இந்து டாக்கீஸ்

இயக்குநரின் குரல்: இது அடுத்த கட்டம் - இயக்குநர் பரணி பேட்டி

ஆர்.சி.ஜெயந்தன்

விஜயகாந்த், சூரியா இணைந்து நடித்த ‘பெரியண்ணா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரணி. அந்தப் படத்தில் தொடங்கி 50-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்த அவர், தனது மெலடி பாடல்களுக்காகக் கொண்டாடப் பட்டவர். ஒரு இடைவெளிக்குப் பிறகு ‘ஒண்டிக்கட்ட’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவரைச் சந்தித்தபோது….

‘பார்வை ஒன்றே போதுமே’ படத்தில் இடம்பெற்ற ‘திருடிய இதயத்தைத் திரும்பக்கொடுத்துவிடு காதலா’ பாடல் உட்பட நூற்றுக்கணக்கான மெலடி பாடல்களைக் கொடுத்துவிட்டுத் திடீரென்று திரையிலிருந்து காணாமல் போக என்ன காரணம்?

நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். பிரபலமான இயக்குநர்கள், புதுமுக இயக்குநர்கள் என்று இரண்டு தரப்பு இயக்குநர்களுக்கும் இசையமைத்திருக்கிறேன். என்னளவில் இயக்குநர் எதிர்பார்க்கும் இசையைவிட என் மனசாட்சியின்படி கதைக்கான இசையைக் கொடுப்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறேன். எவ்வளவு சிறந்த இசையைக் கொடுத்தாலும் பாடலுக்குக் கிடைக்கும் காட்சி வடிவமும் அதன் வெற்றியைத் தீர்மானிக்கிறது. நான் மிகவும் லயித்து இசையமைத்த பல பாடல்கள் மிக மோசமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. இதை நான் குறையாகச் சொல்லவில்லை.

சினிமா என்பது கூட்டு முயற்சி. நிதிப் பிரச்சினை தலைதூக்கும்போது பாடல் காட்சிகளில்தான் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கைவைப்பார்கள். நான் இசையமைத்த பல படங்களின் பாடல்களைக் கடைசி கட்ட நிதிப் பிரச்சினைகளால் சுருட்டித் தள்ளியிருக்கிறார்கள். இத்தனைக்கும் தயாரிப்பாளர் தரும் ஊதியம் பல நேரங்களில் ஒலிப்பதிவு, லைவ் வாத்தியங்கள் பயன்படுத்த போதாமல் போய்விடும்போது கைப்பணத்தைப்போட்டு தரமான தொழில்நுட்பத்தில் எனது இசையைத் தந்திருக்கிறேன்.

இளையராஜாவின் வாய்ப்புகள் அனைத்தும் பரணிக்குச் செல்கின்றன என்று அப்போது உங்களைக் குறித்து பேசப்பட்டதே?

இசையுலகில் நான் குருவாகக் கருதுவது இரண்டு பேரை. முதலில் என் தாயார் சின்னம்மாள். மிக நன்றாகப் பாடுவார். சிறு வயதில் கடைக்குப் போயிட்டு வாப்பாண்ணு அனுப்புவாங்க. கடைக்குப் போகணும்ன்னா எனக்கு ஒரு பாட்டுப் பாடுங்கன்னு சொல்வேன். சின்னப் பசங்க கடைக்குப் போக மிட்டாய்க்குக் காசு கேட்பாங்க. நான் எனது அம்மாவிடம் அவங்க பாட்டைக் கூலியா கேட்டு அவங்கப் பாடி முடிச்சதும் அவங்களுக்கு அழுத்தி ஒரு முத்தம் கொடுத்துட்டுக் கிளம்புவேன். பாட்டு அப்படியிருக்கும். நாள் முழுக்க அவங்க பாட்டு மனதில் கேட்டுக்கொண்டே இருக்கும்.

இரண்டாவது குரு இளையராஜா. ராஜாவின் பாட்டு என்னை மட்டுமில்ல; பலரை சினிமாவுக்கு அழைத்து வந்தது. அதில் நானும் ஒருவன். ஒரே நேரத்தில் பதினைந்து படங்களுக்கு மேல் ஒப்பந்தமாகியிருந்த நேரம் அது. அப்போதான் ராஜாவின் வாய்ப்புகள் எல்லாம் எனக்கு வர்றதா எழுதினாங்க. அதற்கு அப்போதே நான் விளக்கமளித்திருக்கிறேன். இளையராஜாவின் பாதிப்பு என்னிடம் இருக்கலாம். ஆனால், பரணியின் பாட்டு என்று சொல்லும் விதமாக என் மெலடிகளைத் தனித்துவத்துடன் அமைத்திருக்கிறேன். என் பெயர் எழுதப்பட்ட கோதுமை மணிகளை மட்டுமே கடவுள் எனக்கு அளித்துவருகிறார். அதேபோல் இன்னொன்றும் எனக்குத் தோன்றுகிறது. இயற்கை என்னிடம் எந்தத் திறமையைக் கொடுத்திருக்கிறதோ அதை இந்தக் காற்றுவெளி வாங்கிக்கொள்ளாமல் என்னைத் திரும்ப அனுப்பாது.

இசையமைப்பாளர்கள் கதாநாயகர்களாக வெற்றிபெற்றுவரும் காலகட்டத்தில் நீங்கள் இயக்கத்தைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

இது எனது வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்று நினைக்கிறேன். நடிப்பின் மீது எனக்கு ஈடுபாடு கிடையாது. ஆனால், திரையில் இயல்பாக நடிப்பவர்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு. ‘ஸ்டைல்’படத்துக்கு இசையமைத்தபோது ராகவா லாரன்ஸ் ‘ஒரு பாடலுக்கு என்னோடு வந்து ஆடுங்கள்’ என்றார் நான் மறுத்துவிட்டேன். இயக்கம் என்பது எனக்கு அந்நியமானது அல்ல. என்னை அறிமுகப்படுத்திய எஸ்.ஏ.சந்திரசேகரன் சாரின் படங்கள் தொடங்கி நான் பணியாற்றிய பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்றுவிடுவேன். வெளியூரில் நடந்தால் அங்கே சென்று படக்குழுவுடன் நாள் கணக்கில் தங்கிவிடுவேன். இந்தப் பழக்கத்துக்குக் காரணம் இசைக்காக நான் சென்னைக்கு வந்தாலும் உதவி இயக்குநராக சினிமாவில் வாழ்க்கையைத் தொடங்கியவன் என்பதும்தான். இப்போது இயக்குநராகக் காரணம் சிறு வயதிலிருந்து என்னைத் துரத்திக்கொண்டிருந்த இந்தப் படத்தின் கதை.

‘ஒண்டிக்கட்ட’ என்ற படத்தின் தலைப்பில் மண்வாசனையையும் தனிமையும் தெரிகின்றன…

நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது தஞ்சை மாவட்டத்தில் எனது சொந்த கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவம் என்னைப் பாதித்தது. அதைப் படமாக்க வேண்டும் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டேன். இதுவெறும் படமாக இருக்காது. ‘முள்ளும் மலரும்’ ‘உதிரிப்பூக்கள்’ ‘அழகி’ போல உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கும். இசை கதையின் முக்கிய அங்கமாக இருக்கும். கதை நடத்த ஊர், கதாபாத்திரங்கள் வாழ்ந்த சுற்றுவட்டாரங்களிலேயே படமாக்கியிருக்கிறேன்.

என்ன கதை? சோகத்தை அதிகமாகப் பிழிந்திருக்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை; இது அழுகாச்சி காவியமல்ல; உணர்வுகளால் கோக்கப்பட்ட எளிய மனிதர்களின் மண்ணும் மனமும் இணைந்த யதார்த்தச் சித்திரம். எவ்வளவு உறவுகள், நண்பர்கள் இருந்தாலும் நமது உணர்வுகள் என்பவை நமக்கேயானவை. நமது பசி, நமது வலி, மனதுக்குள் அழும் வெளியே தெரியாத நமது கண்ணீர் என நமது உணர்வுகளில் நாம் எல்லோருமே ஒண்டிக்கட்டைகள்தான்.‘தையமுத்து’, ‘நல்லதம்பி’, ‘பஞ்சவர்ணம் ‘பாட்டியம்மா’, ஆகிய நான்கு கதாபாத்திரங்கள் இந்தக் கதையின் உயிர் நாடிகள். படத்தின் இறுதியில் இந்த நான்கு கதாபாத்திரங்களுமே தனித்தனியே போய்விடுவார்கள். அது பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கும். ‘முல்லை’, ‘கோதண்டம்’ இருவரும் கவுண்டமணி – செந்தில் போல கதையுடன் இணைந்து மண்ணின் நகைச்சுவையை அளித்திருக்கிறார்கள்.

- பரணி

உங்கள் நட்சத்திரங்கள்?

விக்ரம்ஜெகதீஷ் – நேகா இருவரும் கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கிறார்கள். இருவருமே பல படங்களில் நடித்திருப்பவர்கள். இவர்களோடு கலைராணி, சென்ராயன் என பல திறமையான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளரும் இந்தக் கதையில் ஒரு நட்சத்திரம்போல்தான். ஆலிவர் டெனி தஞ்சையை யதார்த்தமாகப் படம்பிடித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT