இந்து டாக்கீஸ்

நான் வில்லி அல்ல! - நடிகை கஜோல் பேட்டி

கா.இசக்கி முத்து

சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த் திரையுலகுக்கு திரும்பியுள்ளார் கஜோல். சென்னை வந்திருந்த அவரிடம் பேசியதிலிருந்து...

தமிழ்த் திரையில் இத்தனை வருடங்கள் நடிக்காமல் இருந்ததற்குக் காரணம் இருக்கிறதா?

எனக்குத் தமிழ் மொழி கடினமாக இருந்தது. ‘மின்சாரக் கனவு’ படத்தில் நடித்தபோது, தமிழில் பேசி நடித்து அம்மொழிக்கு நியாயமாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. காரணம் தமிழ் மொழி பேசுவது மிகக் கடினமாக இருந்தது. அதனால்தான் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் நடிக்கவில்லை.

தனுஷிடம் கதையைக் கேட்டவுடன் என்ன நினைத்தீர்கள்?

கதையைக் கேட்டபின்பும் நடிக்க வேண்டாம் என்ற முடிவில்தான் இருந்தேன். தனுஷ், “நீங்கள் சைனீஸ், ஆங்கிலம் என எந்த மொழியில் பேச வேண்டும் என நினைக்கிறீர்களோ பேசுங்கள். எங்களுக்குப் போதும்” என்றார். “நடிப்பு சரியாக இருந்தால் போதும் நாங்கள் டப்பிங்கில் பார்த்துக் கொள்கிறோம்” என்றார். ஆனால், படத்தில் அப்படி இருக்காது. படப்பிடிப்பில் நான் தமிழில் பேசியே நடித்தேன். அனைவரது முயற்சியும், எனது வேலையை எளிதாக ஆக்கியது. இல்லையென்றால் கஷ்டப்பட்டிருப்பேன்.

உங்கள் கதாபாத்திரம்?

வசுந்தராவாக வருகிறேன். அற்புதமான கதாபாத்திரம். தானாக உழைத்து உயர்ந்த பல ஆண் கோடீஸ்வரர்களைப் போல இவளும் சொந்த உழைப்பால் கோடீஸ்வரியானவள். தனது அடையாளத்தை உருவாக்க யார் உதவியையும் பெறாதவள். இது ஒவ்வொரு பெண்ணின், ஏன் ஒவ்வொரு மனிதரின் லட்சியமாக இருக்கும் என நினைக்கிறேன். அந்த வகையில் என் மரியாதைக்கு உரியவள் வசுந்தரா. ரசிகர்களின் மரியாதையும் அவளுக்குக் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை.

வில்லியாக நடித்துள்ளீர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளதே...

நான் இதில் வில்லி அல்ல. இது இரண்டு கதாபாத்திரங்களின், இரண்டு ஆளுமைகளின், இரண்டு சிந்தனைகளின், இரண்டு சித்தாந்தங்களின் இடையே நடக்கும் மோதல். இருவேறு வித்தியாசமான சூழலைச் சேர்ந்தவர்கள் சந்திக்கிறார்கள். ஒருவருக்கு இன்னொருவரின் பார்வை பிடிக்காது. அங்குதான் மோதல் வெடிக்கும். நேர்மறை, எதிர்மறை எனக் குறிப்பிட்டு எந்தக் கதாபாத்திரமும் கிடையாது. எல்லோருக்கும் பிரச்சினைகள் இருக்கும். அதை எப்படித் தீர்த்துக்கொள்கிறார்கள் என்பதே கதை.

தமிழ்ப் படங்களைப் பற்றிய உங்களது பார்வை என்ன?

நான் அதிகமாகப் படம் பார்ப்பவள் அல்ல. பல நல்ல படங்களைப் பார்க்கத் தவறியிருக்கிறேன். நல்ல இயக்குநர்களின் வாய்ப்புகளையும் தவற விட்டிருக்கிறேன். பல திறமையான இயக்குநர்கள் தென்னிந்தியாவில் இருக்கிறார்கள். சில மலையாளப் படங்களைப் பார்த்தேன். பல திறமைசாலிகள் அங்கிருக்கின்றனர். பலருக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றாலும் திறமையானவர்கள்.

‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ திரைப்படம் தற்போது வரை சாதனை புரிந்து வருகிறது. அதைப் படமாக்கும் போது இதை உணர்ந்தீர்களா?

ஒரு நல்ல அழகான படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை மட்டும் அப்போது இருந்தது. இப்படியொரு வரவேற்பையோ இவ்வளவு வருடங்கள் அது ஓடும் என்றோ நினைக்கவில்லை. அதை மீண்டும் உருவாக்க முடியாது. அந்தப் படத்தை மறு ஆக்கம் செய்யவும் முடியாது.

பெண்களை முதன்மைப்படுத்தும் கதாபாத்திரங்களைத் தற்போது இயக்குநர்கள் சிருஷ்டிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

நடிப்பைத் தேர்ந்தெடுக்கிறவர்களுக்கு இந்திய சினிமாவில் இது பொன்னான நேரம் என நினைக்கிறேன். தற்போது புதிய வகைத் திரைப்படங்களுக்கு நம் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. வெறும் காதல் படங்களும் ஆக்‌ஷன் படங்களும் மட்டுமே வருவதில்லை. பல விதமான பிரச்சினைகளை, உறவுகளைப் படங்கள் பேசுகின்றன. புதிய முயற்சிகள் ஓடவில்லை என்றால் தொடர்ந்து முயல மாட்டார்கள். நல்லவேளையாகப் புதிய முயற்சிகளை நாம் தொடர்ந்து ஆதரித்துவருகிறோம். சினிமா தன் முக்கியத்துவத்தை இந்தியாவில் இழக்கவில்லை.

SCROLL FOR NEXT