ஒரு ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் கேப்டனாக நடித்திருந்தார். கதை முழுக்க கடலுக்கு அடியில் நடந்தாலும் படத்தில் விறுவிறுப்புக்குக் குறைவில்லை. படத்தின் பெயர் ‘கே 19(K19) என்றேன். அவர் “ஆமாம்” என்றபடி இன்னொரு மிடறு குடித்தார். என் முகத்தைப் பார்த்தார். நான் தொடர்ந்தேன்.

28chrcj_indiana jones ‘இண்டியானா ஜோன்ஸ்’ படத்தில்

“உங்கள் சுயசரிதையை எழுதும் திட்டம் ஏதாவது உண்டா?” “சுயசரிதையா, நானா, ஏன் எழுத வேண்டும்?”

“உங்கள் கதை சுவாரசியமானது. மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்”

“எப்படிச் சொல்கிறீர்கள்?”

“நடிக்க வாய்ப்புத் தேடி நீங்கள் அலைந்திருக்கிறீர்கள் என்று படித்திருக்கிறேன். உங்களுக்குக் கிடைத்த பல வாய்ப்புகள் தற்செயலானவை. அது பற்றி எழுதலாமே?”

“வாழ்க்கையில் எல்லாமே தற்செயலாக நடப்பவைதான். நீங்கள் யாருடைய வாழ்க்கையை எடுத்துப் பார்த்தாலும் அப்படித்தான் இருக்கும். திட்டமிட்டு அதன்படி வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் என்று இந்த உலகில் யாருமே இல்லை.”

“உங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்வதில் அப்படி என்ன பிரச்சினை?”

“என் வாழ்க்கையை நான் பதிவு செய்யக்கூடாது. அதை மற்றவர்கள் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அது உண்மையாக இருக்கும். சுயசரிதை எழுதுபவர்கள் தங்கள் உண்மை வாழ்க்கையை மறைக்கத்தான் எழுதுகிறார்கள்.”

“நீங்கள் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் இயக்கத்திலும் நடித்திருக்கிறீர்கள். ஜார்ஜ் லூகாஸுடன் தொடக்கத்திலிருந்து வேலை பார்த்திருக்கிறீர்கள். அவர்களுடனான உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?”

அவர் பதில் சொல்லும் முன்னர், பேருந்தின் முன் இருக்கையிலிருந்து ஓர் இளைஞன் எழுந்து எங்களை நோக்கி நடந்து வந்தான். அவன் ஹாரிசனைப் பார்த்து “கொஞ்சம் ட்ரிங் தரமுடியுமா?’ என்று கேட்டான். நான் திடுக்கிட்டு ஹாரிசனைத் திரும்பிப் பார்த்தேன். அவர் “தாராளமாக” என்று சொல்லிக்கொண்டே தன் மதுப்புட்டியை நீட்டினார். அந்த இளைஞன் அதை வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டுத் திரும்பக் கொடுத்தான்.

ஹாரிஸன் என் கேள்வியை மறக்காமல் தொடர்ந்தார். “நான் நடிக்க வந்ததே எதிர்பாராத ஒன்று. நானாகவே தச்சு வேலை கற்று என் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருந்தேன். ஜார்ஜ் லூகாஸின் ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தில் நடிகர்களுக்கு வசனம் பேசக் கற்றுக் கொடுத்தேன். என்னை நடிக்கச் சொன்னார்கள். அவர்கள் சொல்லித் தந்ததை அப்படியே நடிப்பதுதான் என் வேலை. ஒவ்வொருவரிடமும் நிறையக் கற்றிருக்கிறேன். இவர்தான் உயர்வு என்று சொல்வதற்கு எனக்கு ஒருவரும் இல்லை. நடித்து முடிந்த பின்னர் அதைப் பற்றி எல்லாம் யோசிப்பதே இல்லை. உடனேயே மறந்துவிடுவேன்.”

இப்படி அவர் பேசிக்கொண்டு வந்தபோது நான் தங்கும் விடுதி வந்துவிட்டது. நான் விடைபெற்றேன். என்னை இறக்கிவிட்டுவிட்டுப் போன பேருந்தில் அவர் போனார். யாரோ ஒரு பயணி குடித்து மிச்சம்விட்ட மதுப்புட்டியும் அவருடன் போனது. தி எண்ட்.

கட்டுரையாளர், கனடாவில் வசித்துவரும் தமிழ் எழுத்தாளர்,
ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழுவின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்.

தொடர்புக்கு appamuttu@gmail.com

SCROLL FOR NEXT