மொழி தெரியாவிடினும் உலகம் முழுவதும் இந்திப் படங்களும் அதன் பாடல்களும் பெரிதும் ரசிக்கப்படுகின்றன. இதன் முக்கியக் காரணம், அவை வடிவம் பெறும் மும்பையின் பன்முகக் கலாச்சாரச் சங்கமமே என்பது மிகை அல்ல. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பிழைப்புக்காக அங்கு வந்து குடியேறிய பிற பகுதி மக்களின் மொழி, உடை, உணவு மட்டுமின்றி அவர்களின் பாரம்பரிய இசைப் பாடல்களும் அன்றாட வாழ்வில் அங்கே சங்கமித்தன.
அவற்றை இசைக் கலைஞர்களும் கவிஞர்களும் எடுத்தாண்டார்கள். இதனால் சாமானியர்களும் புரிந்துகொள்ளும் எளிய பாடல் வரிகள் திரையில் காட்சிகளாக விரிந்தன. அதன் காரணமாக அதன் ரசனை மொழி எல்லையை எளிதாகக் கடந்து சென்றது.
‘பாபி’ திரைப்படத்தின் வரலாறு காணாத வெற்றியின் சிறப்பு அம்சமாக இந்தக் கலாச்சார கலவை விளங்கியது. ‘பம்பாய்’ என்ற இன்றைய மும்பையைத் தங்களின் இன்னொரு தாயகமாகக் கருதும் கோவா மக்களின் வாழ்க்கையை மிகையின்றிப் படம்பிடித்துக் காட்டிய படமிது. இதில் அவர்களின் தனித்துவமான இசை மெட்டுக்களில் ஒன்று, அதற்கேற்ற பாடல் வரிகளுடன் படமாக்கப்பட்டுள்ளது.
‘பாபி’ படத்தின் மற்ற எல்லாப் பாடல்களையும் எழுதிய ஆனந்த் பக்ஷி இந்தப் பாடலை எழுதவில்லை. வித்தல்பாய் பட்டேல் என்பவர் எழுதிய ‘நா சாஹூம்சோனா சாந்தி, நா சாஹூம் ஹீரா மோதி’ என்று தொடங்கும் பாடல் ஒரு சிறந்த திரைப்பாடலாக மட்டுமின்றி கோவா மக்களின் வாழ்வியல் கோட்பாட்டை எடுத்துக்காட்டும் விதமாக இருப்பதைப் பாருங்கள்.
பொருள்.
தங்கமும் வெள்ளியும் வேண்டாம் எனக்கு
வைரமும் பவளமும் விரும்பவில்லை நான்
இவையெல்லாம் எனக்கு எந்தப் பயனும் தராது
பங்களா, தோட்டம் வேண்டாம் எனக்கு
குதிரையும் வண்டியும் கேட்கவில்லை நான்
இவையெல்லாம் பெயரளவுக்குத்தான் பெருமை
உள்ளத்தைத் தருகிறேன் பதிலுக்கு உன் அன்பு
உள்ளத்தை நீ எனக்குத் தா
ஹே ஹேஹே காதலில் பேரம் இல்லை ஐயா
‘காஜி’ ‘சாது’ பற்றி நான் ஒன்றும் அறியேன் ‘காபா’ ‘காசி’பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது
நான் காதல் தாகம் எடுத்த இளைஞன் மட்டுமே
என் கனவுகளின் ராணியே ஏற்படலாம் உனக்கு
காதலில் வீழ்ந்து உன்மத்தனான என்னால் பிணக்கு
தங்கமும் வெள்ளியும் வேண்டாம் எனக்கு
வைரமும் பவளமும் விரும்பவில்லை நான்
இதெல்லாம் எனக்கு எந்தப் பயனும் தராது.
உள்ளத்தைத் தருகிறேன் பதிலுக்கு உன் அன்பு
உள்ளத்தை நீ எனக்குத் தா
ஹே ஹேஹே காதலில் பேரம் இல்லை ஐயா.
இந்தியா முழுவதும் ஆங்கில ஆட்சிக்குள் வந்த பிறகும் போர்த்துக்கீசிய கட்டுப்பாட்டுக்குள் இருந்த கோவா பிரதேசம் இந்திய விடுதலைக்குப் பின்னரும் வெகு நாட்களாகத் தனித்தே இருந்தது. நேருவின் முயற்சியால் ஒரு இந்திய யூனியன் பிரதேசமாக்கப்பட்டு சமீபத்தில் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட கோவா பகுதியின் மொழி, இசை உணவுப் பழக்கங்களில் போர்த்துக்கீசிய கலாச்சாரப் பாதிப்புக்கள் அதிகம் உண்டு.
இந்தப் பாடலில் கோவா கார்னிவெல் என்று அழைக்கப்படும் வருடாந்திர விழாவில் பாடப்படும் அந்த மெட்டு அப்படியே தக்கவைக்கப்பட்டிருக்கிறது. கோவா இசையின் இன்னொரு மெட்டு ‘ஓ மாரியா ஓ மாரியா’ என்ற கமலின் பாடலில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மும்பையில் இன்றும் அதிகமாக வாழும் கோவானியர்கள் என்று பொதுவான பெயரில் அழைக்கப்படும் கோவா கிறிஸ்தவர்கள் பொன், பொருள், ஆடம்பரத்தைவிட மகிழ்ச்சியான அன்பு, காதல் ததும்பும் சராசரி வாழ்க்கையை விரும்புபவர்களாக விளங்குவது கவனிக்கத்தக்க ஒரு முக்கிய அம்சம்.