இந்து டாக்கீஸ்

நண்பனின் இழப்பைக் கடந்து வந்தேன்! - நடிகை ப்ரியா ஆனந்த் பேட்டி

முத்து

லையாளம், கன்னடம் என அக்கம் பக்கத்து மொழிகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்துவிட்டு ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்குத் திரும்பியிருக்கிறார் ப்ரியா ஆனந்த். அவரிடம் பேசியதிலிருந்து...

மலையாளம் , கன்னடப் படங்களில் இப்போதுதான் அறிமுகமாகி உள்ளீர்கள், ஏன்?

நிறைய தமிழ்ப் படங்களில் நாயகனுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய கதாபாத்திரமாகத்தான் நாயகி இருப்பாள். அப்படியே நிறையப் படங்களில் நடித்துவிட்டதால் கொஞ்சம் போரடிக்கத் தொடங்கியது. இந்தச் சமயத்தில் வேறொரு மொழியில் நடித்துவிட்டுவந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதனால்தான் மலையாளத்திலும் கன்னடத்திலும் நடித்தேன்.

நடிக்கும் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டுவிட்டீர்களா?

ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும், ஒவ்வொரு விஷயத்தைக் கற்றுக்கொண்டே இருந்தேன். எனக்கு வந்த கதைகளில் எது சிறந்ததோ, அதையே தேர்வு செய்து நடித்தேன். நான் திட்டமிட்டது வேறு, நடந்தது வேறு. அவை என் கையில் இல்லையே. படப்பிடிப்புக்குக் குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் நான் மட்டுமே போவேன். ஆகையால், படக்குழுவினர் எப்படி இருப்பார்கள் என்பதையும் பார்த்துக்கொள்வேன். நாயகனுடைய பெயரை மட்டும் வைத்துப் படங்களை ஒத்துக்கொள்வதில்லை. சரியாகப் போகாத படங்கள், கடினமான தருணங்கள் உள்ளிட்ட பல விஷயங்களைத் தாண்டியே இந்த அளவுக்கு வளர்ந்துள்ளேன். திரையுலகில் சில விஷயங்களை இன்னும் சரியாகக் கையாண்டிருக்கலாம். ஆனால், அதே விஷயங்கள் மறுபடியும் நடக்கும்போது சரியாகக் கையாள்வேன். நிறையத் தவறுகள் மூலமாகவே நிறையக் கற்றுக்கொள்ள முடியும்.

தனியாக வசிக்கிறீர்கள். உங்களது குடும்பத்தினர் பயப்படவில்லையா?

எனது குடும்பத்தினர் கொடுத்துள்ள மிகப் பெரிய பரிசு எனது சுதந்திரம்தான். அவர்கள் கொடுத்த சுதந்திரத்தால் மட்டுமே சென்னையில் தனியாக இருக்க முடிகிறது. வாழ்க்கையில் நடக்கும் சந்தோஷம், துக்கம் உள்ளிட்ட விஷயங்களையும் நானே அனுபவிக்கிறேன்.

உங்களது குடும்பத்தினர் கொடுத்த சுதந்திரத்தை, உங்களது குழந்தைக்கு அளிப்பீர்களா?

கண்டிப்பாக அளிக்க மாட்டேன். ஏனென்றால் என் அப்பா - அம்மா என்னை எப்படி இவ்வளவு சுதந்திரமாக வளர்த்தார்கள் எனத் தெரியவில்லை. நான் வளரும்போது உள்ள உலகம் தற்போது இல்லை. சிறுவயதில் வீட்டருகே இருக்கும் கடைக்குத் தனியாக மளிகைப் பொருட்கள் வாங்கச் செல்வேன். இந்தியாவுக்கு முதலில் வரும்போது சென்னை எனக்குப் புதியது தான். சிறுவயதில் அண்ணாநகர் வீடு, பள்ளி இரண்டையும் தவிர வேறெங்கும் போனதாக ஞாபகமே இல்லை. ஆனால், தற்போது பேப்பரில் வரும் செய்திகளை எல்லாம் பார்த்தால் பயமாக உள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் ‘ஒரு கட்டத்தில் நடிக்க வேண்டாம்’ என்று இருந்தேன் எனப் பேசினீர்களே. என்ன காரணம்?

இந்தியாவுக்கு வந்ததிலிருந்தே எனக்கு ஒரு நெருங்கிய தோழன் இருந்தான். அவன் எனது உடன்பிறவா தம்பி. திரையுலகில் நுழைந்தபோது எங்கேயாவது சென்றால் அவனோடுதான் செல்வேன். அவனோடுதான் நிறைய இடங்களுக்குச் சென்றுள்ளேன். ஒரு விபத்தில் அவன் இறந்துவிட்டான். திரையுலகில் நிறைய படங்கள் நடிக்கத் தொடங்கியபோது, அவன் நம்முடன் இல்லையே என நான் எண்ணவில்லை.

ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவன் நம்முடன் இல்லையே என்று எண்ணத் தொடங்கினேன். நம்முடனே இருந்த ஒருவரை இழப்பது என்பதை எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. குடும்பத்தினரும் என்னோடு இல்லாததால், நண்பனின் இழப்பால் திடீரென்று வாழ்க்கையில் ஒரு வெறுமை தெரியத் தொடங்கியது. சினிமாவில் தொடர்ச்சியாக ஒரு பாடல், சில காட்சிகளில் நடிக்காவிட்டால் மறந்துவிடுவார்கள் என்ற எண்ணமெல்லாம் இன்றி நண்பனின் இழப்பு மட்டுமே கண்முன் இருந்தது. அதனால் அப்படி எண்ணினேன்.

‘முத்துராமலிங்கம்’ படத்தின் விமர்சனத்தை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

கார்த்திக் சார் நடிப்பதாக இருந்ததால், அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு தொடங்கிய பிறகு அவர் அதில் நடிக்கவில்லை. ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானவுடன், அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என நினைப்பேன். பிடிக்கவில்லை என்பதால் ஒரு படத்தை விட்டுவிட்டுப் போய்விட முடியாது.

அதை நம்பி நிறைய தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அப்படத்தைப் பார்த்துக் கலாய்த்தவர்களைவிட, நாங்களே நிறைய கலாய்த்துள்ளோம். அதில் நடிக்கும்போது, இந்த வசனத்தை எப்படி சார் பேச முடியும் என்று நானே சண்டையிட்டுள்ளேன். என்னைப் பாதித்ததைவிட, தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பாதிப்புதான் அதிகம். அனைத்துத் திரையுலகினரின் வாழ்க்கையில், அனைத்துமே வெற்றிப் படங்கள் அல்ல. திரையுலகில் பல முன்னணி நடிகைகளின் முதல் படத்தைப் பார்க்கவே முடியாது. ஒரு கட்டத்துக்கு வளர்ந்தபிறகு அதை மறந்து சென்றுவிட வேண்டும்.

‘கூட்டத்தில் ஒருத்தன்’?

கதையை இயக்குநர் ஞானவேல் சார் சொன்னவுடன் மிகவும் பிடித்திருந்தது. உடனே ஒப்புக்கொண்டேன். இப்படத்தில் வரும் வசனங்கள், காட்சியமைப்புகள் அனைத்துமே மிகவும் யதார்த்தமாக இருக்கும். இந்தப் படத்துக்குப் பின் தமிழில் எனது கணக்கு மீண்டும் தொடங்கும்.

SCROLL FOR NEXT