உ
லக சினிமா ஆர்வம் கொண்டவர்கள், பல சிறந்த ஹாலிவுட் திரைப்படங்களைக் கடந்து வந்திருக்கலாம். அதில் நிச்சயம் ஒரு படமாவது, டேனியல் டே லூவிஸ் நடித்ததாக இருந்தால், அவர்கள் நல்ல ரசனையைப் பெற்றிருக்கிறார்கள் என்று அர்த்தம். ஆம், டேனியலின் சிறந்த நடிப்பு, பார்வையாளர்களின் மனதில் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வரக்கூடியது. உதாரணத்துக்கு, அவர் நடிப்பில் வெளிவந்த ‘மை லெஃப்ட் ஃபூட்’ என்ற ஒரு படம் போதும்.
1989-ம் ஆண்டு வெளியான ‘மை லெஃப்ட் ஃபூட்’ படத்தில், ‘அதிடாய்ட் செரிப்ரல் பால்ஸி’ எனும் நோயால் பாதிக்கப்பட்ட கிறிஸ்டி பிரவுன் கதாபாத்திரத்தில் டேனியல் நடித்திருப்பார். நடித்தார் என்று சொல்வதைவிட வாழ்ந்தார் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். காரணம், உண்மையிலேயே கிறிஸ்டி பிரவுன் என்ற ஐரிஷ் எழுத்தாளர், ஓவியருக்கு இத்தகைய நோய் இருந்தது. அவரின் இடது கால் தவிர, அவரது உடலில் வேறு எந்த உறுப்பும் வேலை செய்யாது. இடது காலைக்கொண்டே எழுதவும், வரையவும் செய்து பல சாதனைகளை நிகழ்த்தினார். தன்னுடைய வாழ்க்கையை ‘மை லெஃப்ட் ஃபூட்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதினார். அதை அடிப்படையாகக் கொண்டுதான் டேனியல் நடித்த அந்தப் படம் உருவாக்கப்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரத் திரைப்படத்தில், எந்த ஒரு நொடியிலும், கிறிஸ்டி பிரவுன் கதாபாத்திரத்தின் மீது பார்வையாளர்களுக்குப் பரிதாபம் ஏற்பட்டுவிடாதவாறு படத்தை நகர்த்தியிருப்பார்கள். கிறிஸ்டி பிரவுனாக டேனியல் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும், அவ்வளவு ‘பாசிட்டிவ்’ தன்மை இருக்கும். படம் முடிந்தவுடன், மனதில் குறை இல்லாதவரை, நமது உடலில் இருக்கும் குறைகள் பெரிதல்ல என்ற ஒரு எண்ணம் நமக்கு ஏற்படும். எந்தவொரு கஷ்டமான கட்டத்திலும் நம்மால், அன்பின் வழியைத் தேர்வுசெய்ய முடியும் என்ற நம்பிக்கையைத் தருவதாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. இந்தப் படம்தான், டேனியலுக்கு முதல் ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தது.
அந்தப் படத்திலிருந்து ‘மெத்தட் ஆக்டிங்’ என்பதற்குப் புதிய இலக்கணத்தை வகுத்தார் டேனியல். பிறகு 2007-ம் ஆண்டு வெளியான ‘தேர் வில் பி பிளட்’ படத்துக்காகவும், 2012-ம் ஆண்டு வெளியான ‘லிங்கன்’ படத்துக்காகவும் ஆஸ்கர் விருதுகளை வென்றார். ஹாலிவுட் வரலாற்றில், கதாநாயகன் பிரிவில் மூன்று முறை ஆஸ்கர் விருது வென்ற ஒரே நடிகர் இவர்தான். ஆஸ்கர் வென்றதால், இந்த 3 படங்கள் மட்டும்தான் இவரின் சிறந்த படங்கள் என்று நினைப்பீர்களேயானால், தயவுசெய்து அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளவும். ‘தி லாஸ்ட் ஆஃப் தி மொஹிகன்ஸ்’, ‘இன் தி நேம் ஆஃப் தி ஃபாதர்’, ‘கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க்’ என்று அவரின் சிறந்த படங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
சரி, அவர் வகுத்த அந்த ‘மெத்தட் ஆக்டிங்’ இலக்கணம் என்ன தெரியுமா? அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்வதுதான். 2012-ம் ஆண்டு ஆஸ்கர் வென்றதும் தன் உரையில், தன்னுடைய நடிப்பின் இலக்கணத்தை அவரே இப்படிக் குறிப்பிட்டார்: “நான் ஒரு கதாபாத்திரத்தைச் சிறு சிறு துண்டுகளாக அணுகி, பிறகு அவற்றை மொத்தமாக இணைத்துப் பார்ப்பதில்லை. அந்தக் கதாபாத்திரமாகவே நான் மாறும் நிலை மிகவும் மெதுவாக நடக்கும். அதற்கு நீண்ட காலம் ஆகும். என்னை நான் அந்தக் கதாபாத்திரமாகவே உணரநினைக்கும்போது, அதிர்ஷ்டமிருந்தால் அந்தக் கதாபாத்திரத்தின் குரல் எனக்குக் கேட்கும்”.
அவர் சொல்ல வருவது இதுதான்: “கதாபாத்திரமாக ஆள்மாறாட்டம் செய்யாதே. கதாபாத்திரமாக வாழ்!” படப்பிடிப்பின் இடைவேளையிலும், ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்தவுடனும் அவர் கிறிஸ்டி பிரவுனாகவோ, ஆபிரகாம் லிங்கனாகவோதான் தன்னைக் கருதிக்கொள்கிறார். ‘லிங்கன்’ படத்தில் நடித்தபோது, தனது குரல், நடை அனைத்தையும் மாற்றி, வீட்டிலும் ஆபிரகாம் லிங்கனாகவே வலம் வந்ததாகத் தகவல்கள் இருக்கின்றன.
1971-ம் ஆண்டு 14 வயதில் தொடங்கியது டேனியலின் நடிப்புப் பயணம். இன்று 60 வயது. சுமார் 46 வருடப் பயணத்தில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 21தான். காரணம், ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் அவர் எடுத்துக்கொண்ட இடைவெளி. காரணம், முன்பு சொன்னதுபோல, ‘அந்தக் கதாபாத்திரமாகவே தன்னை உணர்வதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலம்!’
பொதுவெளியிலும், ஊடகங்களிலும் சிக்காமல் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் ஆகியவற்றைப் பாதுகாத்துவரும் டேனியல் பற்றி இப்போது எதற்கு இத்தனை சிலாகிப்பு என்கிறீர்களா? ‘டேனியல் டே லூவிஸ், நடிப்புக்கு விடைகொடுக்கிறார்!’ – இதுதான் கடந்த 2 வாரங்களாக ஹாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படும் செய்தி. இதற்கு முன்பும் இதுபோல நடிப்புக்கு முழுக்குப் போடுவதாக 1996-ம் ஆண்டு அறிவித்திருந்தார். யார் கண்ணிலும் படாமல், தலைமறைவானார். காலணிகள் செய்யக் கற்றுக்கொண்டார். ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு வந்தார். ‘கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க்’ படத்தில் நடித்து உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இப்போது அவரிடமிருந்து வந்திருக்கும் அறிவிப்பும்கூட, ஒரு சின்ன இடைவேளையாக இருக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசை.