இந்து டாக்கீஸ்

சினிமாஸ்கோப் 40: ரத்தக்கண்ணீர்

செல்லப்பா

குற்றச் செயல்களால் எளிதில் ஈர்க்கப்படும் மனிதர்கள், அவற்றின் பின் விளைவுகளை எதிர்கொள்ளவே அச்சப்படுகிறார்கள். குற்றத்துக்குத் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தைவிடப் பிறரை எதிர்கொள்ளத் தயங்கியே பல குற்றங்களை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவ்வளவு எளிதில் எந்தக் குற்றத்தையும் மறைத்துவிட இயலாது; எல்லாக் குற்றங்களும் தம்மை வெளிப்படுத்திக்கொண்டுவிடும் என்பதுதான் இயற்கையின் ஏற்பாடு. குற்றம் தன்னை வெளிப்படுத்தும் புள்ளியிலிருந்து தொடங்குகிறது திரைக்கதையின் சுவாரசியமான பயணம்.

ஸ்பெயினைச் சேர்ந்த இயக்குநர் உவான் அந்தோனியோ பர்தெம் (Juan Antonio Bardem) இயக்கிய ‘டெத் ஆஃப் எ சைக்கிளிஸ்ட்’ (1955) என்னும் படம் கான் திரைப்பட விழாவில் திரைப்பட விமர்சகர்களின் சர்வதேசக் கூட்டமைப்புப் பரிசை வென்றது. இந்தப் படத்தின் தொடக்கத்தில், ஒரு ஜோடி காரில் செல்கிறது. ஆளற்ற சாலையில் விரைந்துசெல்லும் அந்த கார், சைக்கிளில் சென்ற மனிதன் ஒருவன்மீது மோதிவிடுகிறது.

cyclistjpg

இளைஞன் இறங்கிச் சென்று பார்க்கிறான் அடிபட்ட மனிதனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. உடனிருக்கும் பெண் அங்கிருந்து சென்றுவிடலாம் என இளைஞனைத் தூண்டுகிறாள். இருவரும் நகர்கிறார்கள். அடிபட்ட மனிதன் இறந்துவிடுகிறான். மறு நாள் நாளிதழில் இது செய்தியாகிறது. அவர்கள் இருவரும் காரில் சென்றதைப் பார்த்ததாகக் கலை விமரிசகன் ஒருவன் அவர்களை, குறிப்பாக அந்தப் பெண்ணை மிரட்டுகிறான். அவர்கள் மனங்களில் பீதி படர்கிறது.

காதலெனும் உறவு

காரில் வந்த இருவரும் கணவனும் மனைவியும் அல்ல. இருவரும் காதலர்கள். காரில் சென்ற ஆண் கல்லூரி ஒன்றில் பேராசிரியர். அந்தப் பெண்ணும் சமூக அந்தஸ்து பெற்ற ஒருவருடைய மனைவி. அந்தப் பெண்ணால் ஒரே நேரத்தில் ஒருவருடைய மனைவியாகவும் மற்றொருவருடைய காதலியாகவும் இருக்க முடிகிறது. இரு உறவுகளின் அனுகூலங்களையும் அனுபவிக்க ஆசைப்படுகிறாள். காதல் உறவைத் தைரியமாக வெளியில் சொல்ல முடியவில்லை; மிகவும் ரகசியமாகப் பேணுகிறாள். அதனால்தான் அவள் மிரட்டப்படுகிறாள்.

அவர்களால் கொலையை மறைக்க முடிந்ததே ஒழிய அதன் குற்ற உணர்விலிருந்து தப்பித்துக்கொள்ள இயலவில்லை. பேராசிரியர், இறந்த மனிதரின் வீட்டுக்குச் செல்கிறார். மிகவும் சாதாரண நிலையிலிருக்கும் குடும்பத்தின் வருமானத்துக்குரியவரை அவர்கள் விபத்தில் கொன்றிருக்கிறார்கள். மேல் தட்டின் விசாலமான, பிரம்மாண்ட மாளிகைகளும் கீழ்த் தட்டினர் வசிக்கும் குறுகலான நெருக்கமான குடியிருப்புப் பகுதிகளும் காட்டப்படுகின்றன. இப்படியான காட்சிகள் வழியாக ஸ்பெயினின் இருவேறு தரப்புகளையும் பார்வைக்குவைக்கிறார் இயக்குநர்.

விபத்துச் சம்பவம் நடந்ததற்கு மறு நாள் கல்லூரியில் மனக் குழப்பத்துடன் இருக்கும் பேராசிரியர் தன் மாணவி தேர்வில் தோற்றுப்போகக் காரணமாகிறார். ஒரு குற்றச் செயலை மறைத்ததால் தொடர்ந்துவரும் பல சம்பவங்கள் போர், காதல், காமம், திருமணம், சமூக அந்தஸ்து, மத நம்பிக்கை, மனசாட்சி போன்றவை பற்றிய தார்மிகக் கேள்விகளை எழுப்பும் வகையில் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படம் வாழ்வின் பல துல்லிய வண்ணங்களைக் கொண்ட கறுப்பு வெள்ளை ஓவியம் போலே படர்ந்திருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்த பின்னர் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ (1975), ‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’ (1976), ‘விடிஞ்சா கல்யாணம்’ (1986) போன்ற சில தமிழ்ப் படங்கள் மனதில் நிழலாடின.

மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ‘விடிஞ்சா கல்யாணம்’ (1986) படத்தில், ஒரு பாசமான தாயும் (சுஜாதா) மகளும் (ஜெயஸ்ரீ) சேர்ந்து இளைஞன் ஒருவனைக் கொன்றுவிடுகிறார்கள். ‘பாபநாசம்’ படத்தைப் போலவே மகளின் மானம் காக்கவே அந்தக் கொலை நிகழ்கிறது. யாரும் அறியாதவகையில் அந்தச் சடலத்தை ஒரு முகட்டிலிருந்து உருட்டிவிடுகிறார்கள். அதலபாதாளத்தில் விழும் அந்தச் சடலம் யார் கண்ணிலும் படாது என்று திரும்பிவிடுகிறார்கள். அது சிறையிலிருந்து தப்பி வந்திருக்கும் மரண தண்டனைக் கைதி (சத்யராஜ்) ஒருவர் கண்ணில்பட்டுவிடுகிறது.

vidinjajpg

அவர் நேரடியாக அந்தத் தாயும் மகளும் குடியிருக்கும் வீட்டுக்கு வந்து, அந்தக் கொலையை வெளியில் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியே தனது காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார். அந்தக் கொலையை விசாரிப்பதோ மகளை மணந்துகொள்ள இருக்கும் காதலன். இப்படி ஆர்வமூட்டும் பல முடிச்சுகள் தொடக்கத்திலேயே விழுந்துவிடுகின்றன. தாயும் மகளும் யாரைக் கொன்றார்கள், அந்தத் தூக்குத் தண்டனைக் கைதி யார், அவருக்கும் தாய், மகளுக்கும் என்ன தொடர்பு போன்றவற்றைத் தெளிபடுத்திச் செல்கிறது திரைக்கதை.

‘ஒரு கதையின் டைரி’, ‘பூவிழி வாசலிலே’ போன்ற திரில்லர் வகைப்படம்தான் இது. கொலையைச் சரியான செயல் என்று பார்வையாளர்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமானால் அதன் பின்னணியில் வலுவான உணர்வுபூர்வ காரணம் இருக்க வேண்டும். ஒரு கொலையை யார் செய்கிறார்கள், எதற்காகச் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதற்குப் பார்வையாளர்களின் ஆதரவு கிடைக்கும். கொலை என்பதைத் தீய செயலாகவும் குற்றச் செயலாகவும் பார்க்கும் நம் பார்வையாளர்கள் அதை நல்லவர்கள் செய்தால், நல்ல நோக்கத்துடன் செய்தால் நியாயம் என்று எடுத்துக்கொள்வார்கள். அதிலும் பெண்களின் மானத்தைக் காப்பாற்றச் செய்யப்படும் கொலைகள் பார்வையாளர்களால் கொண்டாடப்படும்.

சமூகத்தின் பார்வையில், ‘பூவிழி வாசலிலே’ படத்தில் வில்லன் செய்த கொலைக்கான காரணம் அநியாயமானது; ஆனால் ‘ஒரு கைதியின் டைரி’, ‘விடிஞ்சா கல்யாணம்’ போன்ற படங்களில் நாயகர்கள் செய்யும் கொலைக்கான காரணம் நியாயமானது எனவே, அது சமூகத்தின் பார்வையில் குற்றச்செயலாகப் பார்க்கப்படாது. ‘பாபநாச’த்தில் சுயம்புலிங்கத்துடைய குடும்பத்தின் பக்கம் ஒட்டுமொத்தப் பார்வையாளர்களும் நின்றதற்குக் காரணம் அதுதானே.

ஸ்பானிஷ் படத்தில் மணமானதற்குப் பின்னர் எந்தச் சஞ்சலமுமின்றிக் காதலனைச் சந்தித்துச் சரசமாடுகிறாள் நாயகி. ஆனால், ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தில் காதலனின் வேண்டுகோளை ஏற்று ஒருநாள் அவனுக்கு மனைவியாக இருக்கிறாள். அதுதான் சிக்கலாகிறது. இவ்வளவுக்கும் அவள் தமிழ்ப் பண்பாட்டைச் சிறிதுகூட மீறாமல் நடந்துகொள்கிறாள். ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில் தான் காதலித்த ரகசியத்தைக் கணவனுக்குத் தெரியாமல் காப்பாற்றும் பொருட்டு மிரட்டல்காரனுக்கு அடிபணிகிறாள். இது தமிழ்ச் சூழல்.

‘மயங்குகிறாள் ஒரு மாது’, ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ இரண்டையுமே எஸ்பி.முத்துராமன்தான் இயக்கினார். முன்னதன் கதை பஞ்சு அருணாசலம் பின்னதன் கதை புஷ்பா தங்கதுரை. இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே போன்ற சம்பவங்களால் ஆனவை. ஒருவனைக் காதலித்து மற்றொருவனைக் கரம்பிடித்த பெண் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள்தான் இந்தப் படங்கள். முதல் படத்தில் மிரட்டல்காரர் உண்டு. இரண்டாம் படத்தில் மிரட்டல்காரர் இல்லை. இரண்டு படங்களிலும் சுஜாதாதான் கதாநாயகி.

வாழ்வைப் புரிந்துகொண்ட இயக்குநர்கள் குற்றங்களை வெறும் குற்றங்களாகப் பார்க்காமல் அவற்றின் பின்னணியுடன் சேர்த்துப் புரிந்துகொள்ளச்செய்யும் வகையிலேயே படங்களை உருவாக்குகிறார்கள். ஒரு குற்றத்தில் தனிநபரின் பங்கு என்ன, சமூகத்தின் பங்கு என்ன என்பவற்றை எல்லாம் சுட்டிக்காட்டுகிறார்கள். வெறுமனே குற்றம், பழிவாங்கல், தண்டனை, மன்னிப்பு என்று முடிந்துவிட்டால் அது சராசரியான படமாக நின்றுவிடுகிறது. அதைத் தாண்டி ஏன் இந்தக் குற்றம் நிகழ்கிறது? ஏன் இது குற்றமாகப் பார்க்கப்படுகிறது? இதைத் தவிர்க்க முடியுமா, தடுக்க முடியுமா போன்ற பல சிந்தனைகளைப் பார்வையாளரிடம் உருவாக்கும் படங்கள் மேம்பட்டவையாக அமைந்துவிடுகின்றன.

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in

SCROLL FOR NEXT