"ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பத்திலாவது தோல்வியைச் சந்திப்பார். ஆனால், ‘தோல்வியைச் சந்தித்தாலும் கடைசிவரைக்கும் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் போராடிக்கொண்டே இருப்பேன், வெற்றி என்னை வந்து சேரும்’ என்ற முனைப்போடு இருக்கும் மனிதர்களை ஜெயிக்கவே முடியாது என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்கரு.
பல இடங்களில் மனதைத் தொடுவது போலவும், உத்வேகம் அளிக்கும் வகையிலும், விடாமுயற்சியை வளர்க்கும் வகையில் வசனங்கள் எழுதியிருக்கிறேன்” என்று மிகவும் உற்சாகத்தோடு பேசினார் அஜித் நடித்திருக்கும் ‘விவேகம்’ படத்தின் இயக்குநர் சிவா. பனிப்பிரதேசக் காட்சிகளை எல்லாம் திரையில் ஓடவிட்டு, சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தவரிடம் பேசியதிலிருந்து...
3-வது முறையாக அஜித் படம் பண்ணலாம் என்று அழைத்தபோது என்ன நினைத்தீர்கள்?
சந்தோஷமாக இருந்தது. முதலில் அஜித் சாருடன் பணிபுரிவது என்பது ஒரு வரம். திறமையான, நல்ல நடிகர், கடின உழைப்பாளி. ஒரு படத்தை ஒப்புக்கொண்டார் என்றால், அதற்கு என்ன தேவையோ அதை ரொம்ப நேர்மையாகச் செய்வார். ஒவ்வொரு படத்தையும் சிறப்பாகவும் அவர் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதத்திலும் செய்ய வேண்டும் என்றுதான் முதலில் நினைப்பேன். எப்படி அவர் மீது எனக்கு இருக்கும் மதிப்பு, மரியாதை அதிகரித்துக்கொண்டே இருக்கிறதோ, அதே மாதிரி ஒவ்வொரு படத்திலும் அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பேன்.
ஆமாம். என்ன மாதிரி படம் பண்ணலாம் என்று பேச்சு வந்தபோது, சர்வதேசத் தரத்தில் படம் பண்ணலாம் என்று முடிவுசெய்தோம். அஜித் சாருடைய பலம் என்ன, மாஸ் வேல்யூ என்ன என்பதை மனதில் வைத்து ஒரு நல்ல கதையை ஒரு புதிய களத்தில் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் செய்திருக்கிறோம்.
‘விவேகம்’ வெளிநாட்டில் நடைபெறும் கதையாக இருந்தாலும் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட கதைதான். இந்திய உணர்வுகள், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் ஆகியவற்றைச் சர்வதேசக் கதைக் களத்தில் கூறியுள்ளேன். ‘ஸ்பை த்ரில்லர்’ வகையில் இப்படம் இருக்கும். இந்த வகையில் தமிழ்த் திரையுலகில் அதிகப் படங்கள் வந்ததில்லை.
பனிப்பிரதேசங்களில் அதிகநாள் படப்பிடிப்பு என்பது கடினமாக இருந்திருக்குமே?
உண்மைதான். சினிமா என்பதே மிகவும் கடினமான தொழில். குடும்பத்தை விட்டுவிட்டு மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டுப் போய் உழைக்க வேண்டும். அதிலும் இப்படத்தில் 2 மாதங்கள் குடும்பத்தைப் பிரிந்து, மைனஸ் 16 டிகிரி குளிரில் படப்பிடிப்பு செய்தோம். கடுமையான குளிர், உயரமான ஆக்ஸிஜன் குறைவான இடங்கள், இதுவரை கேமரா வைக்காத இடங்கள், மனிதர்களே போகாத இடங்கள் என ரொம்பக் கஷ்டப்பட்டுப் படமாக்கியுள்ளோம்.
ஒவ்வொரு நாளுமே சவாலாகவும், அந்த நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் பெரிதாகச் சாதித்துவிட்ட திருப்தியுடன்தான் வருவோம். உறைய வைக்கும் குளிரில் படமாக்கிய பைக் துரத்தல் காட்சியை மறக்கவே முடியாது. ஏனென்றால் படமாக்கிய சாலைகள் பனியால் பாதிக்கப்பட்டிருந்தன. அதற்கு மேல் பைக் துரத்தல் என்பது சாதாரணமான விஷயமல்ல. அந்த அனுபவத்தைப் படம் பார்க்கும்போது அனைவருமே உணர்வார்கள்.
‘தலை விடுதலை’ என்ற பாடலுக்காக செர்பியாவின் பனிப்பிரதேசத்தில் மலைஉச்சியில் எடுக்கப்பட்ட காட்சிகள். அந்த இடத்துக்குப் போகும்போதே இரவு 1 மணிக்கு எங்களது வண்டி பனியில் சிக்கிக்கொண்டது. கிட்டத்தட்ட 5 மணி நேரம், எந்தவித உதவியுமின்றிப் பனிப்பொழிவுக்கு நடுவில் பயத்தோடு நின்றுகொண்டிருந்தோம். கடவுள் புண்ணியத்தில் எங்களை மீட்டுவிட்டார்கள். இப்படிப் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தும்போது, அஜித் சார் எங்கேயும் முகம்சுளிக்கவே இல்லை. எனது அணியும் மனம் தளரவில்லை.
ஒவ்வொரு படத்திலுமே சிவா அண்ட் டீம் என்று பெயர் போடுகிறீர்களே. என்ன காரணம்?
என்னோடு பணியாற்றும் அனைவருமே மிகவும் திறமையானவர்கள், நேர்மையானவர்கள், உண்மையானவர்கள். அதனால்தான் ஒவ்வொரு படத்தின் முடிவிலும் சிவா அண்ட் டீம் எனப் போடுவேன். ஏனென்றால் நாங்கள் ஒரு அணி, நாங்கள் கடுமையான உழைப்பையும் நேர்மையான படத்தையும் திரும்பத் திரும்பக் கொடுத்துக் கொண்டே இருப்போம்.
ஒவ்வொரு படத்துக்கும் அணியினரை மாற்றுவது என்னால் முடியாது. எனது அணியினர் அனைவருமே நான் நன்றாக இருக்க வேண்டும், நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என நினைப்பார்கள். எனது அணியில் உள்ள உதய், வெற்றி, முத்து உள்ளிட்ட அனைவருமே ஒன்றாகப் படித்தோம். அந்தக் காலகட்டத்திலிருந்து ஒன்றாகப் பயணிக்கிறோம்.
மீண்டும் அஜித்தோடு அடுத்த படம் என்று செய்திகள் வலம் வருகின்றனவே...
‘விவேகம்’ படத்தில் மட்டுமே எனது முழுக் கவனமும் இருக்கிறது. அடுத்த படத்தைப் பற்றி யோசிக்கவில்லை. அஜித் சார் மறுபடியும் படம் பண்ணலாம் என எத்தனை முறை அழைத்தாலும், அவரோடு படம் பண்ணுவேன். மறுபடியும் படம் செய்கிறோம் என்ற அறிவிப்பு கண்டிப்பாக என்னிடமிருந்து வராது. அஜித் சாரிடமிருந்துதான் வரும்.